இரும்பன்3

கண்டதும் காதல்..
வெறுங் கூற்றென் றிருந்தேன்!
காவியக் காதல்...
கவிஞனின் கற்பனை யென்றேன்!!
வினாடி கடந்தவனை
தினம் தேடும் என் விழிகள்
விலகாமல் ஆயுள் வரை
வாழ்ந்திருக்க ஏக்கங் கொள்ள
கண்ணாடி பிம்பங் கூட
எள்ளி நகையாடி விட
என்ன சொல்ல என் நிலையை?

பணியிடத்தில் மட்டும்
தேடியிருக்க இன்று
புல்லட் வரும் சாலை தோறும்
தேடலுற்றேன்!
கூவி யழைக்கப் பெயரில்லை
தேடிச் செல்ல ஊரில்லை - அவன்
எதிர் துருவம் சென்றாலும்
மறந்துவிடும் எண்ணமில்லை!

வழக்கங்களில் மாற்றங் கண்டு
கேலி பேசும் தோழிகள்
வரன் தேடும் அம்மாவின்
அன்றாடக் கூற்றுகள்
கணினி மொழியில் தினம்
வடிக்கும் மென்பொருட்கள்
மாதம் தவறாமல் ஊர்ப்பயணம்
மனதை திடமாக்கும் தியானம்
உடலை வலுவாக்கும் உடற்பயிற்சி
இதனூடே தினந் தொடரும்
என் தேடல்!!

வேலை நிமித்தம்
வெளிநாடு செல்ல வேண்டும்
வேண்டாமென மனஞ் சொல்ல
போய் வாயென புத்தி யுரைக்க
பயண ஏற்பாடு துரிதமாக
புறப்படும் நாளும் வந்துசேர
நண்பர்கள் உறவினர்களிடம்
விடைபெற்றுச் சென்றேன்!!

முதல் விமானப் பயணம்!
பயணச்சீட்டு காண்பித்து
பயண அனுமதிச் சீட்டு வாங்கி
அயல்தேச நுழைவுச்சான்று சரிபார்த்து
பாதுகாப்பு சோதனை கடந்து
பயணிகள் காத்திருப் படைந்தேன்!
இருக்கையில் அமர்ந்து
மெல்ல விழிகள் மூட
சோதனைகள் கடந்து
சாதனைகள் விரிவதா யுணர்ந்தேன்!

ஒலிப்பெருக்கி
பயணிகளை யழைக்க
வரிசையில் சேர்ந்து
விமான மடைந்து
இருக்கை யெண் சரிபார்த்து
விமான பணிப்பெண் வழிகாட்ட
கைப்பையை மேலே வைத்து
சன்னலோர இருக்கையி லமர்ந்தேன்!!

கைப்பேசி யெடுத்து
அப்பாவை யழைத்து
விமானமேறிய சேதி சொல்லி
அழைப்பைத் துண்டிக்க
'அவன்' நினைவு வந்தது!
கனவிலும் அவன் நினைவே
நினைவிலும் அவன் முகமே!!!

அருகில் எவரோ வந்தமர
விழிகள் திறந்து மெல்ல நோக்க
இதயத் துடிப்பு நின்றதா யுணர்ந்தேன்!!!

கருநீல சட்டை
ஜீன்சு பேண்ட்
அதற்கேற்ற காலணி
வசீகரத் தோற்றம்
வாசனைத் திரவியம்
இரும்புக் கரங்கள்
அதனை மெருகேற்றுங் காப்பு!
என் இதயங் கொண்ட 'இரும்பன்'!!!

காவியக் காதல் மெய்தானோ(?)!!

- ராஜி அருண்

#இரும்பன் #இரும்பன்3

எழுதியவர் : ராஜி அருண் (4-Jul-22, 3:24 pm)
சேர்த்தது : ராஜராஜேஸ்வரி
பார்வை : 38

மேலே