பப்பு பாடல்-5

இன்னும் ரெண்டு நாளில்ல
கண்ணோரம் நீரோடி
பெத்தவளின் பேர் சொல்லும்
பூர்ணலட்சு பேரன்டி
இன்னொருவன் ஈடில்ல
மன்னவனின் எதிர் நில்ல
காலமதும் பொய்யல்ல
கண்ணே நீயும் மெய்யுறங்கு

ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ

பொன்னுதிரும் பூமியிலே
நீ உறங்கும் இந்நேரம்
கை வீசி விளையாடு
கண்விழிக்கும் அந்நேரம்
வானமெங்கும் கொண்டாட்டம்
கண்ணனவன் தேரோட்டம்
வானம் மழை தூவட்டும்
கோல மயில் ஆடட்டும்

ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ

காதோடு சேராது
கதை பேசும் வரலாறு
நீதியொன்றை நீயெழுது
நித்தம் உந்தன் பேரோடு
சந்திரனும் சீண்டாத
செங்கதிரோன் வெய்யிலடி
சுட்டெரிக்கும் சொற்களெல்லாம்
உன் செவ்வாயில் உள்ளதடி

ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ

பட்டபாடு நான் மறந்து
பாய் விரிச்சேன் மண்ணோடு
கண்ணுறக்கம் காணாம
காலமெல்லாம் வீணாச்சு
கற்பனையில் பொய் தீட்டி
ஒப்பனைக்கு மை பூசி
உன்னப்பனவன் போனாண்டி
மின்மினிகள் மீதேறி!

ஆராரோ ஆரிராரோ செல்லச்சிட்டே ஆராரோ
அப்பா தொட்டில் தொட்டு ஆட்டுகிறேன்
கண்ணுறக்கம் வாராதோ!...

எழுதியவர் : பப்பு பாடல்கள் (10-Mar-22, 12:58 am)
சேர்த்தது : Pappu Padalgal
பார்வை : 22

மேலே