கருகிய மொட்டு
பருவம் வந்த போதுதானே
தாவணி போட்டா - சின்னப்பொண்ணு
தாவணி போட்டா.
பார்வையாலே எல்லோரையும்
தாவி அணை போட்டா - மனசுல
தாவி அணை போட்டா.
நெலபடியில நின்னுகிட்டு
நெலாவின பார்த்தா - தன்
நெனப்பின மறந்தா...
குனிஞ்ச தல நிமிராம
கோலத்த போட்டா - கட்ட வெரலால
கோலத்த போட்டா
அவ நெஞ்சிலுள்ள ஏக்கத்தின
கேட்பது ஆரு? - அவ
வயதோ பதினாறு!
தெனம் தெனம் வந்து வந்து
பொண்ணு பாத்தாங்க - இவள
பொண்ணு பாத்தாங்க
வந்தவங்க
பஜ்ஜி சொஜ்ஜினு
தின்னு பாத்தாங்க - நல்லா
தின்னு பாத்தாங்க
பல்ல பாத்தாங்க - அவ
கண்ண பாத்தாங்க
கால் மொடமான்னு
நடக்க சொல்லி
நடையை பாத்தாங்க
ஊமையான்னு பாடசொல்லி
கொரலையும் கேட்டாங்க
இத்தனையும் பாத்துபுட்டு
என்ன கேட்டாங்க? - அவங்க
என்ன கேட்டாங்க ?
சீர் செனத்தியின்னு
காரு நெலம் வீடு
கேட்டாங்க - ரொக்கமா
பணமும் கேட்டாங்க.
ஒருத்திய மட்டும்
கர சேத்திட்டா - பின்னால
அஞ்சாறு நிக்குதே
என்ன செய்வாங்க? - பாவம்
என்ன செய்வாங்க?
மொட்டு விரிஞ்ச பின்னதானே
பூ சிரிக்குது - நல்லா
பூத்து குலுங்குது.
இங்கே
மொட்டே கருகி போச்சுதே
என்ன செய்யலாம்?
வெடய தேடித்தேடி
அவ வாழ்க்க பெரும்
கேள்விக்குறியாச்சுதே?