தொட்டதெல்லாம் பந்தம் துயராய்த் தொடருதலால் விட்டது வீடு விடு - வீடு, தருமதீபிகை 991
நேரிசை வெண்பா
என்றும் நிலையான இன்பம் கருதியே
ஒன்றி உயிர்கள் உலாவுமால் - நன்றென்று
தொட்டதெல்லாம் பந்தம் துயராய்த் தொடருதலால்
விட்டது வீடு விடு. 991
- வீடு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உயிரினங்கள் என்றும் எவ்வழியும் இன்பங்களையே நாடி அலைகின்றன; உலக பந்தங்கள் யாவும் யாண்டும் துன்பங்களையே தொடர்ந்து தந்து படர்ந்து வருகின்றன; ஆகவே அவற்றை அறவே விட்டதே பேரின்ப வீடு எனப் பெருமை பெற்றதென்கிறார் கவிராஜ பண்டிதர். வீட்டு நிலையை இது காட்டுகின்றது.
அறிவுடைய உயிர் வகைகளுள் மனிதன் பெரியவனாய் நெறியே பெருகி வந்துள்ளான். உடலோடு கூடிய வாழ்வையும் உலக நிலைகளையும் பலவகைத் தொடர்புகளையும் கருதியுணர்ந்தான். மருவிய உரிமைகள் மதி நலங்களை அருளின.
உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இயல்பாக வேண்டியுள்ளமையை நேரே தெரிந்தான். பொறி புலன்களின் சுவை நுகர்வுகளைச் சுகமென நினைந்தான். அந்த நுகர்ச்சிகளுக்கு உரிய முயற்சிகளைச் செய்தான். தேக போகங்கள் இன்பம் என நேர்ந்தன. சுகமான வாழ்வை விரும்பவே அவற்றிற்கு உரிய கருவிகள் பொருள்கள் என வந்தன.
இன்பமும் பொருளும் உரிமையாய்த் தெரியவே அவை நிலைத்து வர வேண்டுமே என்னும் ஆவலால் பிறர்க்கு உபகாரங்களைச் செய்தான்; இதமான அச்செயல் தருமம் என வந்தது.
மனித வாழ்வுக்கு இம்மூன்றும் இனிமையாயிருந்தாலும் சிறிது காலம்தான் சேர்ந்து நிற்கின்றன; உடல் அழிந்து போனால் யாவும் மறைந்து போகின்றன. உயிர் என்றும் நிலையாய் நின்று வாழுவதற்கு உரிய நிலையம் ஒன்று இருக்க வேண்டும் என்று துணிந்தான். தான் கண்டது சிற்றின்ப வீடாதலால் அதற்குப் பேரின்ப வீடு என்று பேர் தந்தான். ஆறறிவுடைய மனிதனால் இந்த நான்கும் அடைய வுரியன என்று அருளினான்..
அறம்பொருள் இன்பம்வீடு அடைதல் நூற்பயனே. - நன்னூல்
நூலின் பயனை இலக்கண நூலார் இங்ஙனம் குறித்திருக்கிறார். வைப்பு முறை மிகவும் செப்பமான நுட்பம் உடையது.
இந்த நான்கையும் புருடார்த்தம் என்பர். புருடனால் உரிமையாயடையத் தக்கன புருடார்த்தம் என வந்தன. தர்மம் அர்த்தம் காமம் மோட்சம் என வடமொழியாளர் இவ்வாறு கூறி வருகின்றனர். சீவநிலைகள் ஆவலோடு தெரிய நேர்ந்தன.
உயிர் வாழ்வில் இயல்பாக நிகழுகின்ற நிகழ்ச்சிகளை வகுத்து வரம்புசெய்து வைத்திருப்பது நுனித்து உணர வந்தது. உற்ற தேகத்தை மனிதன் உரிமையாய் வளர்க்க நேர்ந்தான்.
இன்ப நுகர்ச்சிகளை விரும்பினான்; அவற்றிற்கு அவசியமான பொருளை ஈட்டினான்; அது பெருகி வருதற்குப் புண்ணியத்தைச் செய்தான்; அதனால் மறுமை இன்பமும் பெறலாம் என்று உறுதி செய்து கொண்டான். இந்த நான்கின் நிலைகளையும் கலையுணர்வுடன் ஒளவையார் செவ்வையாய் விளக்கியிருக்கிறார்
நேரிசை வெண்பா
ஈதலறம், தீவினைவிட்(டு) ஈட்ட(ல்)பொருள்; எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொருமித்(து) - ஆதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந்(து) இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
- ஒளவையார்
அறம் என்றால் என்ன? பொருள் எது? இன்பம் யாது? வீடு எத்தகையது? என்னும் இத்தகைய கேள்விகளுக்கு வித்தக வினோதமாய் விடை கூறியிருக்கும் அழகை இதில் வியந்து காணுகின்றோம். விரிந்த பொருள்களைச் சுருக்கித் தொகுத்து நயமாய்க் குறித்திருப்பது கூர்ந்து சிந்தித்துணரத் தக்கது.
இன்பமே வேண்டும் என்று மனிதன் யாண்டும் விரும்புகிறான். உலகில் அனுபவிக்கிற சுகங்கள் நிலையில்லாதன; பல துயரங்கள் தோய்ந்தன; அல்லலும் இழிவும் அழிவும் உடையனவாதலால் அவை சிற்றின்பம் எனச் சிறுமையாய்க் கூற நேர்ந்தன.
இந்தச் சிற்றின்பத் தொடர்புகள் முற்றுமற்ற போதுதான் பேரின்ப நிலையை முத்தர்கள் பெற நேர்கின்றனர்.
தொட்டதெல்லாம் துயராய் வருதலால் விட்டது வீடு என வந்தது. வீடு என்னும் சொல் விடுதலை அடைந்தவர்க்கு இடமாயுள்ளது என்னும் பொருளையுடையது. பாச பந்தங்களிலிருந்து விடுபட்டவர்கள் வாசமாயிருப்பது வீடு என வசமாய் வந்தது.
என்றும் நிலையானது; எவ்வழியும் அழியாதது என்பதும் இதனால் வெளியாயது. விடுதல் - பிரிதல், நீங்கல், ஒழிதல். இந்த அழிவுகள் யாதும் யாண்டும் இல்லாதது வீடு எனப்பட்டது.
கேடான பற்றுகள் யாவும் அடியோடு நீங்கிய மகான்களுக்கே இந்த அரிய ஆனந்த வீடு உரிமையான குடியாகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
நன்றாய் ஞானம் கடந்துபோய்
..நல்இந் திரியம் எல்லாமீர்த்(து)
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
..உலப்பில் அதனை உணர்ந்துணர்ந்து
சென்றாங்(கு) இன்பத் துன்பங்கள்
..செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றே அப்போ தேவீடு
..அதுவே வீடு வீடாமே. 6
அதுவே வீடு வீடுபேற்(று)
..இன்பம் தானும் அதுதேறி
எதுவே தானும் பற்றின்றி
..யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்(று)
..இன்பம் தானும் அதுதேறா(து)
எதுவே வீடே தின்பமென்(று)
..எய்த்தா ரெய்த்தார் எய்த்தாரே. 7.
- நம்மாழ்வார் திருவாய் மொழி, நான்காம் ஆயிரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்
பேரின்ப வீட்டைக் குறித்து நம்மாழ்வார் இவ்வாறு பேசியிருக்கிறார். பசையற்றால் அப்போதே வீடு; அதுவே வீடு என்னும் உறுதி மொழிகள் அந்த உள்ளத்தின் தெளிவை வெளியாக்கியுள்ளன.
புலையான பாச பந்தங்கள் நீங்கி நிலையான ஈசனுடைய சம்பந்தத்தை அடைக; அதுவே ஆனந்த வீடாம். புனிதமான புண்ணிய எண்ணங்களைப் பழகி வருக; பாசங்கள் ஒழிந்து மாசுகள் கழிந்து ஏகமான இன்ப நிலை எய்தலாம்.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
பழகிய தருமத்தின் பலத்தி னாலுளம்
அழகிய புனிதமாய் அமைதி நாடுமே;
மழவியல் மனமது மாசு தீரினோ
விழுமிய உயிரது வீடு சேருமே.
இதன் பொருளைக் கருதி உணருக. உரிய உயிர்க்கு அரிய இன்ப வீட்டை உரிமை செய்து உயர்வாய்ப் பெருமை பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.