முயற்சி செய்
கூடு திறந்து
வெளியில் விட்டும்
காடு செல்லத் தயங்கும்
சர்க்கஸ் புலி ஒன்று
காப்பகத்தின் வாசலிலே
பாய் போட்டுப் படுக்கிறது!
கட்டவிழ்த்து விட்ட போதும்
மேய்ச்சலுக்கு
கூச்சப்பட்டு
நாட்டுப் பசு ஒன்று
பண்ணையாரின் திண்ணையிலே
தவிடு கேட்டு
தவிக்கிறது!
எச்சில் காற்றில்
வித்தை செய்து
விரல்களால்
மந்திரிக்கப்பட்ட
புல்லாங்குழல் ஒன்று
வென்டிலேட்டர்
சுவாசம் கேட்டு
குற்றுயிராய் கிடக்கிறது
வெளியில் சென்று
விளையாட மறுக்கும்
செல்லப் பிள்ளை ஒன்று
கணினியில் விளையாட
அம்மாவிடம் அடம் பிடிக்கிறது
உரக்கச் சொல்லுங்கள்
தானாகக் கிடைப்பது
போதை
தான் தேடித் கிடைப்பதுதான்
வாழ்கை
இத்தனை
காலமும் நீ சிறைக்குள் இருந்தாய்
மருந்தின் கசப்புதான்
போய் வா என்று
வெண்குருதியை
போருக்கு அனுப்பும்
காகங்களுக்கு
கற்களால் நிரப்ப
தாகம்தான்
பாடம் நடத்தியது
பாம்பின் தோலை
உரித்தெடுத்த
வலிகள் தான்
புத்தாடையும்
பரிசளித்தது
மடி கொடுக்க
மண்ணிடம் மன்றாடி
ஒவ்வொரு காலாக
வேர்கள் ஊன்றி
விதையெனும் சிறைக்குள்
செடியாக முளைத்து
வலிகளைத் தாங்கி
சில்லென்ற மழைத் துளியின்
ஒற்றைத் தொடுகையில்
ஜாமீன் கிடைத்து
இரு இலைகளை சிறகாக்கி
வெளியே வருகிறது - ஒரு
“எதிர் கால விருட்சம்”
சொல்லிக் கொடுங்கள்
வலிகள் நிறைந்ததுதான் வாழ்கை
காப்பகத்தில்
வேலை கேட்ட
அந்தப் புலி
இனி
காட்டுக்குள்
வேட்டையாடட்டும்
இயற்கை காற்றில்
சுவாசம் செய்த
புல்லாங்குழல் - அது
விரும்பிய
கீதத்தை இசைக்கட்டும்
இனிமேல்
அந்தப் பிள்ளை
அந்தி நேரத்து
உயிர் காற்றை
அதன்
விளையாடும்
மைதானத்தில்
சுவாசிக்கட்டும்