பகைபழி தீச்சொல் சாக்காடு தீர்ந்தாற்போல் தீரா வரும் – ஏலாதி 25

நேரிசை வெண்பா

பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்
நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம்
சேர்ந்தாற் பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தாற்போற் றீரா வரும். 25

- ஏலாதி

பொருளுரை:

ஒருவர் தனக்கு எவ்வகையிலும் உரிமையில்லாத பொதுமகளிர் பாடுகின்ற இடத்தில் அணுகாமலும், அவர்கள் விரும்பியாடுகின்ற நாடகத்தைக் காணச் சேராமலும் விட்டுவிட வேண்டும்.

ஆராய்ந்து பார்த்தால், அப்பாடுமிடத்தையும் நாடகத்தையும் அணுகினால் பகையும் பழியும், தீமை பயக்கும் சொல்லும், சாவும் இல்லாதன போலிருந்து அவரை விடாது வரும்.

கருத்து:

பொதுமகளிருடைய பாட்டையும் ஆட்டத்தையும் கேட்பதும், காண்பதும் பகையும் பழியும் கடுஞ்சொல்லும் சாவும் விளைவிக்கும்.

பாத்து - பாகம்; பலர்க்கும் பொதுமையுடையரேயல்லாமல் ஒருவர்க்கே பிரிவினையுடையர் அல்லர் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-22, 8:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே