சினிமா கசக்கிறது
சினிமா கசக்கிறது
பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்த “நூற்பாலையில்” நான்கைந்து பெண்களாய் வேலை செய்து கொண்டிருக்கும் போது ‘பாவாயி’ ஒரு சினிமாவில் வந்த வசனத்தை உரக்க சொன்னாள்
யாருடி சொன்னா? எந்த படத்துல?.. பக்கத்தில் பஞ்சை பிரித்தபடி கேட்டு கொண்டிருந்த செங்கமலம் இவளிடம் கேட்டாள்
போனவாரம் வந்துச்சு பாரு, நாகராசன் நடிச்ச படம், அதுல கதாநாயகிய பார்த்து இப்படி கேப்பாரு.
எப்படி போனே? நாம் எல்லாரும் ஒண்ணாத்தானே இருந்தோம், கூட்டத்தில் ஒருத்தி வியப்பாய் கேட்டாள்.
க்கூம்… அன்னைக்கு மதியானம் வயித்து வலி வந்து படுத்துகிட்டிருந்தன் பாரு, கூட்டிட்டு போற வேன் வந்து, நீங்க எல்லாம் என்னை உட்டுட்டு போனீங்களே..
அன்னைக்கு மதியம் ஷிப்டுக்கு வந்துட்டியேடி, வந்துட்டா..அவளையே திருப்பி கேட்டாள், அது எப்படிறீ அங்கிருந்து தியேட்டருக்கு போயி படம் பார்த்து, இங்க வரமுடியும்.
சிரித்தாள், யாருடி இவ, தியேட்டருக்கு போனாத்தானா, நம்ம கிட்ட இருக்கற செல்போன்ல லோடு பண்ணி கொடுத்தான் சகா.
டீ உனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி ஆளுங்க கிடைக்குதோ..
பொறாமை படாத, உன் செல்போனுக்கு அனுப்பி வைக்கிறேன், இராத்திரி உட்கார்ந்து பார்த்துகிட்டிரு. ஐயோ,,வேணாம், இங்க இருக்கற வேலையில போய் படுத்தா போதுமுன்னு ஆயிடுது.
அப்புறமென்ன, அத்துடன் அந்த பேச்சு முடிந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் வந்த காட்சிகளும் வசனங்களும், ‘பாவாயின்’ வாயில் இருந்து வந்து கொண்டுதான் இருந்தன. அவளால் சினிமா பேச்சை தவிர வேறு ஒன்றும் பேச முடிவதில்லை
அந்த கூட்டத்தில், மற்ற பெண்கள் இரகசியமாய் பாவாயிக்கு வைத்திருக்கும் பெயர் “சினிமா பைத்தியம்”.
அவளுக்கும் தெரியும், தன்னை “சினிமா பைத்தியம்” என்று இவர்கள் அழைப்பது, கண்டு கொள்ளமாட்டாள். அதற்கும் ஏதோ ஒரு சினிமா வசனத்தைதான் எடுத்து காட்டுவாள்.
அன்று விடுமுறை, அந்த பெண்கள் ஹாஸ்டலில் அன்றுதான் நிம்மதியான குளியல், துவைத்தல், இத்யாதி..இத்யாதி… மதியம் அசைவ சாப்பாடு, மதியம் மேல் வெளியே போய் விட்டு வரலாம், இரவு பத்து மணிக்குள் வந்து விடவேண்டும்.
வெளியே வந்தவுடன், அந்த பரபரப்பான நகரம், அதில் இவர்கள் சுதந்திர பறவைகளாய் எண்ணிக்கொண்டு “இறக்கை கட்டி பறக்கலாமா” என்னும் மன எழுச்சியில் இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்களை சுற்றி நூற்பாலையில்,வேலை செய்து கொண்டு, அடிக்கடி இவர்களையும் வட்டமிட்டு கொண்டிருக்கும் இளவட்டங்கள், இந்த இளைஞிகள் சுதந்திர தாகத்தில் பறக்க நினைப்பதை மோப்பமிட்டு வந்த இளவட்டங்கள், இவர்களை அப்படியே ஓரம் கட்டி அழைத்து போவார்கள்.
அவர்களுக்கும் “நூற்பாலையில்” வாரம் முழுக்க முதுகை ஒடிக்கும் வேலை, இப்படி ஜோடியாய் இரண்டு மூன்று மணி நேரம் சுற்றுவதை பெரிய பாக்கியமாக கூட கருதுவார்கள். அதே நேரம் ஏதோ ஒரு தியேட்டரில் படம் பார்க்க வரிசையில் பாவாயியும் , மற்றும் நான்கைந்து கூட்டாளிகளும் நின்றிருப்பார்கள். இவர்கள் ஜோடியாய் ஊர் சுற்றுவதை விட படம் பார்ப்பதை விரும்புபவர்கள்.
அன்று ஹாஸ்டலில் இருந்து மில்லுக்கு அழைத்து செல்ல வேன் வந்து விட்டது, எல்லோரும் வண்டி அருகில் வர, கேட்டு வாசலில் இருந்து “பாவாயி” பாவாயி உற்சாக குரல்கள். சட்டென திரும்பிவள் கேட் வாசலில் அப்பனும் அம்மாளும் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்.
ஏய், அம்மா, சந்தோசத்தில் அவர்களை நோக்கி ஓட காலடி எடுத்து வைத்தவளை, இதா..நீ வேலைக்கு வர்றியா இல்லையா? அழைக்க வந்த வேனின் டிரைவர் கேட்டான், நான் இன்னைக்கு நான் லீவுன்னு மேஸ்திரி கிட்ட சொல்லிடு, எங்கப்பனும் அம்மாளும் வந்திருக்காகன்னு சொல்லிடு.
க்கும்..இதுதான் என் வேலையா? சலித்து கொண்டே வண்டியை எடுத்து வெளியே சென்றான். அதன் பின்னரே, அவள் கேட்டருகே வந்து அம்மாவை கட்டி பிடித்து கொண்டாள்.
என்னம்மா திடீருன்னு வந்துருக்கே?
உனக்கு ஒரு மாப்பிள்ளை வந்துருக்குடி, நிச்சயம் பண்ணறதுக்கு அவசரப்படறாங்க, அதான் உன்னைய கூட்டிட்டு போலாமுன்னு வந்துருக்கோம்.
நூற்பாலையின் முதலாளி இவளின் பெற்றோர் கையில் தொகையை கொடுத்து விட்டு உங்க புள்ளைக்கு கலியாணம் முடிச்சுட்டாலும்,அவளுக்கும், அவ வூட்டுக்காரனுக்கும் வேலை வேணுமுன்னா இங்கயே வர சொல்லிடுங்க.
சரிங்க முதலாளி பதவிசாய் தலையாட்டினர் பாவாயின் பெற்றோர்.
கல்யாணம் முடிந்த முதல் நாள் இரவில் பாவாயிக்கு தாலி கட்டியவன் சினிமா பற்றியும், அதில் நடித்த கதாநாயகிகளின் உடையையும், அது காட்டிய கவர்ச்சியையும், உடலையும், அது மாதிரி நீ..வர்ணித்து பேச ஆரம்பித்தான்.
பாவாயிக்கு முதன் முதலாக சினிமா பேச்சு கசக்க ஆரம்பித்திருந்தது.