அந்த இனிமையான பொழுதுகள்
பத்து வயதுச் சீமாட்டி தந்தை தாய்க்கு
செல்லப் பெண் அவள்!
தாயின் அரவனைப்பில் தாயின் மேல் கால்
போட்டு கண் விழிப்பாள் விடியற்காலையில்...
தமக்கைகளுடன் சிறுசிறு சீண்டல்கள்
தமையனுடன் ஓடிப்பிடித்து விளையாட்டு....
சலுகையுடன் தந்தையின் தோளில்
தலை சாய்ப்பதுவும்....
தாயின் அன்பான அதட்டலில் தந்தையின்
விரல்பற்றி பள்ளிக்கு விரைவதுவும்!
மாலை பொழுது படிப்பும் விளையாட்டும்
களைகட்டும் வீடு அது!
ஓடுவது அல்லாது நடப்பது அவள்
அறிந்திராத கலையது....
சிரிப்பது அல்லாது முகச்சுனக்கம் அவள்
அகராதியில் அல்லாத மொழியது!
பொன் வண்ணத்தில் துள்ளிக் குதிக்கும்
அவளின் ஆசைக் கன்று!!!
மா பலா வாழை கொய்யா என
கனிகளுக்கு பஞ்சமில்லாத
அவள் வீட்டுத்தோட்டம் தந்தையின்
கைங்கர்யத்தில் உருவானது!
அவள் வீட்டு ஊஞ்சள் எப்பொழுதும்
களிப்பை அள்ளித் தெளிப்பது!
பாக்குமர மட்டையில் வண்டிஓட்டி
துள்ளித் திரிந்த காலமது!
அன்புக்கு இனிய தோழிகள்
சேர்ந்த கூட்டமது!
என்றும் மறக்க இயலாதது அந்த
இனிமையான பொழுதுகள்!
இன்றும் என்னை துயிலுற செய்வது
இந்த நினைவுகள் தரும் இனிமையே!
நேற்றைய உண்மை இன்றைய
நினைவுகள்தான் ஆயினும்....
மனதிற்கு இனிமையான நினைவது
என்றும் என்னில் பொதிந்தவை...
அந்த இனிமையான பொழுதுகள்!!!