ஆ காட்டு ஆ

சோறூட்டும் படலம் !

இடுப்பிலே பிள்ளை
கையிலே குவளையுடன்
சோறூட்டும் போருக்குப்
புறப்பட்டாள் அம்மா !

முதல் வாய் முடிந்து
மூடிய வாயைத் திறக்க
அம்மா சொல்லாத
மந்திரம் இல்லை !

ஏமாற்றுக்காரி, அம்மா !
நாய்க்கொரு வாய்
பூனைக்கொரு வாய்
கூரை மேல் அமர்ந்த
காக்கைக்கொரு வாய்
எனப் போக்கு காட்டி
ஊட்டி எடுத்தாள்!

அதுகளோடு சேர்ந்து
ஏமாந்து போனது
குழந்தையும் தான்!

குழந்தை சற்றே சுதாரிக்க,
அடுத்த ஆயுதம்
தேடினாள் அம்மா !

ரோட்டிலே நடப்பவரை
மாமா அத்தையாய்
முகம் காட்டி, நகைப்பூட்டி என
நாலு வாய் நறுக்கென்று
ஊட்டி எடுத்தாள் !

நடு நடுவே ஏப்பம் !
கையின் வலியையும்
சேர்த்தே விழுங்கியது !

வட்டமிடும் கழுகும்,
வண்ணத்துப்பூச்சியும்,
காற்றில் ஆடும் இலையும்,
காரும், பைக்கும், மத்ததும்
ஆளுக்கொரு வாயூட்ட !

எவ்ளோ நேரம் என
அத்தை அதட்ட,
திட்டி திட்டி
சில வாய் போக !

மூணு கண்ணன்
பூச்சாண்டி என
கண்ணுக்குத் தெரியா
வில்லன்கள் எல்லாம்
பயமூட்ட !

தலை சுற்றி
திருஷ்டி கழித்து
முடித்தாள் கடைசி வாயை !
இல்லை இல்லை, போரை !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (26-Mar-22, 5:35 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : aa kaattu aa
பார்வை : 56

மேலே