ஓம் சரவணபவ பாகம் 1
அமிழ்து என்ற தமிழுக்கு, அழகான உருவமாய், பாலகன் நிற்கின்றாரே
அழகுடன் வீரமும், அரிதாக சேர்ந்து, இன்று இரண்டுக்கும் பொருள் தந்தாரே.
நெற்றிக்கண் வெப்பத்தால், பிறந்தாலும் என்றும் உன், முகம் சாந்த நிலை கொண்டதே.
அப்பனுக்கு பாடம் சொன்ன, தந்தைகுரு, உன் அருள், என்றென்றும் நான் வேண்டுவேன்.
எதிரி என தெரிந்தும் அவன், திருந்த ஒரு வாய்ப்பு தந்த, கருணைக்கு தலை வணங்குவேன்.
தெய்வங்கள் போற்றிடும், சேனாதிபதியே, உன் திருவடியில் சரண் அடைந்தேன்.
மயில்வாகனம் ஏறி, கையில் வேல் கொண்ட உன், காட்சி என்றும் மனதில் இருக்கும்.
உன் கதைகள் கேட்கவும், உன் புகழை பாடவும், மனதில் என்றும் ஏக்கம் இருக்கும்.
ஆற்றலும் வீரமும், கட்டுக்குள் என் மதியும், இவைதான் நான் கேட்கும் வரமே
உன் கடைக்கண்கள் பார்வையால், என்னை பார்த்து அருள் தந்தால், என் நிலையும் உயர்ந்து விடுமே.
ஆறுமுக சாமியே, உன்னை காண தவம் செய்தேன், கருணை முகம் காட்டுவாயே.
உன்னை உணரும் நேரத்தில், பாவங்கள் நீங்கி நான், உன்னை சேர வரம் தருவாயே.