ஐயா திருச்சி சந்தருக்கு மரணமில்லை கவிஞர் இரா இரவி

ஐயா திருச்சி சந்தருக்கு மரணமில்லை!
கவிஞர் இரா. இரவி

திருச்சி சந்தர் ஐயா மதுரையில் வாழ்ந்தாலும்
திருச்சி பிறந்த ஊரை பெயரோடு சேர்த்தவர்!
வாலிபக் கவிஞர் மூன்று தலைமுறைக் கவிஞர்
வாலியை வாடா என அழைக்கும் நண்பர்!
முத்தமிழ் அறக்கட்டளை மதுரையில் நிறுவி
முத்தமிழ் வளர்க்க விருதுகள் வழங்கியவர்!
கவிஞர்கள் கூடும் வேடந்தாங்கலாக வீடு
கவிதை, கதை, கட்டுரை பயிற்சி முகாமாக வீடு!
இல்லத்தரசி கமலாம்பாள் அம்மாவும் என்றும்
இல்லம் வரும் கவிஞர்களுக்கு விருந்து வைப்பார்!
இல்லத்தரசி மறைந்த சோகத்தால் வாடியவர்
இனிய மூச்சையும் நிறுத்தி காலம் சென்றார்!
அப்பாவை இழந்த குழந்தைகள் போலவே
அன்பான கவிஞர்கள் அனைவரும் வாடினர்!
யார் நூல் வெளியீட்டு விழா நடத்தினாலும்
யாவருக்கும் முதல் ஆளாக வந்து நன்கொடை தந்தவர்!
இலக்கிய விழாக்கள் பல நடத்தி வந்தவர்
இலக்கியத்தை சுவாசமாகக் கொண்டு இயங்கியவர்!
எழுத்தாளர் சங்கத்தின் தென்மண்டல அமைப்பாளர்
எழுத்தாளர் யாராக இருந்தாலும் ஊக்குவித்தவர்!
அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் சந்தர்
அறவே மூடநம்பிக்கைகளை வெறுத்த முற்போக்காளர்!
பூனூல் அணியாதவர் சனாதனம் விரும்பாதவர்
பூஉலகில் அனைவரோடும் அன்பாகப் பழகியவர்!
சிற்றிதழ்களுக்கு சந்தா வழங்கி நீர் வார்த்தவர்
சிற்றிதழ்களில் படைப்புகள் பல படைத்து வந்தவர்!
‘கவிச்சூரியன்’ என்ற விருதை எனக்கு வழங்கியவர்
கவிஞர் பலருக்கு பல்வேறு விருதுகள் வழங்கியவர்!
ஐயா திருச்சி சந்தருக்கு மரணமில்லை
அனைவரின் உள்ளத்திலும் வாழ்வார் என்றும்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (17-Mar-22, 9:13 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 41

மேலே