தீண்டாதே தீயவை நூல் அறிமுகம்டாக்டர் அவ்வைமெய்கண்டான் நூலாசிரியர் கவிஞர் இராஇரவி
தீண்டாதே தீயவை!'
நூல் அறிமுகம்:டாக்டர் அவ்வை.மெய்கண்டான்!
நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி!
வெளியீடு;வானதி பதிப்பகம். 23.தீனதயாளு தெரு,தியாகராயர் நகர்,சென்னை 600017.பக்கங்கள் 60.விலை ரூபாய் 50.பேச 044 24342810.
கவியருவி கவிஞர் இரா. இரவி அவர்களின் ‘தீண்டாதே தீயவை’ என்ற கவிதை நூல் படித்துப் பெரிதும் மனம் மகிழ்ந்தேன்.
பல அறிவுரைகளையும், அறவுரைகளையும் காற்றில் பறக்க விட்டுக் கண்போன போக்கில், தீயப்பழக்கங்களால் பாதை மாறி செல்லும் இளைய சமுதாயத்தைத் திருத்த வேண்டிய நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட கவிமுத்துக்கள் கோர்க்கப்பட்ட சீரிய முத்துச்சரமாக விளங்குகிறது இக்கவிமாலை.
“தீங்கினும் தீங்கு மது! தீண்டாதே என்றும் மது!” எனக் கவிநயத்தோடு கூறும் இரவி அவர்களின் சொல்லோவியங்கள் இளைஞர்கள் பலர் மனதில் கல்வெட்டுகளாய்ப் பதிய வேண்டியவை.
மது, புகையிலை, சூதாட்டம், குளிர்பானக் குடுவைகள் என இன்றைய சமுதாயக் கேடுகளை வெளிச்சமிட்டுக் காட்டி கவிதைகளால் நல்லதொரு இக்கால இளைஞர்களுக்கு முக்கியத் தேவையாக முன் வைத்துள்ளார் இரா. இரவி அவர்கள்.
அவரின் நல்லெண்ணத்தை, சொற்சிக்கனங்களோடு செதுக்கப்பட்ட கவிதையடிகள், நல்வாழ்க்கைப் பெற உதவும் ஏணிப்படிகள். அனைவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் கருத்துக் கருவூலங்கள்.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கூறியது போல, ‘மொழியின் உட்சக்தி முழுவதையும் கண்டறிந்து வெளிப்படுத்தி சொற்களின் அபூர்வமான சேர்க்கையால் அர்த்தமான வழிகாட்டுதல்களுக்காக இறுக்கமாக எழுதிக் காட்டியிருக்கும் இவரின் இந்தக் கவிதை நூல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்.