இரும்பன்1
பட்சிகள் சத்தமிட
புலர்ந்த காலை!
காட்சிகள் என்றும் போல்
மாற்றம் எதிலுமில்லை!
ஆர்ப்பரித்த விழிப்பு மணியின்
தலையில் தட்டி
அயர்ந்த கண்கள் தேய்த்து
உள்ளங்கை பார்த்து
கிடந்த படுக்கை சுருட்டி
மெல்ல எழுந்து
காலைப் பணிகள் முடித்து
கவர்ந்த ஆடையுடுத்தி
ஈரம் சொட்டிய கூந்தலுலர்த்தி
நெற்றித் திலகமிட்டு
இறை வணக்கஞ் செலுத்தி
ஆடியில் முகங் காண
மை தீட்ட சொன்னது மனது
அதை உடன் செய்தது புத்தி
உதட்டோரப் புன்னகையுடன்
உவகை கொண்டது உள்ளம்...
அகக் களிப்பு முகத்தில் தெரிய
தோழிகள் பரிகாசிக்க
ஓட்டமும் நடையுமாக சென்று
அலுவலகப் பேருந்தேறி
இருக்கையில் அமர்ந்து
மெல்ல விழிகள் மூடினேன்
புத்துணர்வின் காரணம்
யாதென அறிய நினைத்து
பின் அது தொடரட்டுமென
மெல்லிசையை ஒலிக்க விட்டு
பாடல் வரிகளில் ஒன்றி விட்டேன்
"எங்கேயா பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்"
பாடலில் இலயித்துக் கொண்டே
பல காத தூரம் சென்று
பார்க்காத சோலை தன்னில்
பறவையாய் சிறகை விரிக்க
பரவிய சுகந்தம் சுவாசம் தொடுமுன்
நிழலென யெவரோ
தொடர்வதாய் யுணர
சற்றே தணித்து
சுற்றும் காண ஏங்கியது கண்கள்
அந்நிழல் தொடர வேண்டியது நெஞ்சம்...
தோள் மீது யாரோ தட்ட
நினைவுகள் மீண்டும் திரும்ப
கண்கள் அகல விரிய
என்னுள் சிரித்து
எவரும் பாராமல்
தலையில் தட்டிக் கொண்டே
கீழிறங்கி நடந்தேன்...
மின் விரயந் தடுக்க
மாடிப் படியேற யெத்தனித்து
முதற் படியிலே பாத மிடர
மின்தூக்கி முன் நின்றேன்
அறிந்த முகங்கள்
அறியா மக்கள்
யாவருக்குமா யொரு
மொத்தப் புன்னகை தந்து
உள்ளேறி நின்றேன்
இயந்திரக் கதவு மெல்ல
மூடி மீண்டும் திறக்க
நிழல் நிஜமானது!
சுகந்தம் சுவாசம் கலந்தது!!!
கருப்பு சட்டை
காந்தக் கண்கள்
செதுக்கிய செவிகள்
நேர்த்தியான மூக்கு
படிந்த சிகை
புன்னகை யொன்றிய இதழ்கள்
மெல்லிய தாடி அதனுடன்
பொருந்திய மீசை - என்
ஆறடி அழகன்!!!
மீண்டும் ஒலித்தது
"எங்கேயா பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்"!!!
-- ராஜி அருண்
#இரும்பன் #இரும்பன்1