இரும்பன்2
மின்தூக்கி என்னை
விண்ணில் ஏற்றிவிட
வானவில் தோரணம்
வாயில் நிரப்ப
நீல வானம்
கம்பளம் விரிக்க
வெண் மேகம்
பன்னீர் தெளிக்க
ஆகாய ஊர்வலம்
அரங்கேறி ஓய்ந்தது
ஈரிரு தளப் பயணத்தில்!
பின் நின்ற சிலரின்
சலசல ஓசையில்
சுயம்வந்து சேர
சுதாகரித்து
வெளி வந்து நின்றேன்!!!
விரிந்த விழிகள்
இமைக்க மறுக்க
இதயம் யெங்கோ
துள்ளிக் குதிக்க
செல்லும் பாதையில்
மெய் மட்டும் போக
செய்வ தறியாமல்
பணியிடம் சேர்ந்தேன்!!
விழி மூடி யமர்ந்து
நினைவு திருப்ப
கண்டவை யாவும்
மெய்யாயிருக்க
நெஞ்சம் ஏங்க
நின்னைக் கடந்தவன்
எங்கென வென்று
சித்தம் தெளிந்து
அறிவு வினவ
நொடிக்கும் பொழுதில்
பரவசம் விலகி
பரபரப் பெந்தன்
தேகம் பற்ற
தளம் முழுதும் சுற்றி
அகப்படா நிலையில் - மீண்டும்
மின்தூக்கி முன் நின்றேன்!
நிழல் மட்டும்
எஞ்சி நிற்க
இதயம் ஏனோ
கனந்து போக
விழிகள் இரண்டும்
என்னவன் முகங் காண
ஏக்கம் கொள்ள
நெஞ்சில் பதிந்த
சித்திரமாய்
அவன் முகம்
கண் முன் விரிய
இதழோரப் புன்னகையுடன்
இருக்கை சேர்ந்து
திரையை சொடுக்கி அன்றைய
பணிகளில் ஆழ்ந்தேன்!
பணி நிமித்த
கலந்துரையாடல்
நண்பர்களுடனான
தேநீர் அரட்டைகள்
எதிலும் மனது
இணைய மறுக்க
நாட்கள் வாரங்களாக
காலம் மட்டும்
அதன் வழி கடந்தது!
முடியாத பகல்கள்
விடியாத இரவுகள் என
நாட்கள் பல சென்றுவிட
நினைவில் நின்றவன்
கனவில் மட்டும் தோன்ற
அன்று கண்டதும்
கனவா யிருக்குமென
தோழிகள் பகடி பேச
மீண்டும் வருவானென
உறுதி கொண்டது உள்ளம்!
வாரயிறுதி மாலை
மொட்டை மாடித் தோட்டம்
பூத்துக் குலுங்கிய செடிகள்
நான் ரசிக்கும் செவ்வானம்
கடந்து செல்லும் மேகக் கூட்டம்
இதனூடே மனக்கண் தோன்றும்
என்னவன் முகம்!
மௌனத்தில் ஆழ்ந்திருக்க
எங்கோ கேட்டது யென்
நினைவில் பதிந்துவிட்ட
புல்லட் ஓசை!
சேய் கண்ட குழவியென
'அப்பா' யென ஓடி
ஓசை கேள் திசை பார்க்க
இதய மொரு முறை
நின்று துடித்தது!
வெள்ளை சட்டை
குளிர் கண்ணாடி
திண் தோள்கள்
வலிய கரங்கள்
நெடிய தோற்றம்
சிறிதும் மாசற்ற வண்டி
அதனை செலுத்தும் தொனி
என் தந்தையின் சாயல்.....
மீண்டும் அவன் !
எனைக் கவர்ந்த காராளன்!!
இது கனவல்ல!!!!
- ராஜி அருண்
#இரும்பன் #இரும்பன்2