தந்தை நலத்தை மகனுரைக்கும் – நான்மணிக்கடிகை 69

இன்னிசை வெண்பா

மகனுரைக்குந் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்
1புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம் உரைத்து விடும் 69

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

புதல்வன் தன் தந்தையின் நன்மையை தனது நல்லியல்பினாற் பிறர்க்கு அறிவிப்பான்;

ஒருவனது முகம் நெஞ்சினுள் உள்ள விருப்பத்தை பிறர்க்குத் தனது குறிப்பினால் அறிவிக்கும்;

அகன்ற நீரால் விளையும் வயலின் இயல்பை அந் நிலத்துக்குரியான் அறிவிப்பான்;

உலகத்தாரியல்பை மழையின் நிலை அறிவித்து விடும்.

கருத்து:

தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பினால் அறிவிப்பான்;
ஒருவனது நெஞ்சிலுள்ள விருப்பத்தை அவன் முகக் குறிப்பே அறிவித்துவிடும்;
வயலின் தன்மையை நிலக்கிழவன் அறிவித்து விடுவான்;
நிலத்து மக்கள் இயல்பை அந்நிலத்துப் பெய்யு மழையின் நிலை அறிவித்துவிடும்.

விளக்கவுரை:

நிலக்கிழவன் அதன்கண் நாடோறுஞ் சென்று பார்ப்பவனாதலால், ‘புக்கான்' எனப்பட்டான்.

நிலத்தியல்பு - நிலத்து மக்களின் இயல்பு.
‘பிலத்தியல்பு' என்ற பாடத்துக்குப் பெரிய ஆழமுள்ள மடுவென்க.

நிலத்தியல்பு - மக்கள் நல்லோர் தீயோர் என்பது.

மகனுரைக்குந் தந்தை நலத்தை - பழியின்மை மக்களாற் காண்க என்றனர் கீழும்.

நல்லோர் - பொருட்டே மழை பெய்யுமாதலின் வான முரைத்துவிடும் எனப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-22, 1:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

மேலே