ஊருக்குப் போறேன்

ஊருக்குப் போறேன், பஸ்சேரி !!

கண்ணு எனும் அம்மா,
வாடா எனும் அப்பா,
இளைச்சுட்டே எனும் பாட்டி,
காணாமல் எட்டிப் பார்க்கும் தாத்தா
இவர்களைப் பார்க்க, 
ஊருக்குப் போறேன் !!

வெந்நீர் வைக்கச் சொல்லி,
வேப்பங்குச்சி ஒடித்து,
தெரிந்த முகங்கள் தேடி,
தெருவில் உலா போக !!

ஆடிக் களைத்து,
அடி பைப்பில் தண்ணீர் குடித்து,
சோற்றை மறந்தும்,
சொர்க்கம் காண !!

சொந்தம் சேர்ந்து,
கிண்டல் பேசி
காலம் கழிக்க !!
ஊருக்குப் போறேன் !!

தோட்டச் செடியில் காய்த்த 
கத்தரி ஒரு நாள்,
பக்கத்து வீட்டு
வெண்டை மறு நாள்,

கோழிக் குழம்பும்,
குட்டை மீனும்
வாய்க்கு ருசியாய் !

பசலைக் கீரையும்,
பழைய சோறும்,
பசும்பால் தயிரும்
பசிக்குத் தீனியாய் !

கம்பும், களியும்,
கடைந்தெடுத்த மோரும்
களைப்புக்கு மருந்தாய்,
உடம்பைத் தேற்ற !!
ஊருக்குப் போறேன் !!

காலை காபியை ஏந்தி,
வெயிலில் வத்தல் தாங்கி,
மாலை, ஊர் கதையைக் கேட்டு,
இரவில் காதல் பேசி 
ஆயிரம் கதைகள் சொல்லும்
கயிற்றுக் கட்டிலில் தூங்க !!

இம்முறையேனும் 
அவள் முகம் காண !
அப்படிக் கண்டால் 
என் மனம் கூற !!

நூறு கனவோடு வந்து,
ஆயிரம் நினைவேந்தி
திரும்ப, ஊருக்குப் போறேன்!!

அடுத்து எப்போ என 
அம்மா கேட்க 
அழுகைக்கு அணை போட்டு 
சீக்கிரமே என சொல்ல
ஊருக்குப் போறேன்!!

- முரளிதரன் 

எழுதியவர் : Muralidharan (13-Mar-22, 1:18 pm)
பார்வை : 267

மேலே