ஒரு தாயின் அரைகூவல்.......
ஒரு தாயின் அரைகூவல்
அறைகளற்ற வெட்டவெளியில்
எல்லா மகன்களையும் குறைகூறவில்லை
என்மகனைப்போல் உள்ளவனைத்தவிர
ஓர் தாயின் உள்ளார்ந்த சபதம்
மகனே! எங்கிருந்தாலும் வாழ்க நீ!
இதயத்தில் நீ குத்தினாலும்
உன் கரங்களையே பார்ப்பேன்
என்னை நீ குத்தியதால்
உன் கரங்கள் வலிக்குமோவென
அன்று என்னுள்ளே நீயிருந்தாய் தனியாக
இன்று என்னைத் தனியேவைக்க நீ துணிந்தாய்
மோகம் உனக்கு மூச்சடைக்க
தேகம்தந்த தாயையே மறந்துவிட்டாய்
தென்றல் உன்னை தீண்டிவிட்டால்
தெருநோய்கள் தாக்குமோவென
மாரணைப்பில் மறைத்துவைத்து உன்னை
மறவாது தினம் காத்துவந்தேன்
அத்தனையும் உனக்கு செய்துவைத்த
அன்புத்தாயை ஏன் மறந்துவிட்டாய்
பெண்மகளை பெற்றிருந்தால்
பேச்சிற்காவது துணைவருவாள்
ஆண்மகனை பெற்றுவிட்டேன்
அழுதுதானே ஆகவேண்டும்.
சிவசிவ என்றிருந்தால்
அவனருள் கிடைத்திருக்கும்
மகன்மகன் என்றிருந்தேன்
மறந்துவிட்டு சென்றுவிட்டான்.
ஏசுநாமம் கேட்டிருந்தால்
எல்லாமே கிடைத்திருக்கும்
என்மகன்போதும் என்றிருந்தேன்
ஏமாற்றிச் சென்றுவிட்டான்.
அல்லாவை தொழுதிருந்தால்
அல்லலின்றி வாழ்ந்திருப்பேன்
அன்புமகன் காப்பான் என்றிருந்தேன்
அனாதை ஆக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.
கோயில்குளம் சுற்றிவந்து
குழந்தையாக பெற்றெடுத்து
கொள்ளிவைக்க வேண்டுமென்று
கூறிக்கூறி வளர்த்தாலும்
தள்ளிவைக்க நினைக்கிறானேதவிர
மூப்பின் தாகம்தீர்க்க மறுக்கிறான்.