அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண்டு ஒல்லாதார் வாய்விட் டுலம்புப - நீதிநெறி விளக்கம் 72

நேரிசை வெண்பா

அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண்(டு)
ஒல்லாதார் வாய்விட் டுலம்புப - வல்லார்
பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங்(கு)
அறிமடம் பூண்டுநிற் பார் 72

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

வன்மையில்லாதவர், பிறர்க்குப் பயன்படக்கூடிய செயல்கள் அல்லாதவற்றைச் செய்தாலும், தாம் பயன்படக்கூடிய செயல்களைச் செய்துவிட்டதுபோல், ஆரவாரத்தையே பயனாகக் கொண்டு பலரறியத் தஞ்செயல்களைக் கூறி முழங்குவர்;

வல்லமையுடையோர், தக்கார் பிறராற் செய்யப்படுவன போலப் பயன்படுஞ் செயல்கள் செய்து அவ்விடத்தில் தாம் செய்த பயன்படுஞ் செயல்களைத் தாம் நன்குணர்ந்தும் உணராதது போல் அறியாமையை மேற்கொண்டு அடக்கமாயிருப்பர்.

விளக்கம்:

மனம், வாக்கு, காயங்களில் அடக்கமிலார் செய்யுங் காரியங்கள் மற்றவர்களுக்குப் பயன்படாதாகையால் 'அல்லன செய்யினும்' என்றார்.

கருத்து:

அருஞ்செயல்கள் செய்ய இயலாதவரே அடக்க மிலாது ஆரவாரமுடையராயிருப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Mar-22, 9:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே