பேனா பைத்தியம்

சிறு வயதில் பேனா பைத்தியம் நான்
ஆறு வயதுகளில்
என் பையில் கொட்டி
கிடக்கும்
சிலேட்டு குச்சிகள்
நண்பர்களின் அதிசயம்

நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது
பேனா மீது நகர்ந்தது என்பார்வை .

மிலிட்டரி சித்தப்பாவிடம்
கலர் கலர் பேனாக்கள்
இருக்கும்
அவருக்கு சேவகம்
செய்து
பாதி காலியான பேனாக்களையும்
பொக்கிஷம் போல் வாங்கிக் கொள்வேன்

வண்ண வண்ண மைகளில்
எனது வீட்டுப் பாடங்கள் ஜொலிக்கும்
நண்பர்களின் ஆச்சர்யத்தில் எனது தலைநிமிரும்

ஒரு நாள் கடையில் புது வரவான
பேனா ஒன்றை பார்த்தவுடன் பிடித்துப் போக
விலையை விசாரித்தேன்
2 ரூபாய்

எனது அன்றாட பள்ளிக்கூட
படிக்காசு 50 காசுகள்
சனி, ஞாயிறு என்றால்
அதுவும் கிடையாது.
இன்று வெள்ளிக் கிழமை
ஆக 2 ரூபாய் சேர்க்க
6 நாட்கள் பிடிக்கும்

பொறுமை காத்தால்
பேனா காலியும் ஆகலாம்
யோசித்தேன்
காலையில் அப்பாவிடம் பேசி
நாள் முழுதும் கடையில் உதவி செய்வதாக
2 ரூபாய் கேட்டேன்

ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்றார் அப்பா
2 ரூபாய்க்காக 2 நாட்கள் ஒப்பந்த கூலியானேன்.

ஞாயிறு இரவு 8 மணிக்கு 2 ரூபாயுடன்
கடைக்கு ஓடினேன்
இருந்த 2பேனாக்களில்
பிடித்ததை எடுத்துக் கொண்டேன்
கண்கள் மின்னியது
மகிழ்ச்சியில்

இன்றும் பேனா வாங்கும் போது
எழுதிப் பார்த்தே வாங்குகிறேன்
சில நேரங்களில் கடைக்காரரோடு வம்பு இழுத்து விடும்
பந்துமுனை மூடி நீக்கப்பட்ட எழுதாத பேனாக்கள்

பேனா என்றாலே கண்கள் விரிகிறது
நல்ல பேனாக்கள் கிடைப்பதும்
அரிதாகி விட்டது..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (29-Mar-22, 5:42 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : pena paithiyam
பார்வை : 47

மேலே