என்ன கிழித்துவிடீர்கள்

ஒரு சின்ன சாதாரண நிகழ்வு தான். ஆனால், அது நகைச்சுவையுடன் கொடுத்த ஒரு பாடமோ , அடாடா!
ஒரு அருமையான காலையில், என் மனைவியுடன் அரை மணிக்கு மேல், இனிய இயற்கை காட்சிகளை கண்ட வண்ணம் செல்லாத தெருக்களினூடே நடந்துவிட்டு, அன்று ஞாயிறு என்பதால், குளிப்பதற்கு முன்னாலேயே, அருகில் ஏதாவது நல்ல ஒரு ஹோட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டு செல்லலாம் என்று சொன்னபோது , என் மனைவியும் சரி என்று சொல்லவே, ஏற்கெனவே சாப்பிட்டு , ருசி பரவாயில்லை என்று சான்றிதழ் தந்த ஒரு ஹோட்டலை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தோம். ஒரு சந்தில் நடந்து வந்து மெயின் ரோடுக்கு வருவதற்கு முன்பாக, எதிர்பாராத விதமாக அங்கே மால்குடி கபே என்ற சிறிய ஹோட்டலை கண்டோம். வழக்கமாகவே புதிய சைவ ஹோட்டல் என்றால் நாங்கள் அங்கே சென்று சாப்பிட்டு அங்கு உணவின் ருசி எப்படி இருக்கிறது என்று எடை போட்டுவிடுவோம். எங்களுக்கு பிடித்தமாதிரி இருந்தால், அவ்வப்போது அந்த ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவோம். அந்த வகையில், இந்த மால்குடி கபேவை பார்த்து விட்டு, அதனுள் நுழைந்துவிட்டோம். மிகவும் சிறிய ஹோட்டல். அங்கே சூடாக என்ன இருக்கிறது என்று கேட்டபோது இட்லி , பொங்கல் , பூரி என்று சொல்லிக்கொண்டே போனார், அங்கே பணிசெய்யும் பெண்மணி. முதலில் இட்லி ஆர்டர் செய்தோம்.இட்லி வந்ததும் நான் தொட்டுப்பார்த்து விட்டு "சூடு இல்லையே" என்று சொல்லிவிட்டு , இட்லியை எடுத்துப்போக சொல்லிவிட்டேன். என் மனைவி அப்படி இல்லை, ஆர்டர் சொல்லிவிட்டால், சூடு இல்லை என்றாலும் சகித்துக்கொண்டு சாப்பிடுபவள் . எனவே, அவள் இட்லியை சாப்பிட ஆரம்பித்தாள் . அதன் பிறகு, பொங்கல் சூடாக இருக்கும் என்று அந்த பெண்மணி சொன்னதால் , பொங்கலுக்கு ஆர்டர் செய்தோம். பொங்கல் மேசையில் வந்தபோது , மிகவும் சூடு குறைவாகவே இருந்தது. நான் அந்த பெண்மணியிடம் சொன்னேன் " என்னை நான் பிறந்த வீட்டில், நெருப்புக்கோழி என்பார்கள். அடுப்பில், சூடான சட்டியில் கேசரி இனிப்பை என் அம்மா செய்து முடிக்கும் தருணத்தில் , என் கையால் அதை எடுத்து அப்படியே வாயில் போட்டுக்கொள்வேன்" என்று சொல்லிவிட்டு , இந்தத்தடவை பொங்கலை, சட்னி சாம்பாருடன் சாப்பிட்டு முடித்தேன். அப்போது அந்த பெண் என் மனைவியிடம் " இவரை என் வீட்டிற்கு கூடி வாருங்கள், நன்றாக சுட சுட உணவு செய்து கொடுக்கிறேன்" என்றபோது மனைவியுடன் நானும் சேர்ந்து சிரித்தேன். அதன் பின்னர் , அந்த ஹோட்டலில் மாட்டியிருந்த , தேதி கிழிக்கும் காலண்டரை பார்த்தேன். அன்று தேதி 22 மே. ஆனால், காலண்டரில் தேதி 21 தான் இருந்தது. நான் அந்த ஹோட்டல் பெண்மணியிடம் சொல்லிவிட்டு 21 தேதியை கிழித்து விட்டு, அருகில் உள்ள குப்பை தொட்டியில், கிழித்த காகிதத்தை போட்டேன். அந்த பெண்மணி என் மனைவியிடம் சொன்னாள் " இன்று யாரவது உங்களை , 'உன் கணவர் என்ன பெரிதாய் செய்து கிழித்து விட்டார்? 'என்று கேட்டால் 'ஹோட்டலில் காலண்டரில் தேதியை கிழித்தார்' என்று சொல்லலாம் என்றபோது, நானும் என் மனைவியும் மீண்டும் சிரித்தோம். நான் நினைத்தேன் "என்ன ஒரு நகைச்சுவை உணர்வு இந்த பெண்ணுக்கு" என்று. பிறகு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் நுழைந்தவுடன், நான் எங்கள் வீட்டு தேதி ஷீட் காலண்டரை பார்த்தேன். அதில் தேதி 20 மே என்று இருந்தது. உடனே என் மனைவியிடம் அதை காண்பித்தேன். " இதை தான் சொல்வது , பிறர் குற்றத்தை சுட்டி காட்டுகையில், நாம் சரியாக இருக்கோமா என்று ஒரு முறை எண்ணி பார்க்க வேண்டும்" என்று கிண்டலாக என் மனைவி கூறியபோது, என்ன செய்வது, இரண்டு தேதிகளை கிழித்து விட்டு மனைவியிடம் "பார் , இன்று காலையிலேயே எவ்வளவு கிழித்துவிட்டேன்" என்று சொல்லி அசட்டு சிறப்பு சிரித்தேன். நகைச்சுவை சிரிக்கமட்டும் வைப்பதில்லை, சிந்திக்கவும் வைக்கிறது என்ற கருத்து அன்று மேலும் வலுவானது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-May-22, 11:27 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 251

மேலே