உங்களுக்காக ஒரு கடிதம் 7
அன்புத் தோழியே,
மாமியார் மருமகள் சண்டை, நாத்தனார் நாத்தனார் மன வருத்தங்கள்...கொஞ்ச நாளைக்கு தள்ளி வைப்போம். நேரம் வரும்போது மறுபடியும் கலந்தாய்வோம். மாற்றத்துக்கு முதல் அடிஎடுத்து வையுங்கள். நீங்களும் கூடிய விரைவில் மாமியாராகவோ...இல்லை நாத்தனாராகவோ ஆகப்போகிறீர்கள்.அதனால்தான் ஆனவர்களை விட்டுவிட்டு ஆகப்போகிறவர்களை முன்னிறுத்தி எழுதினேன்.
சரி, நடைமுறை பிரச்சனைக்கு வருவோம். இந்த கடிதம் முக்கியமாக 'அடோலசன்ஸ்' வயதில் இருக்கும், குறிப்பாக புதிதாய் வயதுக்கு வந்த பள்ளி மாணவிகளுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த குரூப்பில் இருக்கும் இளம் பெண்கள் பாதிக்கப் படுவது "அனீமியா " அதாவது " ரத்த சோகை " என்கிற குறைபாடைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி குறிப்புகள் எடுத்தபோது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது. நம் இந்தியத் திருநாட்டில் 68.4 % குழந்தைகளும், 66.4 % மகளிரும் " அனீமியா "வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இமாச்சல பிரதேசம் Dr.ராஜேந்திர பிராசாத் அரசு மருத்துவக்கல்லூரியில், சமுதாய நலத்துறையில் தலைமை மருத்துவராய் பணியாற்றும் Dr. சுனில் ரெய்னா அவர்களின் கூற்றுப்படி நம் பாரதத்தில் ரத்த சோகைக்கு முக்கிய காரணம் இரும்புசத்து மற்றும் வைட்டமின் B12 குறைபாடு. இது எதனால் பெண்களை பாதிக்கிறது என்றால்..மாதவிடாய் நாட்களில் அதிக ரத்த இழப்பும், கருத்தரித்தபோதும் பிரசவத்திற்குப்பின் குழந்தைக்கு பால் கொடுக்கின்றபோதும் இக்குறைபாடு அதிகம் காணப்படுகிறது. அதாவது இழப்பும், தேவை அதிகப்படுத்தலும் காரணமாக இருக்கிறது. சத்துள்ள ஆகார பற்றாக்குறை மற்றொரு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
என் சொந்த அனுபவத்தை உங்களோடு பகிர்வது முக்கியமென கருதி இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.
என் கிளினிக்கில் வரும் பள்ளிமாணவிகள் ...வயதுக்கு வந்து ஒரு வருடம் முதல் 3 ,4 வருடங்கள் முடிந்த குழந்தைகள் பொதுவான புகார்களுடன் வந்தார்கள்.அவர்களுடைய பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்களுடைய புகாரே,குழந்தை ஒழுங்காக வேளாவேளைக்கு சாப்பிடுவதில்லை...உடம்பும் பிடிக்கவில்லை...அதிக முடிகொட்டுதல்,எப்போதும் சோர்வாய்..கைகால் குடைச்சல் என்றும், படிப்பில் கவனக்குறைவும்,மதிப்பெண்கள் குறைவாக எடுக்கிறாள்...என்பதே பிரதானப் புகாராய் இருக்க, எனக்கென்னவோ இவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கின்ற ஒரு ஆதங்கம்...ஒரு ஆசை.
முடிந்த வரை எல்லோருக்கும் Hb% . அதாவது உடம்பில் எத்தனை சதவிகிதம் ரத்த அணுக்கள் இருக்கின்றன என்று அறிய சாதாரணமான ஒரு ரத்தப்பரிசோதனை செய்துப்பார்த்தேன்.ஆச்சரியப்படும் வகையில் 70 - 75 % மாணவிகளுக்கு ரத்தசோகை அதிகமாக இருக்க கண்டேன். இது என் ஆவலை மேலு தூண்டியது.
மேலும் தொடரும்.