இன்னிசை இருநூறு - வாழ்த்து 2

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது. இவர் அன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன் அவ்வப்பொழுது தம் மனத்தில் தோன்றும் நீதிகளையெல்லாம் பல இன்னிசை வெண்பாக்களாக எழுதி வைத்திருந்தார். ஒவ்வொரு வெண்பாவும் பண்டைய தமிழ் நூல்களைப் போல வேற்றுமொழிக் கலப்பின்றி தனித்தமிழ் மொழியால் யாக்கப் பெற்று சொற்சுவையும், பொருட்சுவையும் மிகுந்து விளங்குகின்றது.
அக்காலத்தில் இக்கவிகளையெல்லாம் கேட்ட கந்தசாமிக் கவிராயர், இவைகள் பெரிதும் பயன் தரவல்லன என்று கருதி, 200 வெண்பாக்களைத் தொகுத்து, இயன்றவரை பொருட்பொருத்தம் நோக்கி, 20 அதிகாரமாகச் செய்து இன்னிசை இருநூறு என்ற பெயருடன் 1904 ல் விவேகபாநு 4 வது தொகுதியில் வெளியிட்டார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து ’இன்னிசை இருநூறு’ ஒளி நகல் மட்டுமே கிடைத்தது. இதில் ஒரு சில பாடல்களின் முதலெழுத்து சரியாகப் பதிவாகவில்லை. இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த இரண்டாம் பாடலின் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
பாடல் 2:
போற்றுதூஉந் தன்க ணுயிரெல்லாம் பூத்தொடுங்கத்
தோற்றம் அழிவின்றித் தோன்றுந் துகளிலியை
ஊற்றுக்கோ லென்ன வுயிர்த்துணை யாகமுன்
ஆற்றிப் பிறப்பறுக்கு மாறு. 2
துகளிலி – குற்றமில்லாதவன்
புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:
போற்றுதூஉம் உந்தன்கண் உயிரெல்லாம் பூத்து ஒடுங்கத்
தோற்றம் அழிவின்றித் தோன்றுந் துகள் இலியை
ஊற்றுக்கோல் என்ன உயிர்த்துணை யாகமுன்
ஆற்றிப் பிறப்பு அறுக்கும் ஆறு. 2
பொருளைப் புரிந்து கொள்ள கீழேயுள்ளவாறு கூட்ட வேண்டும்.
தோற்றம் அழிவின்றித் தோன்றுந் துகள் இலியை
ஊற்றுக்கோல் என்ன
உந்தன்கண் உயிரெல்லாம் பூத்து ஒடுங்க
உயிர்த்துணை யாகமுன் ஆற்றிப்
பிறப்பு அறுக்கும் ஆறு போற்றுதூஉம்.
தெளிவுரை:
ஊற்றிலிருந்து புறப்படும் நீரினைப் போல், உன்னுள்ளே உயிர்களெனப்படும் அனைத்தும், பூப்பதற்கு ஒப்பாகத் தோன்றியும், பின் குவிவது போல் ஒடுங்கியும் மறையும் தன்மை கண்டும், உயிர்களுக்கு முன்னால் கருணை காட்டிப் பிறப்பில்லா வாழ்வு நல்கும் தோற்றம், அழிவு இரண்டும் இல்லாத குற்றமற்றவனை, உனது செயற்பாடுகளை உணர்ந்தவனாகவும் பாடி நான் போற்றிப் புகழ்கின்றேன் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.
விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்.