165 பிறர்மனை சேர்வோர் பேரும் கேடுறுவர் – பரத்தமை 9

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

உணர்வறுஞ் செல்வமும் உயர்வு மேயறுங்
குணமறுங் குலமறுங் கொடிய நோயெலாம்
அணவுறு நரகுறு(ம்) ஆயுள் தேயுமால்
கணமறு மாதர்தோள் கலக்குந் தூர்த்தர்க்கே. 9

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கண்ணிமைப் பொழுதும் அயல் பெண்டிர் தோளைச் சேரும் காமுகருக்கு அறிவு கெடும்; பொருளும் மேன்மையும் நீங்கும்; நல்ல குணங்கள் அழியும்; குடும்பம் ஒழியும்; கொடுமையான நோய்கள் எல்லாம் வந்து சேரும். நரகமும் எய்தும்; வாழ்நாளும் குன்றும்” என்றும் எச்சரிக்கிறார் இப்பாடலாசிரியர்.

அணவுறும் - பொருந்தும், சேரும்.
கலத்தல் - சேர்தல். தூர்த்தர் - காமுகர்.

1970 களில் நான் மருத்துவப் பணியில் சேர்ந்த பொழுது, பாலியல் நோய்களான கொனோரியா, சிபிலிஸ் தாக்குதலால் நோயாளிகள் வருவதுண்டு.

சிபிலிஸ் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பிறவி யிலேயே (Congenital syphilis) சிபிலிஸ் தாக்கத்துடன் பிறப்பதுண்டு.

கடந்த 10 – 20 ஆண்டுகளில் ‘எய்ட்ஸ்’ தாக்கத்தில் பாதிக்கப்படுவோர்க்கு தகுந்த மருத்துவ வசதி யில்லையென்றால் உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-22, 4:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே