வலியார்மற் றொன்றானும் உய்யார் - நீதிநெறி விளக்கம் 96
நேரிசை வெண்பா
மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப
வலியார்மற் றொன்றானும் உய்யார் - நிலைதப்பி
நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும்
உய்யுமால் உய்யா பிற. 96
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நிலை தவறி கனமில்லாத பொருள்கள் விரைவில் விழமாட்டா, ஒருவேளை விழுந்தாலும் பிழைக்கும்; கனமான பொருள்கள் நிலை கெட்டு விழுந்தால் பிழைக்க மாட்டா;
அதுபோல, சிறியோர் தம்நிலையினின்று தவறினும் ஒரு வழியாக பிழைத்துக் கொள்வர்; பெரியோர் (தம் நிலை தவறினால்) வேறு எந்த வகையாலும் பிழைக்கமாட்டார்.
விளக்கம்:
மெலியார், வலியார் என்றது இங்கே முறையே இல்லறத்தாரையும் துறவிகளையும் நோக்கிற்று.
சிறியர் நிலைதவறின் அவர் கீழோராகையால் அவர்நிலை தவறினதை உலகம் நன்கறியாது:
பெரியாரோவெனின் தன்னிலை கெட்டால் உலகெலாம் அது பரவும். ஆகலின், பின்பு அவர்கள் பெருமையடைதல் அரிது. 'நிலைதப' என்றும் பாடம்.
கருத்து:
மேனிலையிலுள்ளார் அந்நிலை தவறின் பின் ஒரு வழியானும் உய்தலரிது.