புலவர் புளுகேசி
காஞ்சி அரசன் அம்மாஞ்சி ஒஞ்சி போய் அரியசானத்தின் மீது சாஞ்சி கொண்டான். அரசன் ஏன் ஒஞ்சி போனான்? அன்றைய "கூழுடன் பொதுமக்கள் சந்திப்பு" என்ற பொது மக்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி அப்போது தான் நடந்து முடிந்தது. கூழ் என்னவோ இருபது பெரிய அண்டாக்களில் செய்து வைத்திருந்தனர். இடையில் அரசன், தானும் அவ்வப்போது அந்த கூழை குடித்து பசியாறலாம் என்று எண்ணிய எண்ணம் கனவாக போய்விட்டது. ஏனெனில் அன்று எதிர்பார்த்ததை விட பலமடங்கு பொதுமக்கள் வந்துவிட்டனர். அரசன் சந்தேகித்தான் " பொதுமக்களுடன் சேர்ந்து கொஞ்சம் புது மக்கள் கூட வந்துவிட்டனர் போலும்". வழக்கமாக "கூழுடன் பொதுமக்கள் சந்திப்பு" நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடக்கும். ஆனால் அன்று கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணி வரை அது தொடர்ந்தது. பொதுமக்கள் முன் அரசன் பழரசம் காபி தேநீர் அருந்த தயங்கினான். ஏனெனில் அவர்களும் அதுதான் குடிக்க வேண்டும் என்று அரசனிடம் கேட்டுவிட்டால், அரசன் பாடு திண்டாட்டம். இருக்கும் ஐந்து கிலோ பழங்களில் எவ்வளவு பேருக்குத்தான் பழரசம் கொடுக்கமுடியும். அதுபோல் காபி தேநீர் எல்லோருக்கும் கொடுக்க முடியாது. அரண்மனை சமயலறையில் இருப்பதோ மூன்று லிட்டர் பால்தான். (துவும் தண்ணீர் கலந்த பால், எங்கே போய் சொல்ல?). அதன் விளைவு அரசன் ஒஞ்சி போய்விட்டான்.
அன்று தலைமை சமையற்காரர் அவருடைய கொள்ளு பாட்டி கொஞ்சம் கால் தவறி ஒரு படியை மறந்து விட்டதால் மாடியிலிருந்து உருண்டு விழுந்து தவறி போய்விட்டதால் காலையிலே அவர் ஊர் புறப்பட்டு சென்றுவிட்டார். அதானால் அரசியே சமைத்து கொடுப்பதாக சொன்ன திடுக்கிடும் தகவல் கேட்டு அரசன் திகில் பிடித்தவன் போல் ஆகிவிட்டான். ஓரிரு முறை அரசியின் அரிசி சமையல் சாப்பிட்டபின் அந்த விவரிக்க முடியாத அறுசுவையால் அரசன் அசுரன் போல மனம் மாறிவிட்டான். அரியாசனத்தில் சாஞ்சி
கொண்டு அங்கும் இங்கும் நோட்டம் விட்டான். மந்திரிகளில் பாதி பேர் அன்று வரவில்லை.அன்று ஞாயிறு என்பதால், அவர்களுக்கு விடுமுறை எடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனர்.
(அம்மாஞ்சி அரசன் யாரேனும் ஞாயிறு அன்று வரவில்லை என்றால் கண்டுகொள்ள மாட்டான். அந்த அளவுக்கு தலைவலி குறைவு என்று நினைத்து மகிழ்வான்). அப்போது அவையில் வீற்றிருக்கும் மந்திரிகளில் பலர் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள். அதில் பாதி பேருக்கு மேல் கல்யாணம் ஆகாதவர்கள். புதிதாக அன்று வந்து ஒரு மந்திரி ஒரு பெரிய பானையுடன் வந்திருந்தார். அவர் வயிற்றை குறிப்பிடவில்லை. உண்மையிலேயே அவர் ஒரு பானையில் நிறைய மோர் கொண்டுவந்திருந்தார். அதிலிருந்து அவ்வப்போது மோர் பருகி வந்தார். அரசனுக்கு இதை பார்த்தவுடன் நிறைய தாகம் எடுத்தது. வெறும் தண்ணீரை குடித்து வெறுப்பு வந்து விட்டது. அந்த மந்திரியை பார்த்து அரசர் கேட்டார் " எனக்கும் அந்த மோர் கொஞ்சம் கிடைக்குமா?" என்று. புதிய மந்திரி "ஆஹா , அரசருக்கு இல்லாத மோரா? இந்தாருங்கள்" என்று பானையை அரசருக்கு கொண்டு கொடுத்தார். அரசர் ஆசையுடன் பானையை பிடித்து கொண்டு கூழ் குடிப்பது போல வாயில் கவிழ்த்தார். அதில் இருந்தது அரை கிளாஸ் மோர் கூட இல்லை. அரசரால் பொறுக்கமுடியவில்லை " எல்லா மோரையும் நீரே காலி செய்துவிட்டீர்கள். நீங்கள் இதற்கு பதில் மோர் இல்லை என்றே சொல்லி இருக்கலாம்."என்றவுடன் அரசருக்கு அருகில் இருந்த அவரது அரச புலவர் மற்றும் நகைச்சுவை சிகாமணி புளுகேந்தி " அரசே, நீர் சொல்வது சரிதான். இருப்பினும் அவர் புதிதாக சேர்ந்த மந்திரி என்பதால் அவரை மன்னித்து விடுங்கள். அதற்கு பதில் என் பக்கத்தில் இருக்கும் அமைச்சர் பானகம், அவர் பானையில் கொண்டு வந்துள்ள பானகத்தை வாங்கி அருந்துங்கள்." என்று சொல்ல அரசனும் " அப்படியே புளுகேந்தி. பானகம் உங்கள் பானையை கொண்டு வாருங்கள். கொஞ்சம் பானகம் சாதித்து கொள்கிறேன்" என்றார். அமைச்சர் பானகம் " அரசே இது வெல்லம் கலந்த இனிப்பு பானகம். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் இதனை குடிப்பது நன்மை பயக்காது" என்றவுடன் வந்ததே கோபம் அரசன் அம்மாஞ்சிக்கு. " உமக்கு என்ன பானகம். பானக பானையை என்னிடம் கொடுங்கள். என் சர்க்கரை வியாதி பற்றி நீங்கள் இங்கு கரிசனம் கொள்ள வேண்டாம்" என்றவுடன் அமைச்சர் பானகம் பானையை அரசனிடம் கொடுத்தார். அரசன் பானையை ஆவலுடன் வாயில் கவிழ்த்துக்கொண்டார். ஒரே ஒரு கிளாஸ் பானகம் தான் இருந்தது . பானகத்தில் வெல்லம் மிகவும் குறைவாக இருந்தது. அரசன் அம்மாஞ்சி கோபத்துடன் பானகத்தை கேட்டார் " பானகரே , கால்வாசி வெல்லம் கூட போடாமல் பானகம் என்று சொல்கிறீர்கள். அதைவிட ஆச்சரியம் இதை இனிப்பு என்று சொல்லி என்னை அருந்தவேண்டாம் என்று வேறு சொல்கிறீர்கள். நீரெல்லாம் ஏனய்யா எனக்கு அமைச்சராக வந்து வாய்த்திருக்கிறீர்கள்" என்று கேட்டபோது பானகம் " என் பெயர் பானகம் என்று இருப்பதால் என் மனைவி எந்த இனிப்பு செய்தாலும் கால்வாசி இனிப்பை தான் சேர்ப்பாள்" என்று சொல்லியதை கேட்டு அரசனுடன் சேர்ந்து புலவர் புளுகேந்தியும் வாய்விட்டு சிரித்தார்.
அந்த நேரத்தில் அந்தபுரத்திலிருந்து அரசி வந்து " என் ஆசை கணவராகிய அரசரே, வாருங்கள், சமையல் சூடாக செய்திருக்கிறேன், பாவம் ரொம்ப பசியால் துடித்து போய் இருப்பீர்கள்" என்றவுடன் அரசன் உடனேயே " இத்துடன் இன்றைய சபை முடிகிறது. நாளை காலை 10 மணிக்கு சபை மீண்டும் கூடும்" என்று சொல்லி சபையை கலைத்தார். புலவர் புகழேந்தி நல்ல பசியுடன் இருந்தார். ஞாயிறு அன்று அவர் மனைவி மாலை வரை உண்ணாவிரதம் என்பதால் அவருக்கு ரொம்ப பசியாக இருந்தது. அவர் அரசரின் பின்னாலேயே சென்றார். அரசர் " ஏன் புலவரே, வீட்டிற்கு செல்லவில்லையா? பசியுடன் இருப்பீர்களே? என்றபோது " மன்னிக்கவும் அரசே. இன்று என் மனைவி உண்ணாவிரதம். எனவே எனக்கும் வீட்டில் உணவில்லை." அரசன் கேட்டான் " நம் நாட்டில் உணவு விற்பனை செய்யும் விடுதிகள் இருக்கின்றனவே . அதில் சென்று உண்ணலாமே?" என்றபோது " எனக்கு வெளி உணவு ஒத்துக்கொள்ளாது. அதற்கு பதில் உண்ணாமலேயே இருந்துவிடுவேன்." என்றபோது அருகிலிருந்த அரசி " பாவம், இன்று உங்களுடன் அவரும் சேர்ந்து உண்டுவிட்டு போகட்டும்" என்றபோது அரசன் " சரி, வாரும் புளுகேந்தி.சேர்ந்து புசிப்போம்" என்றார். அரசி தன் கையாலேயே இருவருக்கும் பரிமாறினாள். அன்னம் தவிர ஆறு வகையான சமையல் வகைகளை செய்து படைத்தாள் அரசி. பசி அதிகமாக இருந்ததால் இருவரும் இலையில் பரிமாறப்பட்ட அனைத்தையும் தின்று முடித்தார்கள். கொஞ்சம் பசி தணிந்ததும் அரசியின் கைவண்ணம் சுவையில் இருவருக்கும் விளங்க ஆரம்பித்தது. ஒன்றில் உப்பு அதிகம் என்றால் ஒன்றில் உப்பே இல்லை. ஒன்றில் காரம் என்றால் இன்னொன்றில் காரமே இல்லை. சில உணவுகளில் சுவை என்பதே இல்லை. ஏதோ ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்தனர். இதற்கு பிறகு புலவர் அரசன் அம்மாஞ்சியிடம் பசி என்று சொல்லவே இல்லை.ஆனால் அரசருக்கு புரியாத ஒரு மர்மம் என்னவெனில் புலவர் புளுகேந்தி அவர் மனைவி சமையலை பொறுக்கமுடியாமல் தான் அரண்மனையில் அரசனுடன் சேர்ந்து உண்டார் என்பது.
ஒரு நாள் அரசவையில் அரசன் புளுகேந்தியிடம் " என்ன புலவரே இப்போதெல்லாம் கவிதை ஒன்றையும் தாங்கள் கூறுவதில்லையே" என கேட்டபோது புலவர் "அரசரே, நான் தினம் ஒரு கவிதை படைத்து தான் வருகிறேன்.ஆனால் ஒவ்வொரு கவிதையும் அவ்வளவு அருமையாக இருக்கிறது என்று கடவுளே இரவோடு இரவாக வந்து எடுத்து சென்றுவிடுகிறார்." என்றார். அரசனும் மற்ற சபையோரும் இதை கேட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். அம்மாஞ்சி அரசன் கேட்டான் " அதெப்படி புலவரே, நீர் எழுதிய கவிதையை ஆண்டவன் எடுத்து செல்கிறார்? இதை நான் மட்டும் இல்லை இந்த அவையில் உள்ள ஒருவரும் நம்பமாட்டார்கள்" என்று கடுமையாக கூறினான். புளுகேந்தி " அரசரே, நீங்கள் வேண்டுமானால் எங்கள் வீட்டுக்கு வந்து பாருங்கள். நான் சொல்வது, உண்மையா பொய்யா என்று" என்றார். அரசன் " அப்படியா, நானே இன்று இரவு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். உங்கள் கவிதை எப்படி களவாடப்படுகிறது இன்று நானே பார்க்கிறேன்" என்றான்.
அன்று இரவு புளுகேந்தி புலவர் எட்டு இட்லியையும் சூடாக இரண்டு கிளாஸ் பாலையும் குடித்து விட்டு படுக்கை அறைக்கு சென்றார். அந்த நேரத்தில் அம்மாஞ்சி அரசரும் புலவர் வீட்டிற்கு தன் முக்கிய மந்திரியுடன் வழியில் உணவு கடையில் வயிறு புடைக்க ( ஓசியில்) முக்கிவிட்டு புலவர் வீடு வந்து சேர்ந்தனர். புலவர் தன் மனைவிக்கு இருவருக்கும் சூடாக பால் கொடுக்கும்படி அன்பான கட்டளை இட்டார். அரசர் " புலவரே, வரும் வழியில் வயிறு நிறைய சாப்பிட்டுத்தான் வந்தோம். எனவே பால் தேவை இல்லை " என்றபோது , முக்கிய மந்திரி " அரசே, இரவில் படுக்குமுன் நான் எப்போதும் பாலில் மஞ்சள் மிளகு கலந்து குடித்து விட்டுத்தான் படுப்பேன். அப்போது நல்ல சுகமான தூக்கம் வரும்" என்றபோது அரசரால் ஆவலை அடக்கமுடியவில்லை. " சரி புலவரே, உங்கள் விருப்பம் போல சூடான பாலை கொடுக்கலாம்" என்றார் அரசர்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் புலவரின் மனைவி ஒரு தட்டில் இரண்டு கிளாஸ் சூடான பாலை கொண்டுவந்து வைத்தாள். அந்த பாலில் ஒரு மூலிகையை கலந்தது புளுகேசிக்கும் அவர் மனைவிக்கு மட்டும் தான் தெரியும். மந்திரி கேட்டார் "இதில் கொஞ்சம் மஞ்சள் பொடியை தூவுங்கள், கூடவே கொஞ்சம் மிளகு பொடியையும் சேருங்கள்" என்றபோது புளுகேசி " எங்கள் வீட்டில் எங்கள் குல வழக்கப்படி மஞ்சள் மிளகு இவற்றையெல்லாம் சேர்ப்பது இல்லை. இதை குடித்து பாருங்கள். பிறகு நீங்களே சொல்வீர்கள்" என்றவுடன் அரசரும் மந்திரியும் ஒன்றும் சொல்லாமல் பாலை குடித்து முடித்தனர். இருவருமே பாலில் உள்ள இனிப்புடன் கூடிய நறுமண சுவையை வெகுவாக பாராட்டினார்கள். அடுத்த பத்து நிமிடங்களில் இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் வர ஆரம்பித்தது. புளுகேசியும் மந்திரியும் தரையில் பாய் போட்டு படுத்தனர். அரசருக்கு தன்னுடைய கட்டிலின் மீது படுக்கை விரித்து புலவர் " அரசே, இந்த மஞ்சத்தில் நீங்கள் படுத்து கொள்ளலாம்" என்றவுடன் அரசர் " இப்போது நீ உன் கவிதைகளை படைக்க துவங்குங்கள். கடவுள் எப்படி அவற்றை கொண்டு போகிறார் என்று நாங்கள் பார்க்கிறோம்" என்றார். புலவரும் மந்திரி பக்கத்தில் படுத்து கொண்டு கண்ணை மூடினார். அடுத்தும் இரண்டு நிமிடங்களில் அவர் வாயிலிருந்து கவிதைபோல ஏதோ வார்த்தைகள் வந்தது. அரசரும் மந்திரியும் வாயை பிளந்துக்கொண்டு அவர் வாயையே பார்த்தனர். அதே நேரத்தில் இருவருக்கும் தூக்கமும் கண்ணை சொருக ஆரம்பித்தது. புலவர் கவிதை போன்று எதையோ சொல்லும்போது இருவருக்கும் புலவரை சுற்றி ஏதோ வண்ண ஒளி படர்ந்தது போல் தெரிந்தது. புலவர் இருவரையும் கேட்டார் " என்ன கவனித்தீர்களா, நான் கவிதை உருவாகும்போது ஒளி வடிவில் கடவுள் வருவதை?". இருவரும் " ஆமாம்" என்றனர். அவர்களின் கண்கள் இப்போது நல்ல தூக்கத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தது. புலவர் மீண்டும் ஏதோ வாயசைத்தார் , அரசரும் மந்திரியும் அதையும் அரைகுறை தூக்க கலக்கத்தில் கண்டனர். அப்போதும் புலவரை ஒரு வண்ண ஒளி சூழ்வதை இருவரும் கண்டனர். அரசர் " நீங்கள் கவிதை படைக்கும்போது ஏதோ உங்களை சுற்றி நிகழ்கிறது " என்று சொன்னதை மந்திரியும் ஒப்புக்கொண்டார். அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவரும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தனர். காலையில் இருவரும் ஏழு மணி அளவில் தான் விழித்தனர், விழித்ததும் தாங்கள் எங்கிருக்கிறோம் என்று திருதிரு என்று முழித்தனர். பின்னர் இருவரும் சுதாரித்துக்கொண்டு வாய் கொப்பளித்துவிட்டு புலவர் மனைவி கொடுத்த சூடான காபியை குடித்துவிட்டு( அந்த காபியில் ஒருவித மூலிகை சொட்டை இட்டுதான் கொடுத்தாள்). அரண்மனை புறப்பட்டனர். அந்த சிறப்பு காபியின் விளைவு, இருவரும் சில மணி நேரங்களுக்கு யார் எதை சொன்னாலும் " ஆமாம், ஆமாம் " என்று கூறிய வண்ணம் இருந்தனர்.
புலவர் புளுகேசி குளித்து தயாராகி கொஞ்சம் சிற்றுண்டி அருந்திவிட்டு மூலிகை கலக்காத சூடான காபியை குடித்து விட்டு அரசவை சென்றார். அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அரசவை கூட்டப்பட்டது. அப்போது புலவர் " அரசரே, நீங்களும் மந்திரியும் நேற்று என் இல்லத்திற்கு வந்து நான் உருவாக்கும் கவிதைகளை கடவுள் எடுத்துக்கொண்டு செல்வதை நேரில் கண்டீர்கள் தானே? என வினவியபோது இருவரும் " ஆமாம் ஆமாம் நாங்கள் கண்கூடாக இதை பார்த்தோம் " என்று கூறியபோது அவையில் உள்ள அனைவரும் மிகவும் வியப்படைந்தனர். அவர்கள் அனைவரும் " புலவர் புளுகேசி வாழ்க, புலவர் புளுகேசி வாழ்க" என்று கோஷமிட்டனர். அரசன் " நான் இந்த அவையில் வீற்றிருக்கும்போது நீங்கள் எப்படி புலவரை வாழ்த்தி கோஷமிடலாம் ? என்று கோபத்துடன் கேட்டான்.அப்போது அங்குள்ளவர்கள் " அரசே, புளுகேசியின் கவிதைகளை இனிமேல் நாங்கள் கேட்கவேண்டாம் என்ற மகிழ்ச்சியில் தான் இந்த வாழ்த்து ஒலி" என்றபோது அரசர், மந்திரி இவர்களுடன் புலவர் புளுகேசியும் சேர்ந்து கொல்லென சிரித்தனர். அதன் பின்னர் அரசன் புளுகேசி புலவரை அரண்மனை மாட்டுத்தொழுவத்தின் நிர்வாகியாக அமர்த்திவிட்டான். புளுகேசி " ஆண்டவன் மூலிகை வடிவில் வந்து நம்மை காப்பாற்றிவிட்டார். அதே நேரத்தில் எனக்கு தகுந்த தண்டனையும் வழங்கி விட்டார். இனி என் .பல்சுவை நகைச்சுவை அரண்மனையில் செல்லுபடியாகாது. பல்சுவைக்கு பதில் பால்சுவை தான் அதிகரிக்கும்." என்றபோது அவர் மனைவியும் "நம்மிடம் உள்ள இரண்டு பசு மாடுகளையும் அரண்மனைக்கே நல்ல விலைக்கும் விற்றுவிடலாம். பாலும் நமக்கு செலவின்றி கிடைத்துவிடும் " என்றபோது புளுகேசி " இனி நான் புளுகேசி புலவர் அல்ல, ஓசிப்பால் பரதேசி" என்று நக்கல் அடித்தபோது அவன் மனைவி " என்பால் நீங்கள் காட்டிய அன்பால் இனி தினமும் நாம் பசும்பால் (மூலிகை இன்றி) குடித்து மகிழ்வோம் அகம் புறம் இவற்றின் இணைப்பால்" என்று புளுகேசியை தன்பால் இழுத்த வண்ணம் முனகினாள்.