மதுரை என்றால் இனிக்கும் தமிழ் கவிஞர் இராஇரவி

மதுரை என்றால் இனிக்கும் தமிழ்!

கவிஞர் இரா.இரவி !

******

மதுரையின் தமிழ்மொழி உச்சரிப்பு மகத்தானது
மாநிலம் முழுவதும் பேசும் மொழிகளில் சிறப்பானது

கலைஉலகில் வெற்றிபெற்றோர் மதுரைக்காரர்கள்
காரணம் கன்னித்தமிழை அழகாக உச்சரித்தது

பட்டிமன்ற நடுவர்களாக வென்றவர்கள் மதுரை
பட்டிதொட்டிக்குப் புரியும்வண்ணம் இனிய தமிழ் பேசியது

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என்பதால்
சங்கத்தமிழ் மறக்காத முன்னோர் வழிவந்தோர்

மதுரைக்கென்றே சில சொல்லாட்சிகள் உண்டு
மதுரைக்காரர்கள் அனைவரும் அறிவர் நன்று.

உலகத் தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள ஊர் மதுரை
உலகப்புகழ் பெற்ற திருக்குறள் அரங்கேறியதும் மதுரை

பல்லாயிரம் ஆண்டுகளாக எழுத்தறிவுள்ள மதுரை
பல புலவர்களை தமிழுக்கு தந்திட்ட மதுரை

தமிங்கிலம் நோய் இல்லவே இல்லாத மதுரை
தமிழைத் தமிழாகப் பேசிடும் தமிழர் வாழும் மதுரை

பாதையில் காய் விற்கும் பாட்டி கூட உச்சரிப்பாள்
பெரியார் பேருந்து நிலையம் என்று தெளிவாக

நான்காம் தமிழ்ச்சங்கம் உயிர்ப்போடுள்ள மதுரை
நட்புக்கு மதிப்பளித்து வாழும் மட்டற்ற மதுரை

மதம் பாராமல் மாப்பிள்ளை மச்சான் என அழைக்கும் மதுரை
சாதி பாராமல் சகோதரர்களாக வாழும் மதுரை

மதுரை என்றாலே இனிக்கும் தமிழ்
இனிக்கும் தமிழ் என்றாலே நம்ம மதுரை

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (27-May-22, 12:35 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 75

மேலே