பேராசை அக்கப்போர் பேரழிவாக்கிடும் போர் கவிஞர் இரா இரவி
பேராசை அக்கப்போர்! பேரழிவாக்கிடும் போர்!!
கவிஞர் இரா. இரவி!
காரணம் எதுவாயினும் போர் தொடுப்பது
காட்டுமிராண்டித்தனம் கணினியுகத்திற்கு அழகல்ல!
மனிதாபிமானமற்ற செயல் மடத்தனமானது போர்
மண்ணில் விலைமதிப்பற்றது மனித உயிரகள்!
போரால் உயிர்கள் அழிவது மடமையின் உச்சம்
போரால் உடைமைகளும் அழிந்தது இல்லை மிச்சம்
பேசித் தீர்க்க வேண்டும் எந்தப் பிரச்சனையும்
பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைப்பது நிச்சயம்
போரின் அழிவுகள் தந்தது பல பாடம் அறிக
போர் என்ற சொல்லே அகற்றப்பட வேண்டும்
எந்தப்பக்கம் இறந்தாலும் இறப்பு இறப்பு தான்
ஏன்? எதற்கு? என சிந்தித்தால் வராது மடப்போர்
தனிமனித விருப்பு வெறுப்புகளால் தான் போர்
தரணியில் இனி போரே இல்லை என்றாக வேண்டும்
குழு சேர்வது கூட்டி சேர்ந்து தாக்குவது
கேடு கெட்ட செயல் என்பதை உணர்ந்திடுக
வல்லரசை விட நல்லரசாவதே நல்லது
வல்லவனாவதை விட நல்லவனாவதே நல்லது
குழந்தைகள் வடிக்கும் கண்ணீர் பாருங்கள்
கல்நெஞ்சக்காரர்களே உடன் திருந்திடுங்கள்
இப்போது நடந்ததே மனித இனத்தின் கடைசிப் போராகட்டும்
இனி உலகில் எங்கும் போரில்லை என்றாகட்டும்
ஒருவருக்கு ஒருவர் உதவுவதில் போட்டி இருக்கட்டும்
ஒருவருக்கு ஒருவர் தாக்குவதில் போட்டி மடமையாகும்!