அரங்கேறுமா

புதிதாய் கவிஎழுத - என்
புத்தியை கூர்மையாக்கி
பேனாவில் மைநிரப்பி
வானத்தை நோக்கி
அமைதியாய் உட்கார்ந்தேன்
வார்த்தைகள் தேடி...
ஆகா கிடைத்துவிட்டது
எதுகை...மோனை...
அடி...சீர்...தளை...நானும்
கவிஞனாகி விட்டேன்.
கவிஞனாகி விட்டேன்.
உள்ளம் குளிர்ந்தது..
உறக்கம் தொலைந்தது.

ஏதேதோ கிறுக்கினேன்.
அடித்தேன். திருத்தினேன்.
புதுப் புது வார்த்தைகள்
தேடித்தேடி எழுதினேன்.
எழுதியதை படித்துப்
பார்த்தேன். மலைத்தேன்.
நான் எழுதியதில்
புதிதாய் ஒன்றுமில்லை.
ஏற்கனவே எழுதியவைதான்

ஒன்றில் வெண்பா சிரித்தது.
மற்றொன்றில் வஞ்சிப்பா வஞ்சித்தது.
இன்னொன்றில் ஆசிரியர்ப்பா மிரட்டியது.
இன்னுமொன்றில் கலிப்பா கலகலத்தது.
ஒன்றைப் பார்த்தால்
நாலடியாரின் சாயல்..
மற்றொன்றை பார்த்தால்
எட்டுத்தொகையின் நகல்..
அடுத்ததில் வள்ளுவனின் குறள்.

மேலும் மேலும் எழுதினேன்.
சிலதில் பாரதி தெரிந்தான்.
மற்றதில் பட்டுக்கோட்டை கொதித்தான்.
பலதில் கண்ணதாசன் சிரித்தான்.
திரும்பிப் பார்த்தால்
வாலி கண்ணடித்தான்.
வைரமுத்துபோல் எழுத
நினைத்து தமிழ் வைரத்தால்
அறுபட்டு அவதியுற்றேன்.

என்னால் கவிஞனாகவே முடியாதா?
கேள்வியைப் பிடித்துக்கொண்டு கவலையுற்றேன்.
கவலைப் படாதே என்றொரு குரல்
என்னைத் தேற்றியது.
வேதனைபோக்கியது.
இதோ உரைநடை கவிதை
எழுதிப் பழகு.எண்ணத்தை
எளிமையாய் மற்றவரோடு
பகிர்ந்து மகிழு.
அந்த கரகர குரலின் காந்தம்
என்னை கவர்ந்தது.
துள்ளி எழுந்தேன்.
எழுதத் தொடங்கிவிட்டேன்.

மறுபடியும் ஓர் குழப்பம்.
நான் எழுதியது
ஏற்கனவே எழுதியதுபோல்..
என்னைத் தேடினேன்..
என் சுயத்தைத் தேடினேன்.
தெரியவில்லை
நான் கவிஞன்தானா?
என் கவியும் அரங்கேறுமா?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Jun-22, 8:54 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 228

மேலே