இசையாத போலினும் மேலையோர் செய்கை வசையாகா - நீதிநெறி விளக்கம் 97
இன்னிசை வெண்பா
இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசையாகா மற்றையோர்க் கல்லால் - பசுவேட்டுத்
தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே
ஊனோம்பி ஊன்றின் பவர் 97
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
முனிவர்களாகிய பெரியோர் செய்கை (சில நேரங்களில்) பிறர் கொள்கைக்குப் பொருத்தம் இல்லாததாக யிருந்தாலும், சிறியோர்க்கன்றி (அவர் போன்ற பெரியோர்க்கு) குற்றமாகாது.
உலகின் (நலங்கருதிப்) பசுவைப் படைத்து முத்தீ வேள்வி செய்து மழை பெய்தலைச் செய்விக்கும் வேள்வியாசிரியரை (தமது) உடம்பைப் பாதுகாக்க வேண்டி (வேறோர் உயிரின்) இறைச்சியைத் தின்பவர்கள் ஒப்பாவார்களா? ஆகமாட்டார்கள்.
விளக்கம்:
முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினியம், வேட்டு – பசு, வேள்விக்குரிய உயிர்களுக்குப் பொதுப் பெயர். மேலையோர் - முனிவர்.
யானைமதப் பட்டா லலங்கார மாஞ்சிறுநாய்
தானுமதப் பட்டாற் சரியாமோ - ஞானி
தடைமீறி னாலுஞ் சரியாகும் கன்மி
நடைமீறில் ஆகாது காண்.
- ஒழிவிலொடுக்கம்
கருத்து:
பெரியோர் சில சமயங்களில் தீச்செயல்கள் புரிந்தாலும் அவற்றாலும் உலகுக்கு நன்மையே பிறக்குமாகையால் அவை பழிக்கப்படா.