சாருலதா 1

" லதா..வாடா...சீக்கிரம் எண்ணெய் தேச்சி குளி. டைம் ஆயிடிச்சு. சாமி கும்பிடனும் ". பரபரத்தாள் சாருலதா.
"ஹோ..ரொம்ப போர்மா.எவ்ளோ நீள முடி. இதுல எண்ணெய வச்சி...தேச்சி...குளிச்சி...அப்புறமா அத காயவைக்கறதுக்குள்ள
அப்பப்பா...முடியாதப்பா. அம்மா...அம்மா..ப்ளீஸ்மா என்னை விட்டுடேன்" என்று கொஞ்சினாள் லதா.
"என் செல்லமில்லே...என் புஜ்ஜி இல்ல. உனக்கு புடிச்ச இடியாப்பம் பால்பாயாசம் எல்லாம் செஞ்சி வெச்சிருக்கேன்.
அடம்பிடிக்காம சீக்கிரம் குளிச்சிட்டு வாடா."
அவளை பின்னாலிருந்து கட்டிக்கொண்ட லதா "அம்மா நீ மாத்ரம் ஜம்முன்னு பாப் வெட்டிக்கிட்டு...சும்மா இந்திராகாந்தி கணக்கா இருக்க. எனக்கு மட்டும் ஏன்தான் இவ்ளோநீள முடி. நானும் பாப் வெட்டிக்கிறேனே ப்ளீஸ்"
ச்சு...இதென்ன பேச்சு? உன் முடி மாதிரி யாருக்கு வரும். இங்க பாரு அலை..அலையா...சுருள்..சுருளா... அப்பா! கைல புடிச்சா அடங்காத அளவுக்கு ...இவ்ளோ திக்கா...யாருக்கு இருக்கும் இத போல.இதன் அழகே அழகு,இத போய் யாராவது வெட்டுவாங்களா?"
"நீ மட்டும்... " என்று சிணுங்கினாள் லதா.
அவளை இழுத்து அணைத்து முத்தம் ஒன்றை கொடுத்த சாருலதா அவளை மெல்ல பாத்ரூமுக்குள் தள்ளி வெந்தையம் பூண்டு போட்டு நல்லா காய்ச்சின நல்லெண்ணைய தலை முழுக்க வழிய..வழிய. தடவி விட்டாள்.
" ஏம்மா நீயே ஒரு டாக்டர்.இப்பல்லாம் எண்ணையை காதுல விடக்கூடாது...மூக்குல விடக்கூடாது..அப்படி இப்படின்னு எல்லார்க்கும் சொல்ற. எல்லாம் பேஷண்டுக்கு மட்டும்தானா.எனக்கு மட்டும்..."
"இந்த பேச்செல்லாம் எதுக்கு? குளிச்சிட்டு அந்த ஈர கூந்தலை லூசா பின்னி ஓ..அந்த அழகு அதுல இருந்து ஈரம் சொட்டு..சொட்டுன்னு ஒவ்வொரு சொட்டா...சொட்டும்போது 'அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது"ன்னு பாடத் தோணாதோ.அதிலிருந்து வர்ற சீக்காய் வாசனை..அதோட சேர்த்து துண்டு மல்லிகையையும் வச்சுட்டா...சும்மா மஹாலக்ஷ்மி மாதிரி ஜொலிக்க மாட்ட"
"பொன்மணி வைரமுத்து இல்ல இல்ல தாமரை கேட்டா போ .ஏன்தான் இந்த செஞ்சுரியல கூட...ஆமா ...ஆமா லீடிங் கைனக்கோலஜெஸிட் எப்ப இப்படி கவிஞியான"
செல்ல கூட்டு ஒன்ன வச்சி...மீரா சீகைக்காய் குழம்பை அரக்க.. பறக்க...தேய்த்து விட்டாள் சாருலதா.
"சித்து...எல்லாம் ரெடி. சீக்கிரம் வாங்க. லத்துவும் குளிச்சிட்டா..."
நடு நாயமாக பிள்ளையார்பட்டி விநாயகர்...இந்தப்புறம் காஞ்சி காமாட்சி...அந்தப்புறம் மஹாலக்ஷ்மி...அதோ மேலே பத்மாவதி தாயாரோடு திருவேங்கடம்...வலதுபுறம் சிங்காரவேலன்...இடதுபுறம் ஐயப்பன்...எல்லா படங்களும் சுத்தமாக துடைத்து... சந்தனம் குங்குமம் இட்டு ...பூமாலை சாத்தி...வெள்ளி உத்தரணியில் துளசியுடன் தெளிந்தநீர் இரண்டுபக்கமும் வெள்ளி குத்து விளக்கு ஐந்து முக தீபமும் ஏற்றி...மூலையில் மட்டிபால் சாம்பிராணி புகைந்து கொண்டிருக்க...சைக்கிள் ப்ராண்ட் ஊதுபத்தியும் மணம்பரப்பிக்கொண்டிருக்க...ஓம் பூர்புவஸ்வக காயத்ரி மந்திரத்தை ஜேசுதாஸ் தன் மந்திர குரலில் (கேசட்டில்) ஓதிக்கொண்டிருக்க ..ஒரு தெய்வீக சூழல் அங்கே நிறைந்திருக்க
வேறொரு படத்திற்கும் பொட்டிட்டு மாலையிட்டு...கீழே தட்டில் புடவை ...மாங்கல்யம், மஞ்சள்,குங்குமம் இனிப்பு பழங்களுடன் இடியாப்பம் பால்பாயாசம் வைத்து...தீபம் ஏற்றி.....அந்த படத்தில் ஒரு இளவயது பெண்ணின் உருவம் சுமார் 35 வயதிருக்கலாம் அழகிய திருந்திய முகம் மந்தகாச சிரிப்புடன்...பார்க்கும்போதே கையெடுத்து கும்பிடத்தோன்றும் தெய்வீக களையுடன் ...ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தாள் சாருலதா.அந்த போட்டோ ப்ரேமுக்குள் ஒரு ஆணின் பிம்பம். சட்டென திருப்பிப் பார்த்தாள். சித்து ...சித்தார்த்தன் ....Dr. சித்தார்த்தன் MD குழந்தைகள் நலமருத்துவர்.குழந்தையைப்போல்தான் இருந்தான். பால்வடியும் முகம்.ஒழுங்காக சீவப்பட்ட தலைமுடி...கோல்டன் பிரேம் மூக்கு கண்ணாடி ....காதோரம் எட்டிப்பார்க்கும் இளநரை...இரண்டுபேரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சில நொடிகள்தான் ...அதில்
ஒரு ஆழம்...
ஒரு அர்த்தம்...
ஒரு அன்பு....
ஒரு பரிவு...
ஒரு பாசம்...
ஒரு காதல்...
அதே ப்ரேமுக்குள் இப்போது லதாவின் முகம். இவர்களின் பிம்பங்களுக்கிடையில் போட்டோவிலிருக்கும் மாதுவின் முகம். முகத்தோடு முகமாய். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அந்த போட்டோவுக்கே உயிர் வந்து விட்டதா என்ன? க்ளோனிங் செய்தது போல...
அதே கண்கள்...
அதே லக்ஷணம்...
அதே லாவண்யம்...
அதே சுருள்..சுருள் அலை பாயும் கேசம்..
ஹோ...சித்தார்த்தன் கண்களை மூடி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு திரண்டது. எங்கே வழிந்துவிடுமோ என்று அஞ்சினான்.
கிணி...கிணி...பூஜை மணியின் சத்தம் அவனை இந்த உலகத்திற்கு அள்ளி வந்தது.ஒருவாறு சமாளித்துக்கொண்டு நிதானமாய் கண்களைத் திறந்தான்.காலில் விழுந்திருந்த லதாவை வாரி அணைத்து...உச்சி மோந்து...ஆசிர்வதித்தான். "அம்மா காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு"
"ம்கூம்...மாட்டேன். ஏன்னா இவங்க என் அம்மாவே இல்லை"
தொடரும்.


.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (12-Mar-22, 10:17 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 119

மேலே