திண்டுக்கல் வாகன விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

தும்பிக்கை வாகன நல்வினாய கன்தாளை
நம்பி நயந்து வணங்கினோர்க்கு - நம்துணையாய்
என்றும் அவனிருந்தே எல்லோரை யும்காப்பான்
என்றே வணங்கு மகிழ்ந்து! 1

பொங்கிடும் உற்சா கமுடனே வாகனத்தில்
மங்கல மாயமர்ந்தி ருக்கின்ற - எங்களது
தும்பிக்கை நாயகன் நல்வினாய கன்தாளை
நம்பி வணங்கு நயந்து! 2

- விநாயகர் பட உதவி - தினமலர்

மெய்யன் நடராஜ் • 13-Feb-2015 2:37 am

முக்கண்ணன் மைந்தனாம் மூசிக வாகனன்
தக்க தருணத்தில் காப்பானே! - அக்கடவுள்
தாள்போற்றி ஐயா எழுதும் கவிதைகள்
நாள்தோறும் பெய்யும் மழை.

அன்புள்ள நடராஜ்,

உங்கள் வெண்பா இயற்கையான அருவியோட்டம் போல இயல்பாகவே அமைந்திருக்கிறது. வாழ்த்துகள்.
இதில் வெண்பா எழுதும் நண்பர்களுக்கு ஒரு சிறு கருத்தைத் தெரிவிக்கிறேன்.

'அவலோகிடம்' இணைய தளத்தில் வெண்பாக்களை ஆராயும்பொழுது எந்த வகையான பாடல் என்றும், எந்த இடத்தில் தளை சரியாக அமையவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் மேற்கூறிய உங்கள் 'அருமையான' வெண்பாவை ஆராயும் பொழுது பல விகற்ப வெண்பா என்று வருகிறது. ஏனென்றால் இந்த 'மிக அருமையான' வெண்பாவில் தனிச் சொல்லைக் காண்பிக்க இரண்டாம் அடியில் அமைந்துள்ள மூன்றாம், நான்காம் சீருக்கிடையில் ஒரு கோடிட்டுக் காட்டாததுதான்.

இது ஒரு அருமையான இரு விகற்ப நேரிசை வெண்பா. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. நான் எதுகை மோனைக்காக சொற்களை, தேடித் தேடிச் சேர்க்கிறேன். மெய்யன் நடராஜ் மற்றும் சியாமளா ராஜசேகர் இருவரின் வெண்பாக்களில் சரளமாக அமைவதை உணர்கிறேன். நேரிசை வெண்பா என்பதைக் குறிக்க கண்டிப்பாக 7, 8 சீர்களுக்கிடையில் கோடிட்டுக் காண்பியுங்கள்.

தனிச்சொல் அமைந்திருந்தாலும், 3, 4 அடிகளில் எதுகை வேறு வேறாக அமைந்தால் இன்னிசை வெண்பாவாகி விடும்.

காளியப்பன் எசேக்கியல் • 14-Feb-2015 11:59 am

முக்கண்ணன் மைந்தனாம் மூசிக வாகனன்
தக்கபடி செய்வான் தயவினையே! - அக்கடவுள்
தாள்போற்றி அய்யா தருமிக் கவிதைகள்
நாள்தோறும் பெய்யும் மழை;

Dr.V.K.Kanniappan • 14-Feb-2015 1:19 pm
அங்(கு)அதன் என்று மாற்றிவிட்டேன்.

கவிதை மிக அருமை. இன்றைய புகழ்மாலை இரு பொருளைத் தருகிறது!? ஒன்று 'தரும் இக்' கவிதை, இன்னொன்று 'தருமி'க் கவிதை. இயற்கையிலேயே சிலேடை அமைந்து விட்டது. நானும் தருமி போலத்தான்.

நாம் ஒரு விகற்ப அல்லது இரு விகற்ப நேரிசை வெண்பா எழுதும் பொழுது 7, 8 சீர்களுக்கிடையில் கோடிட்டுக் காட்டவில்லையென்றால் இன்னிசை என்றே தளத்தில் தருகிறது. மெய்யன் நடராஜ் எழுதும் வெண்பாக்கள் மிகச் சிறப்பாகவே அமைகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-22, 2:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே