செக்கிழுத்த செம்மல்

வீரநடை அவன்போட்டு
விடுதலைக்காய் போரிட்டு
தன்மானம் தனை வளர்த்தான் –அவன்
தளராமல் தின முழைத்தான் !

தாய்நாட்டைச் சுரண்டியிங்கு
தடைபலவும் போடுகின்ற
வெள்ளையனை அவன் எதிர்த்தான் –அவர்
வெளியேற வழி வகுத்தான் !

கப்பலினை ஓட்டிதினம்
கணக்கற்ற பொருள் குவிக்கும்
கொள்ளையினைத் தடுத்திட்டான் –அவர்
கதைமுடிக்க கப்பலினை இயக்கிட்டான்.

பொறுக்காத பரங்கியர்கள்
பொய்க்குற்றம் தனைச் சுமத்தி
சிறையினிலே அடைத்திட்டார் –அவன்
சிறகதனை ஒடித்திட்டார் .

சிறையினிலே செக்கிழுத்தும்
சோர்வுற்று உடல்மெலிந்தும்
வலிமையினை அவன் தொலைத்தான் –பின்
வீதியிலே அவன் அலைந்தான் !

சுயநலமாய் பலரிங்கே
பயந்திங்கு வாழ்ந்ததனால்
பொருள் தந்து உதவ வில்லை –இவன்
பசிதனையும் போக்கவில்லை !

செக்கிழுத்த செம்மலினை
கடன்தன்னில் மூழ்கடித்து
மீளாத துயர்தனிலே தள்ளிவிட்டார் –அவன்
ஏறிவந்த ஏணிதனைக் கொள்ளியிட்டார்.

***********

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jun-22, 7:11 pm)
பார்வை : 16

மேலே