அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல் - பழமொழி நானூறு 117

இன்னிசை வெண்பா

தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல். 117

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெற்ற தாயாலேயாயினும் (அன்றித்) தந்தையாலேயாயினும் மிகுத்துக் கூறப்படுதல் இல்லாது தாமே தம் வாயால் உயர்த்திக் கூறிக்கொள்பவர்களைப் பிறர் புகழ்ந்து கூறுதல் துன்பம் இல்லையாயினும் அடுப்பின் பக்கலில் முடங்கியிருக்கும் நாயைப் புலி யென்று கூறுதலோடு ஒக்கும்.

கருத்து:

தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது.

விளக்கம்:

தம் மக்கள் செய்த தீச்செயல்களை மறைத்து உயர்வாகக் கூறும் இயல்புடையார் தம் தாய் தந்தையராகலான், 'தாயானும் தந்தையாலானும்' எனக் கூறப்பட்டது.

அவர்களிடமும் உயர்வு பெறார் எனவே, கொடியர் என்பது பெறப்படும்.

அறிவிலார் இல்லாதன கூறிப் புகழ்ந்து கொள்ளலின் அவரைப் புகழ்வதற்கு அவர்க்குள்ளனவற்றை வருந்தி ஆராய்ந்து கூறுதல் வேண்டா; இல்லாதன கூறினும் ஏற்றுக் கொள்வர் என்பார், 'ஏத்துதல் நோயின்று' என்றார். நாய் என்பது இகழ்ச்சிக் குறிப்பு.

'அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-22, 10:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே