சாலையில் உணர்ந்தேன்

இதோ இந்த நீண்ட சாலை
என் காதில் சொல்லிச் சென்றது,
நீ போக வேண்டிய தூரம் அதிகம் என்று...

சாலையோர மரங்கள்
பாடம் நடத்தியது,
என்னைப் போல் மற்றவர்களுக்கு நிழலாய்
இருந்து உதவு என்று...

சாலையின் கற்களும், முட்களும்
மனதோடு அறிவுரை பகர்ந்தது ,
உன் பாதையில்
முட்களை தூவுவோர் அதிகம்
தாண்டிச் செல் என்று ...

என்னை முந்திச் செல்லும்
வாகனங்கள் வாஞ்சை மொழியில் பேசின
உன்னை முந்திச் செல்ல
ஆயிரமாயிரபேர் வருவார்கள் என்று...

சாலைக் குறியீடுகளும்
தன் கடமைக்கு கட்டுப்பாடுகளை விதித்தன
இக்கட்டான சமயங்களில்
நில் கவனி முன்னேறு என்று...

வேகத்தடைகள் என்னோடு பேசி
ஒப்பந்தம் கொண்டன,
வாழ்க்கைக்கு வேகத்தோடு
நிதானமும் தேவையென்று ...

சாலையோர ஒளிர் கடைகள்
சாதுர்யமாய் கூறிச் சென்றன
உன் கவனத்தைச் சிதறடிக்க
பல ஏற்பாடுகள் உள்ளது
கவனமின்றி கடந்து செல்லென்று...

வளைந்து செல்லும் சாலை வலியுறுத்தியது
வாழ்வில் நீயும் கொஞ்சம்
வளைந்து கொடு என்று...

வாழ்க்கைப் பாடம் சாலையில்
உணர்ந்தேன்...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (19-Apr-22, 9:21 pm)
Tanglish : saalaiyil unarnthen
பார்வை : 126

மேலே