தந்நலமற்ற பெரியோர் தாயினை யொப்பர் – அறநெறிச்சாரம் 96
நேரிசை வெண்பா
காலொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப்
பாலொடு நெய்பெய்யும் தாயனையர் - சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிது நாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகு வார் 96
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
மிக அடங்கியிருக்குமாறு செய்யக் கருதி ஒவ்வொரு நாளும் அறத்தினைத் தாமாகவே வற்புறுத்திக் கூறி அடக்கியாளும் பெரியோர், காலையும் கையையும் ஆட்டாதவாறு இறுகப் பற்றிக் கொண்டு வாயைப் பிளந்து குழந்தைக்குப் பாலையும் ஆமணக்கு நெய்யையும் அருந்தத் தருகின்ற தாய்க்கு நேராவர்.
குறிப்பு:
ஒழுகுவார் தாயனையர் என்க. பிள்ளையை: உருபு மயக்கம்.
''வாய்வெறித்து'' எனவும் பாடம்; நெறித்தல் - சுண்டித் திறப்பித்தல்