இல்லை இல்லை

சாதிசாதி என்றுசொல்லி சரித்திரமும் படைப்பதில்லை!
நீதியில்லை நெறியில்லை நிம்மதியும் இங்கில்லை !
சாதிக்கும் திறனில்லை !தரித்திரமும் இறப்பதில்லை !
போதிக்க புத்தனிங்கு புதுப்பிறப்புக் கொள்வானோ ?

மதம்சொல்லி மானுடத்தை மாற்றுகின்ற போதினிலும்
இதயமதில் அன்பொன்றும் ஊற்றெடுத்துப் பிறப்பதில்லை !
பதங்கொண்டு மனமெதுவும் பண்போடு இருப்பதில்லை
பதவிக்கு ஓடுகின்ற கூட்டமிங்கும் குறையதில்லை !

அன்புவழி இங்கில்லை ! ஆதிக்கம் குறையவில்லை !
நன்னெறிகள் ஓங்கவில்லை! நடமாட வழியுமில்லை !
துன்பங்கள் தொலையவில்லை! வெற்றிபெற வாய்பில்லை !
முன்வந்து உழைக்கின்ற மானுடர்கள் இல்லைஇல்லை !

பன்முகமாய் மனமில்லை !பணமதனை வெறுக்கவில்லை!
இன்பமென்று ஏதுமில்லை !எதிர்காலம் தெரியவில்லை!
வன்முறைக்குத் தீர்வுமில்லை!வஞ்சனைக்கு அழிவுமில்லை!
ஒன்றாகும் மனமில்லை!உறவாடும் எண்ணமில்லை !

நேர்வழியில் போகவில்லை! நிம்மதியும் அங்குயில்லை !
பார்வையிலே தூய்மையில்லை ! பாதகமும் குறையவில்லை
போர்க்குணமும் மாறவில்லை! போக்கிரிகள் ஒழியவில்லை
தீர்வினுக்கு முயற்சியில்லை ! தீவினைக்கும் பஞ்சமில்லை!

விலைவாசி குறையவில்லை !வேதனைகள் நீங்கவில்லை !
கொலைக்குணமும் மாறவில்லை !குற்றங்களும் மறையவில்லை!
நிலையான எண்ணமில்லை !நாட்டுயர்வு நாட்டமில்லை!
மலையாக்கும் முயற்சியில்லை ! மேல்நாடோ வெறுக்கவில்லை!
********************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jun-22, 7:13 pm)
பார்வை : 35

மேலே