இன்னிசை இருநூறு - வாழ்த்து 1

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரையில் விவேகபாநு பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது. இவர் அன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன் அவ்வப்பொழுது தம் மனத்தில் தோன்றும் நீதிகளையெல்லாம் பல இன்னிசை வெண்பாக்களாக எழுதி வைத்திருந்தார். ஒவ்வொரு வெண்பாவும் பண்டைய தமிழ் நூல்களைப் போல வேற்றுமொழிக் கலப்பின்றி தனித்தமிழ் மொழியால் யாக்கப் பெற்று சொற்சுவையும், பொருட்சுவையும் மிகுந்து விளங்குகின்றது.

அக்காலத்தில் இக்கவிகளையெல்லாம் கேட்ட கந்தசாமிக் கவிராயர், இவைகள் பெரிதும் பயன் தரவல்லன என்று கருதி, 200 வெண்பாக்களைத் தொகுத்து, இயன்றவரை பொருட்பொருத்தம் நோக்கி, 20 அதிகாரமாகச் செய்து இன்னிசை இருநூறு என்ற பெயருடன் 1904 ல் விவேகபாநு 4 வது தொகுதியில் வெளியிட்டார்.

முனைவர் பழ.சிதம்பரம் பதிப்பித்த ’அரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள்’ என்ற ஆய்வுப் புத்தகத்தில் ஒரு சில பாட்டுகள் மட்டும் எடுத்துக் காட்டாகக் காட்டப்படுகின்றன. ஆய்வாளர் முனைவர் பழ.சிதம்பரம் இப்பொழுது இல்லை.

2014 ல் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரி என்ற ஊருக்குச் சென்ற பொழுது, தமிழில் ஆய்வு மாணவியான அவர் மகளிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கி வந்தேன்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து ’இன்னிசை இருநூறு’ ஒளி நகல் மட்டுமே கிடைத்தது. இதில் ஒரு சில பாடல்களின் முதலெழுத்து சரியாகப் பதிவாகவில்லை. இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த முதற் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

பாடல் 1:

நன்னெறிமுந் நீரி னறிவென்னும் நாழியான்
இன்னிசை வெண்பா முகந்திசைப்ப எண்ணுதூஉம்
பொன்னிறத்து மால்விடைப் புத்தேள் இடம்பிரியா
அன்னை சிறுவ ரடி. 1

பொருளுரை:

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினையும் அடக்கியதாகிய நல்ல நடைமுறைப் பயிற்சிகள் என்னும் கடலினை, அளவில் காற்படியினுக்கு ஈடான என்னுடைய அறிவென்னும் படியினால், இனிய இசையையுடைய வெண்பாக்களாக, அள்ளிக் கொடுக்க (நினைத்து)

பொன்னினது நிறம்கொண்ட பெருமைக்குரியவனும், எருதை வாகனமாகக் கொண்டவனும், இடப்பாகத்தை விட்டுப் பிரியாத என்றும் புதுமையாக இருப்பவளான பார்வதி தேவியாகிய, அன்னையினது இரண்டு புதல்வர்களாகிய விநாயகப் பெருமான், முருகப் பெருமான் ஆகிய இருவர் பாதங்களையும் விரும்பித் தொழுகின்றேன்.

விளக்க உரை – திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

முனைவர் பழ.சிதம்பரம் தன் முனைவர் பட்ட ஆய்வாகிய ‘அரசஞ் சண்முகனாரின் இலக்கியங்கள்’ என்பதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

இதில் முதல் பாடலில், ‘நன்னெறியாகிய கடல் நீரில் அறிவு என்னும் நாழி கொண்டு முகந்து இன்னிசை வெண்பாவாகக் கூற திருமகள், திருமால், சிவபெருமான், உமையம்மை, விநாயகர், முருகன் ஆகிய அறுவர் திருவடிகளை எண்ணித் தொழுவதாகக் கூறுகிறார்.

இவ்வாறு, பல தெய்வ வணக்கத்தில் தொடங்கும் அரசஞ் சண்முகனார் மேல்தொடரும் பாடல்களில் இறைவனை அனைத்துப் பொருளாகவும் கொண்டு போற்றுகிறார் என்றும், ஐம்பூதங்கள், செங்கதிர்ச்செல்வன், திங்கள், நூல்கள், மழை, அறம், அன்பு ஆகியவற்றையும், நீத்தார், நாமகள், தாய், தந்தை, ஆசான் ஆகியோரையும் போற்றிக் கூறியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

பாடல் 1 ஐ மெல்லிசை வண்ணத்தில் அமைத்து பாடலாசிரியர் நூலைத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார் முனைவர் பழ.சிதம்பரம்.

வண்ணம் என்பது சொல் பாடலில் வரும் நடை நலத்தைக் குறிக்கும்.

மெல்லிசை வண்ணம் என்பது செய்யுளில் மெல்லின எழுத்துக்கள் மிகுதியாய்ப் பயின்று வருவதாகும்.

மூவகை எழுத்துகளில் ங, ஞ, ண, ந, ம, ன மெல்லின உயிர்மெய் எழுத்துகள்,

ங், ஞ், ண், ந், ம், ன் - மெல்லின மெய் எழுத்துகள்.

மெல்லிசை வண்ணப் பாடலுக்கு இன்னுமோர் உதாரணமாக நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்த ஒரு பாடல்:

பொன்னின் அன்ன புன்னைநுண் தாது
மணியின் அன்ன நெய்தலங் கழனி
மனவென உதிரும் மாநீர்ச் சேர்ப்ப..
மாண்வினை நெடுந்தேர் பூண்மணி ஒழிய
மம்மர் மாலை வாநீ
நன்மா மேனி நயந்தனை எனினே. - என்பதாகும்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (2-Apr-22, 9:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே