34 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 34
ஆன்மீக வழியில் அமைதி...
எழுத்தாளர் :பூ.சுப்ரமணியன்

உலகில் நாம் ஒரு பணி செய்யும்போது பொறுமையாகவும் மனதை ஒருமுகப்படுத்தி ஈடுபாட்டுடன் செய்யும்போதும் அந்தப் பணியில் எளிதில் வெற்றி பெறுவதற்கு முடியும். கல்வி கற்பதில், ஓவியம் வரைதல், மற்ற எந்தவிதமான செயல்பாடுகள் என்றாலும் அதில் மனம் ஒருமுகப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் செய்யும்போது வெற்றிகரமாக முன்னேற்றம் அடையலாம். இதற்கு மகாபாரதத்தில் வரும் ஒரு காட்சியை நினைத்து பார்த்தால் நன்கு விளங்கும்.

மகாபாரதக்கதையில் காணப்படும் ஒரு நிகழ்வை நினைத்துப் பார்த்தால் மனதை ஒருமுகப்படுத்துதல் என்றால் என்ன என்பது பற்றி நன்கு புரியும். தன்னோட மாணாக்கர்களுக்கு துரோணர் வில்வித்தை கற்றுக் கொடுக்கும்போது மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பறவையை சுட்டிக்காட்டி மரக்கிளையின் மீது என்ன தெரிகிறது என்று ஒவ்வொரு மாணாக்கரிடமும் கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக மரம் தெரிகிறது என்று கூறினார்கள். மரத்தின் கிளைகள் பூ காய் கனி கிளையில் அமர்ந்து இருக்கும் பறவை தெரிகிறது என்று கூறினார்கள்.

அவர் இதே கேள்வியை அர்ச்சுனனிடம் கேட்கும்போது “குருவே இப்போது நான் கையில் வைத்திருக்கும் வில்லில் நாண் ஏற்றி இருக்கும் இந்த அம்பின் கூர்மையான நுனியும், கிளையில் அமர்ந்து இருக்கும் பறவையினைத் தவிர வேறு ஒன்றும் எனது கண்களுக்குத் தெரியவில்லை என்று கூறினான். அதனால்தான் அர்ச்சுனன் வில்வித்தையில் சிறந்தவனாகத் திகழ முடிந்தது. நமது மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியில் செயல்பாட்டில் அர்ச்சுனன் போன்று நிலைப்பாடு இருந்தால்தான். ஆன்மீகத்தில் மட்டுமல்லாமல் எதிலும் நாம் எளிதில் வெற்றி காணலாம். அதாவது மன அமைதிக்கு பொறுமையுடனும் தீவிரமாகவும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

ஒருமுகப்படுத்தும் பயிற்சியின் மூலம் நம் மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், அந்த மனதை ஓரிடத்தில் ஒரு பொருளின் மீது நிலையாக வைப்பதற்கு ஆன்மீக வழியில் பழக வேண்டும். சிலபேர் மனதை கஷ்டப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் அந்த மனதினை ஒரு பொருளின்மீது நிலையாக வைக்காமல், அதன் போக்கில் விட்டு விடுவார்கள். இதனால் ஆன்மீக வாழ்வில் நமக்கு ஒரு பயனும் ஏற்படுவதில்லை. மனதினை கட்டுப்படுத்தி ஒரு பொருளின் மீது நிலையாக வைத்திருப்பதற்குப் பெயர்தான் ஆன்மீகத்தில் சமாதானம் ஆகும்.

மனதினை ஒருமுகப்படுத்துவது எப்படி என்றால் அதற்கு உபாயம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், மனதினை ஒருமுகப்படுத்தும் செயலில் நிலையாக வைத்துக்கொள்வதற்கு பலவிதமான ஆன்மீக வழியில் பயிற்சிகள் இருக்கின்றன. அதனை நாம் மேற்கொள்ள வேண்டும். கார், சைக்கிள் ஓட்டுவதற்கு வேண்டுமானால் அவற்றைப்பற்றி விளக்கமாக பள்ளியில் பாடமாக படித்தால் மட்டும் போதுமா? கார், சைக்கிள் போன்றவற்றை ஓட்டுவதற்கு பயிற்சி பெறவேண்டும். நீச்சல் பழக வேண்டுமானால் தண்ணீரில் விழுந்துதான் பழகவேண்டும்.

கார் ஓட்டுவதற்கு வேண்டுமென்றால் நாம் காரை மற்றவரின் துணை கொண்டு ஸ்ட்ரீங்கைப் பிடித்து ஓட்டி செய்முறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் நமது மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அதனை ஒரு பொருளின்மீது ஒருமுகப்படுத்துவதற்கு பொறுமையுடன் குரு கூறும் பயிற்சியினை கவனித்து அதனை தவறாமல் மேற்கொண்டு வர வேண்டும். ஆரம்ப பயிற்சியாக ஜபம் செய்து பழகும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஜபம், தியானம் பற்றி நாம் ஆன்மீக நூல்களைப் படிப்பதாலோ, அவைகளைப் பற்றி ஆன்மீக அன்பர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ மட்டும் மனதை ஒருமுகப்படுத்துவதற்கு முடியாது.

மனம் ஒருமுகப்படுத்துவது பற்றி அதன் தொடர்பாகவுள்ள விளக்கப் படங்களைக் கண்டு களிப்பதாலோ புத்தகங்கள் படிப்பதாலோ நமது மனதினை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முடியாது. நமது மனதினை ஒரு பொருளின்மீது ஒருமுகப்படுத்த வேண்டுமானால் தகுந்த குருவை நாடி அவர் கூறியபடி நாம் மனப்பயிற்சியை மேற்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தியானத்தின் பலனை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும். நமது மன அமைதிக்கு மனதை ஒருமுகப்படுத்துதல் முக்கிய பயிற்சியாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மனதுக்கு ஒரு பணியினைக் கொடுத்து அந்தப் பணியில் இருந்து மனம் விலகாமல் இருக்க வேண்டும் என்றால் ஜபம் செய்வது என்பது ஒரு பயிற்சியாகும். மனிதனுடைய மனம் ஒரு நொடிகூட ஓய்வில்லாமல் ஏதாவது ஒன்றினை நினைத்துக் கொண்டேதான் இருக்கும். உயிரை மேவிய உடலை வேண்டுமானால் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். தியானம் செய்யும்போது நமது மெய் அசையாமல் இருக்கலாம். ஆனால் நமது மனமானது நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அலைபாய்ந்து சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கும். சும்மா இருப்பது சுகம் என்று திருமூலர் கூறியுள்ளார். ஆனால் நாம் நினைப்பதுபோல் சும்மா இருப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

சும்மா இருப்பது என்றால் ஒரு செயலும் செய்யாமல் இருப்பது என்று ஆன்மீகத்தில் அர்த்தம் அல்ல. நமது மனம் எந்தவித சிந்தனையில்லாமல் வெறுமையாக இருக்க வேண்டும். நாம் ஒரு செயலும் செய்யாமல் கையைக் கட்டிக்கொண்டு இருந்து விடலாம் என்பது சும்மா இருப்பது என்பது அல்ல. மனதில் எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் இருப்பதுதான் மிகவும் கடினம். இதனைத்தான் திருமூலர் ‘சும்மா இருந்து சுகம் காணுவது எக்காலம் மனமே’ என்று புலம்பித் தவிக்கிறார். நமது உடலும் உள்ளமும் ஒன்றும் செய்யாமல் தெளிந்த நீரோடை போன்று அசையாமல் இருக்க வேண்டும்.

சஞ்சலப்படும் மனதினை மனிதன் தன்னோட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஜபம் தியானம் போன்ற ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புலனடக்கம், இந்திரிய ஒழுக்கம் போன்றவை மனித மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். மனித மனதை மனம் ஒரு குரங்கு என்று கவிஞர்கள், மனதினை கிளைக்கு கிளைக்குத் தாவும் குரங்குக்கு ஒப்பிட்டு பாடியுள்ளனர். மனம் எதைப் பற்றியும் நினைக்க வேண்டாம் என்று நினைத்தாலும் காரணமில்லாமல் எதையாவது நினைத்துக்கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் இந்த மனதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் மனதிற்கு ஜபம் ஒரு முக்கிய சாதனையாகும். அப்படி ஜபம் செய்யும்போது முழுமன ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

நம்மில் பலபேர் உதடுகள் ஜெபத்தில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் ஆனால் அவர்கள் மனம் அதன்போக்கில் எங்கெங்கோ எண்ணங்கள் போய்க்கொண்டிருக்கும். சாதுவிடம் ஒருவர் நான் ஒரு வருடமாக விடாமல் சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். மற்றொருவர் நான் தேவாரம் திருவாசகம் பக்தியுடன் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னோட மனதினை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கூறினார். மனம் ஒருமுகப்படுத்த வேண்டுமானால் எண்ணமும் செயலும் ஒன்றுபோல் ஓரிடத்தில் குவிய வேண்டும். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மனதிடம் ஜபம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தினை ஒதுக்கீடு செய்வதற்கு மனதிடம் மனதிற்குள் கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும். இது மனதிற்கு ஒரு மனப்பயிற்சி ஆகும். மனதில் வைராக்கியத்துடன் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜபம் செய்து பூஜை செய்யவேண்டும் என்று மனதிற்குள் நினைத்து, அதனை தவறாமல் நாள்தோறும் செயல்படுத்தினால் நம்மையறியாமலே குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணியினை செய்யும்படி நம் மனமே நம்மைத் தூண்டிவிடும். இந்த இடத்தில் நாம் மனதின் வழியில் செல்லாமல் அறிவின் வழியில் சென்றால் நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும்.

பொதுவாக நமது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தால் நாம் நினைத்த பணியினை முழுமையாக செய்து முடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். ஒரு சித்திரம் வரைய வேண்டுமானால் ஓவியனின் மனம் ஓவியம் வரையும்போது அதில் ஈடுபாட்டுடன் வரைய வேண்டும். ஏதோவொரு காரணத்தினால் ஓவியனின் மனம் சஞ்சலத்தில் இருக்கும்போது ஓவியம் வரைவதில் அவன் கவனம் செலுத்துவதற்கு முடியாது. இதனைத்தான் பெரியவர்கள் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை போல்தான் என்பதை தாங்கள் நினைத்தபடி ஒரு செயல் செய்ய முடியவில்லை என்றால் இப்படி கூறுவார்கள்.

எனவே மனதை ஒருமுகப்படுத்துவதர்க்கு ஜபம் என்ற சாதனையை தவறாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மனதிற்கு குறிப்பிட்ட நேரத்தில் ஜபம் செய்ய வேண்டும் என்று முழுமையாக அதற்கு கட்டளையிட்டு விட்டால் அந்த நேரத்தில் எத்தகைய சூழ்நிலையில் இருந்தால்கூட ஜபம் செய்வதற்கு நமது மனமே நம்மைத் தூண்டி விடும். நமது மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மிடம் இந்திரிய ஒழுக்கம் மனக்கட்டுப்பாடு இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் முழுமையாகக் கடைபிடித்தால் நாம் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வரவேண்டும். ஒருவர் எந்தப் பணியினை மேற்கொண்டாலும் அவர் மனம் முழு ஈடுபாட்டுடன் செய்தால்தான் வெற்றி பெறமுடியும். இதனை மனதில் நிலை நிறுத்தி வாழ்ந்தால் நாம் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும்.

நம்பிக்கை எங்கு முழுமையாக இருக்கிறதோ அங்குதான் நமது மனம் குவியும் ஒருமுகப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் கஷ்டப்படும்போது பெரியவர் ஒருவர் அவனுக்கு ஆறுதல் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெரியவர் கூறும் வார்த்தைகளை அவன் நம்பிக்கையுடன் காது கொடுத்து கவனமுடன் கேட்டால்தான் அவன் மனம் சமாதானம் அடையும். அதற்குமாறாக அந்தப் பெரியவர் ஒருமணிநேரம் அறிவுரைகள் கூறினாலும் கேட்பவர் நம்பிக்கையுடன் பெரியவர் கூறுவதைக் கவனமுடன் கேட்கவில்லையெனில் அவனது மனம் சஞ்சலத்தில் இருந்து மீள்வதற்கு முடியாது.

ஒருவர் கூறும் அறிவுரைகளை மனம் ஒருமுகப்படுத்தி கவனமுடன் நம்பிக்கையுடன் கேட்டால்தான் அந்த அறிவுரையைப்பற்றி நாம் புரிந்து செயல்புரிவதற்கு முடியும். அதன் மூலம் நமது மனம் அமைதி அடையும். இந்த இடத்தில் நம்பிக்கை அவசியம் வேண்டும் என்பதை நாம் புரிந்துகொண்டால், மனம் ஒருமுகப்படும். அவன் விரும்பும் தேடும் அமைதியும் மனதிற்கு கிடைக்கும். நமது வீட்டில்கூட பெரியவர்கள் சிலர் ‘நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் அவன் கேட்க மாட்டேன் என்கிறானே’ என்று அலுத்துக் கொள்வார்கள். அதற்கு காரணம் பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்பவர்கள் மனம் கவனமுடன் கேட்கவில்லையென்றுதான் அர்த்தம் ஆகும்.

சிலபேர் தாங்கள் செய்யும் செயல்களுக்கு தங்கள் மனதிற்குள்ளேயே அந்த செயலுக்கு ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். அவர்கள் எடுத்த முடிவைத் தவிர எந்த முடிவினையும் மற்றொருவர் அவருக்குத் தீர்வாகக் கூறினாலும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. நன்மை தரக்கூடிய தீர்வாகக்கூட இருந்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே பிறர் கூறும் கருத்துக்களை அறிவுரைகளை மனம் ஒருமுகப்படுத்தி அவர் என்ன நம்மிடம் கூற வருகிறார் என்பதை முதலில் கேட்டுப் பழக வேண்டும். அவ்வாறு இருந்தால் நமது மனம் ஓரளவு மனம் அமைதி அடையும்.

ஒருவர் கூறும் முடிவு அல்லது கருத்துக்கள் தனக்கு உடன்பாடாக இருந்தால் ஏற்றுக்கொள்வதற்கு தயங்கக்கூடாது. இதில் சிலபேர் கவுரவம் பார்த்துக்கொண்டு மற்றவர்கள் கூறும் கருத்துக்கள் உடன்பாடாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவதற்கு மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படி ஒரு தீர்வு அல்லது மன அமைதி காணமுடியும். எந்தப்பணி செய்தாலும் சிரத்தை இல்லையென்றால் மனதை ஒருமுகப்படுத்தி செய்யவில்லையெனில் அந்தப் பணியில் வெற்றி காண்பது அரிது. ஒருவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜபம் தியானம் மற்றும் தங்கள் இஷ்ட தெய்வத்தின் சுலோகங்கள், தேவாரம் திருவாசகம் விநாயகர் அகவல் போன்றவற்றை பற்றி படிக்கலாம்.

அடிக்கடி ஆன்மீக சொற்பொழிவுகளில் மற்றும் சத்சங்கங்களில் கலந்து கொள்ளலாம். அதனால் நமது மனம் வேண்டாத எண்ணங்களிலிருந்து அப்போது ஈடுபடுவதை தவிர்க்க முடியும். ஜபம் மந்திரம் கூறினாலும் மன ஈடுபாட்டுடன் கூற வேண்டும். சிலபேர் மந்திரங்களோ ஜபமோ சுலோகங்களோ அவர்களின் உதடுகள் சொல்லிக்கொண்டு இருக்கும். ஆனால் அவர் மனம் பலவித எண்ணங்களில் உலக விசயங்களை நினைத்துக் கொண்டு இருக்கும். இதற்கு நாம் பலவிதமான ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எதிலும், விடாமுயற்சி நம்பிக்கை முழு ஈடுபாடு இருந்தால் நாம் தேடும் ஆன்மீக வழியில் அமைதி கிடைக்கும். நமது மனதை ஒருமுகப்படுத்துவதனால் நமக்கு என்ன பயன் அல்லது பலன்கள் கிடைக்கும்? (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (2-May-22, 6:48 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 38

மேலே