166 கற்பிலாரைக் காத்தல் களவின் பின் காத்தலாம் – பரத்தமை 10

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து; நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்; விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

உவந்து தன்னுளத் தோங்கிய கற்பிலாச்
சிவந்த வாயுடைச் சேயிழை யைப்பதி
இவர்ந்து சேமஞ்செய் தெய்க்குதல் பட்டிகள்
கவர்ந்த பின்பொருட் காவலை யொக்குமே. 10

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மனமகிழ்ந்து தன் நெஞ்சத்தில் நிலைபெற்றுள்ள கற்பில்லாத சிவந்த இதழ்களை உடைய அணிகலனை யணிந்த பெண்ணை, அவள் கணவன் விரும்பி, மக்களாலும் மதிலாலும் காத்து வருந்துவது, கள்வர்கள் செல்வப் பொருள்களைக் களவு செய்த பின், அப்பொருள்கள் நீங்காது இருப்பதாக நினைத்து, காத்துக் கொண்டிருக்கும் அறியாமைக்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

ஓங்கிய - நிலைபெற்றுள்ள,
சேயிழை - சிவந்த அணிகலனையணிந்த பெண். இவர்ந்து - விரும்பி. சேமம் - காவல்.
எய்க்குதல் - வருந்துதல். பட்டிகள் - கள்வர்.
கவர்ந்த - களவு செய்த.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-22, 4:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே