பூக்களுக்கும் மூக்கிருந்தால்

பூக்களுக்கு மூக்கிருந்தால்
===========================
தன் வாசனையைத்
தானே முகர்ந்து
தலைகால் புரியாமல் ஆடியிருக்கும்
*
கண்ட கண்ட மலர்களில் அமர்ந்து
தேனுண்ணும் வண்டுகளின்
துர்மணம் தாளாமல்
துடிதுடித்துப் போயிருக்கும்
*
கூந்தலுக்கு அழகென்று
சரம்தொடுத்துச்
சூடிக்கொள்ளும் மாதர்தம்
தண்ணீர் வாசனை காணாத
தலைகளின் நாற்றம் தாளாமல்
தற்கொலைக்கு முயன்றிருக்கும்
*
குளிக்காமல் வந்து
நா கூசாமல் பொய் பேசும்
தலைவனின் வியர்வை தோள்களில்
மாலையாய்க் கிடக்க நேர்கின்ற வேளைகளில்
மலர்களாய் பிறந்ததே சாபமென்று
மனம் குமுறியிருக்கும்
**
வாசனைத்திரவியங்கள் பூசிக்கொண்டு
வாழ்க்கையை ஆரம்பிக்கும்
ஒப்பந்தம் எழுதும் மணமக்கள்
தோள்களில் மாலையாய் விழுந்து
மணக்கின்றபோது
பிறந்ததன் பயன் கிடைத்ததாய்
பெருமிதம் கொண்டிருக்கும்
**
வாழ்க்கையை முடித்து
வானம் சென்றவனின்
பூதவுடலோடு கிடக்கின்ற பொழுதுகளில்
பிணமணத்தோடு பிற மணங்களையும்
சகிக்காமல் பிணமாகியே போயிருக்கும்
**
என்றாலும்
எப்போதாவது ஒரு மழலையின்
கைகளில் கிடைக்கும்போது
பூக்களை முகரும் மழலையைப்
பூக்களும் முகர்ந்து கொண்டிருக்கலாம்
*
மெய்யன் நடராஜ்
17 – 03 – 2௦22

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Mar-22, 2:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 162

மேலே