திருமண அழகன்

திருமண அழகன் (கல்யாண சுந்தரம்) , பார்ப்பதற்கு மிகவும் சுமாராக நன்றாக கறுகறுன்னு துருதுருன்னு களையாக லட்சணமாக, சில உண்மை பற்கள், சில பொய் பற்கள் தெரிய சிரித்த வண்ணம் , இடுங்கி இருக்கும் சிறிய கண்களை பெரிதாக திறந்த வண்ணம், மின்னும் முத்திய தேங்காய் போன்ற கன்னத்துடன், தலையில் வழவழப்பான கொஞ்சம் வழுக்கையுடன், அதன் சில முடி நண்பர்களும் , முடியாமல் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போல இருக்கும் ஒரு அற்புதமான பொலிவுடன், அவ்வளவு எழிலுடன் இருப்பான்.
திருமண அழகன் 18 வயது வந்த உடனயே காதல் செய்யாமலேயே நேரடியாக கல்யாணம் செய்ய மிகவும் ஆசை பட்டான். (ஆசை படுவதற்கு காசா, பணமா).
ஆனால் அவன் அப்போது கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்ததாலும், அவனுடைய அப்பா அப்போது தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாலும் (முதல் மனைவியின் தங்ககையைத் தான், மனைவி சிபாரிசு செய்ததன் பேரில்) திருமண சுந்தரம் அவனுடைய கல்யாணப் பேச்சை ஆணித்தரமாக முன்வைக்க முடியவில்லை. அப்போது அவன் அம்மாவிடம் புலம்பியது இதுதான் " அம்மா, உன் தங்கை என்னை விட 10 வயது சிறியவளாக இருந்திருந்தால் நானே அவளை பணமுடிப்பின்றி மணமுடித்திருப்பேன். ஆனால் என்ன செய்ய, அவள் என்னை விட 16 வயது பெரியவள். போகட்டும், எனக்கு நல்ல பொண்ணு ஒருத்தி கிடைக்காமலா போய் விடுவாள். " அதற்கு அவன் அம்மா" டேய், ஏன்டா ஏடாகூடமாக பேசறே. அவள் உன்னுடைய சித்தி, உனக்கு அம்மா மாதிரி. இனிமேல் இப்படி எல்லாம் அச்சிபிச்சித் தனமாக பேசாதே" என்ற போதுதான் நம் அழகனுக்கு சுருக்கென்று கொஞ்சம் உறைத்தது
திருமண சுந்தரத்தின் அப்பா " ஏன்டா இவ்வளவு சீக்கிரம் கல்யாண ஆசை உனக்கு? படித்து முடித்து ஒரு உத்தியோகம் இல்லாமல் எந்த மாமனார் உனக்கு பொண்ணு தருவான்? "
" அப்பா, என்னுடைய அருமை நண்பன் Black God ( கருப்பு சாமி), என்னை விட ஒரு வயசு சிறியவன், அவனுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து, அடுத்த மாதம் அவன் மனைவிக்கு பிரசவத்திற்கு தேதி கொடுத்திருக்கிறார்கள். " என்று திருமண சுந்தரம் அவனுக்கு அவனே வக்காலத்து வாங்கிய போது அவன் அப்பா " உன் நண்பனை போலீஸ் கைது செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே சாந்தி முகூர்த்தம் பண்ணி விட்டு வயது 21 ஆவதற்கு முன்னாடியே கல்யாணம் செய்துவிட்டான். உனக்கு அந்த மாதிரி பிரச்சனை எதுவும் இல்லை தானே? என்று சத்தம் போட்ட பின் திருமண அழகன்" ஏதேது, உங்கள் பேச்சை கேட்டா எனக்கு கல்யாணம் நடக்க இன்னும் ஆஆஆஆஆஆயிரம் நாளுக்கு மேல் ஆகும் போலிருக்கிறது".
அவன் அப்பா" இதில் என்னடா சந்தேகம், நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணியதில் உனக்கு ஏதாவது மன வருத்தமா?" என்று கேட்டபோது " ஆமாம் பா, நிச்சயமாக. ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உங்களுக்கு. இப்போது இன்னும் எத்தனை புதுப்பிள்ளைகள் உருவாகுமோ,தெரியவில்லை." என்றபோது,
அவன் அப்பா உணர்ச்சி வசப்பட்டு . " உன்னைப் போல ஒரு பிள்ளையை பெத்து நான் படும் அவஸ்தை போதாதா? இனி நான் எவ்வளவு கல்யாணம் செய்து கொண்டாலும் இனி எனக்கு பிள்ளைகள் வேண்டாம். எனக்கு ரெண்டாவது மனைவியா வந்திருக்கும் உன் சித்திக்கு இனம் புரியாத ஒரு வியாதி. அவள் இன்னும் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ்வாள் என்பது கூட தெரியாது. " என்று புலம்பியதை கேட்ட
திருமண அழகன் திடுக்கிட்டு போய் " அப்பா இனிமேல் இப்படியெல்லாம் உங்களிடம் பேசவே மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். " என்றான்.

இந்த திருமண அழகன் என்ற கல்யாண சுந்தரம் தான் இந்நாளில் பல அனாதை பெண்களுக்கு பொருளுதவி செய்து அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள மிகவும் உதவி வருகிறார். இவர் பட்டம் முடித்து சட்டம் படித்து திட்டம் போட்டு வழக்கறிஞர்கள் வட்டம் அமைத்து அதன் தலைவராக இருந்து கூடவே கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வியாபாரமும் செய்து, நல்ல லாபம் சம்பாதித்து அவர் ஊரில் நல்ல பெயர் கொண்ட முக்கிய பிரமுகராக இருக்கிறார்.
(இவரைப்பற்றி ஒரு விசித்திரமான தகவல், இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை)

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (9-Mar-22, 5:15 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : thirumana azhakan
பார்வை : 103

மேலே