இன்சொலினும் நல்கூர்தல் ஓஓ கொடிது - நீதிநெறி விளக்கம் 68

இன்னிசை வெண்பா

ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிதம்ம - நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்(று)
ஆஆ இவரென்செய் வார். 68

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தாம் ஒருவர்க்குக் பொருள் கொடுத்து உதவி செய்ய முடியாது என்றாலும் இனிய சொற்களைக் கூறுவதிலும் வறுமையடைவது மிகவும் கொடுமையாகும்.

இனிய சொற்கள் பேசமுடியாத நாவைச் சிதைத்து வினைப்பாவம் ஆகிய கம்மாளனால் வாய்ப்பூட்டும் போடப்பட்டால் இவர்கள் ஐயோ! என்ன செய்வார்கள்? என்று சிவப்பிரகாச சுவாமிகள் அறிவுறுத்துகிறார்.

விளக்கம்:

ஓஓ, ஆஆ, அம்ம: இவை இரக்கப்பொருளைத் தரும் சொற்கள். ஓஓ, ஆஆ என்ற இரண்டு நெடில்கள் மாச்சீராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீவினை கம்மியனாக உருவகிக்கப்பட்டது. கம் - தொழில்.

பாவம் வந்து வாயைப் பூட்டிவிட்டது. அதனால் அவர் வாய் திறந்து இனிய சொற்கூறுவதும் அரிதாயிற்று எனப் புகழ்வது போல இகழ்ந்தனர்.

கருத்து:

ஒருவர்க்கு ஒன்று ஈயத்திறனில்லாது போயினும், இன்சொல்லேனும் சொல்லாதொழியின் அது பெரும் தீவினையாய் முடியும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-22, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே