துன்பங்கள் எல்லாம் தொலைந்தொழிய ஏய்ந்த பிறப்பே இனிது - இனிமை, தருமதீபிகை 981
நேரிசை வெண்பா
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)
வந்த பிறவி வகையை வகுத்தறிந்து
பந்த வினையைப் பறித்தெறிந்து - சந்ததமும்
தோ’ய்’ந்துவந்த துன்பங்கள் எல்லாம் தொலைந்தொழிய
ஏ’ய்’ந்த பிறப்பே இனிது. 981
- இனிமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நேர்ந்துள்ள பிறவியின் அருமையை ஓர்ந்துணர்ந்து பாசப் பிணிப்புகளைப் பறித்தெறிந்து என்றும் தொடர்ந்து தோய்ந்து வந்த துன்பங்கள் யாவும் ஒருங்கே அழிந்தொழிய விளைந்து வந்த பிறப்பே சிறந்த இன்பம் உடையது என்கிறார் கவிராஜ பண்டிதர்.
இனிது என்னும் சொல் சுகம், நன்மை, மேன்மை முதலிய பொருள்களை உணர்த்தி வரும். உள்ளத்தில் உவகையை விளைத்து வருவது இனிமை என வந்தது. ஆறு சுவைகளுள் இனிப்பு தலைமையாயுள்ளது. அரிய இனிய சுகம் இங்கு அறிய வந்தது.
மக்களுடைய நிலைமைக்குத் தக்கபடி இனிமைகள் நேர்ந்துள்ளன. சார்ந்து சுவைத்து வரும் சார்புகள் மக்களுடைய தகுதிகளை ஓர்ந்துணரச் செய்கின்றன. இழிந்தது, பழி படிந்தது, நிலையற்றது, மாய மயக்கங்கள் மருவியது, மையல் மோகங்கள் தழுவியது ஆகிய இந்நிலைகளில் உள்ள புலைகளையே இனிது, இனிது என்று மக்கள் ஒக்க நுகர்ந்து களித்து வருகின்றனர். இளிப்பான களிப்புகள் எங்கும் செழித்து நிற்கின்றன. உயிரின் உயர் இனிமை உன்னத நிலையில் ஓங்கி உள்ளது
உண்மையான இனிமை தோய்ந்தவர் புன்மையான களிப்புகளை இழித்தொதுக்கித் தனிநிலையில் இனியராய் ஒளி சிறந்து நிற்கின்றார், அவரது நிலை தவ நலமுடையதாய்த் தழைத்துளது.
மேலான இனிமை எது? என்பதை உலகம் செவ்வையாய்த் தெரியும்படி செவ்வேள் ஒருமுறை ஒளவையாரை விநயமாய் வினவினார்; அவ்வாறு வினவிய பொழுது அந்தப் பாட்டி பாட்டிலேயே பதிலுரைத்தாள்; விழுமிய இனிமையை விழி தெரிய விளக்கி ஒளிமிகுந்து வந்த சுவையான அக்கவி அயலே வருகிறது.
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிய(து) இனிய(து) ஏகாந்தம் இனியது;
அதனினும் இனிய(து) அறிவினர்ச் சேர்தல்;
அதனினும் இனிய(து) அறிவுள் ளோரைக்
கனவினும் கனவினும் காண்பது தானே. - ஒளவையார்
ஏகாந்தத்தின் புனித நிலையை இது இனிது உணர்த்தியுள்ளது. தனிமையே இனிமையென்றது அதன் பயனையும் நயனையும் வியனாய் விளக்கி மேலான ஞான நீர்மையை நன்கு துலக்கி நின்றது.
வெளியே யாரோடும் கூடாமல் தனியே ஒதுங்கியிருப்பது தவத்தின் வழியாய் ஒளிமிகுந்து மகத்துவம் மருவியுள்ளது.
உலகப் புலைகளை ஒருவிய பொழுதுதான் துறவி என ஒருவன் ஒளிபெற்று வருகிறான். துறவுக்கு உறவாயிருப்பதால் தனிமையின் தகைமையையும் இனிமையையும் ஒருங்கே உணர்ந்து கொள்ளுகிறோம். மனிதன் தனித்தபோது உள்ளத்தோடு தோய்ந்து உயிரோடு உறவாடுகிறான்; ஆகவே அந்தச் சீவ ஒளியில் திவ்விய சுகங்கள் பெருகி வருகின்றன. ஆன்மவுள்ளம் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வதை அரிய தவயோகிகள் அனுபவித்துள்ளனர். மகான்களின் அனுபவம் மகிமை மிக வுடையது.
உலக நசையும், பொறி வெறிகளும் இழி துயரங்களையே விளைத்தலால் ஞானிகள் அவற்றை ஒழித்து மோனமாய் அடங்கியிருக்கின்றனர். அந்த அமைதியில் அதிசய இன்பங்கள் விளைகின்றன. சித்த சாந்தி திவ்விய நிலையமாய் நிலவுகிறது.
நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு, வா, வி எதுகை)
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் - தீ’ர்’வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25 இனியவை நாற்பது
புலன்களை அடக்குக, கல்லாதாரோடு சேராதே, பொல்லாதாரோடு கூடாதே; அவ்வாறு ஆயின் உன் வாழ்வு எவ்வழியும் இனிமையாம் என மனித மரபுக்குப் பூதஞ்சேந்தனார் இவ்வாறு போதித்திருக்கிறார். புனிதமான இனிமை புலன் தெரிய வந்தது. ஆன்ம சுகம் அகம் தூய்மையில் விளைகிறது.
உலக போகங்களிலும், கலையின் சுவைகளிலும், விஞ்ஞான விளைவுகளிலும், மெய்ஞ்ஞான நிலைகளிலும் இன்பங்கள் தோன்றுகின்றன; அத்தோற்றங்கள் எல்லாவற்றுள்ளும் ஈற்றிலுள்ளதே உண்மையான இன்பமாய் என்றும் உவகை சுரந்து வருகிறது.
பிறவி, துன்பங்கள் நிறைந்தது; பிறவாமை, இன்பங்கள் அமைந்தது. ஆகவே, எடுத்த உடலோடு இறுதியாக அடுத்த பிறவியை எவன் அடையாமல் செய்து கொள்ளுகிறானோ அவனே. நிலையான பேரின்ப நலனைப் பெற்றவனாகிறான்.
மாளவ தேசத்து மன்னன் சிறந்த நீதிமான்; பல நூல்களையும் ஓதி உணர்ந்தவன்; சிகித்துவசன் என்னும் பேரினன். அவனுடைய மனைவி பெயர் சூடாலை, பேரழகி. அவளோடு கூடி இனிய போகங்களை நுகர்ந்து அரசு முறை புரிந்து வருங்கால் ஒருநாள் மேல் மாடத்தில் தனியே இருந்து சிந்தனை செய்தான்: 'உலக வாழ்வு நிலையில்லாதது; எவ்வழியும் துயரங்களையுடையது; வெவ்விய இப்புலைகளில் உழல்வது தன்னுயிரைக் கொலை செய்தபடியாம்; மாயமருள் நீங்கித் தூய பரனைத் தோய்வதே சிறந்த அறிவின் பயனாம்; உயர்ந்த இந்த மனிதப் பிறவியிலிருந்து உய்யவில்லையானால் பின்பு என்றும் வெய்ய துயரங்களே' என்று இவ்வாறு உணர்ந்து தெளிந்து உறுதி நாடினான்; பலவகையான தான தருமங்களைச் செய்தான்; செய்தும் அமைதியான இனிமையை அடைய முடியவில்லை; ஆகவே தனியே துறந்து போகத் துணிந்தான்; தனது மனநிலையை இனிய மனைவியிடம் உரிமையாக உரைத்தான். அன்று அவன் உரைத்த அரிய மொழிகள் என்றும் ஞான ஒளிகளை வீசி எல்லா உலகங்களும் தெளிய நின்றுள்ளன. சில அயலே வருகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
அருந்தானம் பலகொடுத்தான் தவம்மிகச்செய் தான்தீர்த்தம்
அனைத்தும் தோய்ந்தான்
வருந்தாமை அவற்றாலும் பெற்றிலன்பேர் இடராலே
மனம்நொந்(து) ஓர்நாள்
இருந்தான்ஏ. காந்தத்தின் மடிமேலே சூடாலை
இருக்கச் செய்து
பெருந்தாபம் உறுகின்ற துயரெல்லாம் அவளுக்குப்
பேசல் உற்றான்: I
ஆண்டவர சினும்புசித்த செல்வத்தும் இன்றுநான்
ஆசை அற்றேன்;
நீண்டவனம் புகநயந்தேன் துக்கசுகம் ஆபத்து
நிதிகள் எல்லாம்
மாண்டவனத்(து) உறைவோரைத் துயர்செய்யா புவிபொருட்டால்
மயங்க வேண்டா
காண்டகுதன் கிளைநாசம் தோன்றாத நாட்டினும்வன்
காடு நன்றே. 2
பற்றின்றித் தனிஇருக்கும் மனத்தைப்போல் பனிமதியும்
பதுமத் தோனும்
பொற்றிரள்சேர் இந்திரனும் சுகமடையார் ஆதலின்கான்
போகும் என்னைக்
குற்றமென விலக்கலைநீ கணவர்நயந் ததுவிலக்கார்
குலத்தின் மாதர்
சிற்றிடையாய்! என்றுரைத்த மன்னனுக்குச் சூடாலை
செப்பல் உற்றாள். 3
- ஞான வாசிட்டம்
அரசன் கருதி மொழிந்துள்ள உறுதிநிலைகளை இவை தெளிவாயுணர்த்தி நிற்கின்றன. பற்றின்றித் தனி இருக்கும் மனம் பரம சுகத்தில் பெருகி நிற்கும் என்றது. இங்கே கருதியுணர வுரியது.
பிறவித் துயர்கள் நீங்கிப் பேரின்ப நிலையை அடைய விரைந்த இத்தகைய தத்துவ தரிசிகளே உத்தம ஞானிகளாய் ஒளி சிறந்து நிற்கின்றார். இந்தநிலை அதிசய மகிமையுடையதாதலால் எவரும் துதிசெய்து யாண்டும் போற்றி வருகின்றார்.
எவ்வழியும் ஒழியாமல் ஒட்டிவந்த துயர்களை ஒட்டாமல் ஒழித்தவனே உயர் வீரனாகிறான். ஞானவீரன் மோனமாய்த் தனிமையிலமர்ந்து புனிதமான இனிமைகளை நுகர்கிறான். ஆன்ம போகமான அந்த அனுபவ நிலையை இனிது மருவுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.