இடங்கழி யாளர் தொடர்பின்னா - இன்னா நாற்பது 11

இன்னிசை வெண்பா

உடம்பா டிலாத மனைவிதோ ளின்னா
இடனில் சிறியரோ (டி)யாத்தநண் பின்னா;
இடங்கழி யாளர் தொடர்பின்னா இன்னா
கடனுடையார் காணப் புகல் 11

இன்னா நாற்பது

பொருளுரை:

உளம் பொருந்துதல் இல்லாத மனைவியின் தோளைச் சேர்வது துன்பமாகும். விரிந்த உள்ளமும், பரந்த மனப்பான்மையும் இல்லாத சிறுமை உடையாருடன் கொள்ளும் நட்பு துன்பமாகும்; விடம் போலும் கள்ளுண்டு களிப்போர் சேர்க்கை துன்பமாகும்; கடன் கொடுத்தவர் பார்க்கும்படி அவர்க்கெதிரே செல்லுவது துன்பமாகும்.

இடங்கழி - உள்ளம் நெறிப்படாதோடுதல்; கழிகாமம் என்பது கருத்து. ‘இடங்கழி காமமொடடங்கானாகி' என்பது மணிமேகலை.

சிலர் ‘விடங்களியாளர்' எனப் பாடங்கொண்டு, விடம்போலும் கள்ளுண்டு களிப்போர் எனப் பொருள் கூறினர்.

‘கடன் கொண்டான் றோன்றப் பொருள் தோன்றும்' ஆகலின், ‘காணப்புகல் இன்னா' என்றார்; கடன்படுதல் என்பது கருத்தாகக் கொள்ள வேண்டும்.

(பாடம்) 1. மனைவி தொழி லின்னா.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-22, 4:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே