இரும்பன்4

அவன் விழியோடு என் விழிகள்!
மெலிதாய் ஒரு புன்னகை,
அதுனூடே ஒரு 'ஹலோ'!
கவர்ச்சி விசையால்
காந்த மீர்க்கும் துகளானேன்!!

அன்னிச்சை செயலாக
பதில் புன்னகையுடன்
மறுமொழி கூற யெத்தனிக்க
வார்த்தை ஒலி வடிவாக மறுக்க
உதடு மட்டும் அசைந்தது..

இது மெய் தானா?
இவன் அவன் தானா(!)???

கண்கள் அழுந்த மூடி
விரல்கள் இறுகக் கோர்த்து
சன்னலோரம் திரும்பிட
இதயத் துடிப்பு இருமடங்காக
இரத்த நாளங்கள் மேலும் விரிந்து
கன்னச் சிவப்பு முகமெங்கும் பரவ
குளிர்ந்த தேகம் வெம்மை காண
வியர்வைத் துளிகள் திரண்டு தவழ
நா வரண்டு உயிர்வளி குறைய
மெல்ல எழுந்து ஓய்விடம் சென்றேன்!

ஆழ்ந்து சுவாசித்து
ஆசுவாசப் படுத்தி
முகத்தில் நீர் தெளித்து
ஆடியில் முகங் காண
நாணம் மேலோங்கி
தேகம் சிலிர்த்து விட
பரவசத்தில் திளைத்திருந்தேன்!

'ஹலோ' சொல்லிப் பார்த்தேன்
வார்த்தை வாய்வழி வந்தது
முன்னம் மௌனித்ததை நொந்து
மீண்டும் பேச ஒத்திகை பார்த்து
சரிந்த கூந்தல் ஒதுக்கி
கலைந்த மையை சரிசெய்து
சற்று நிதானித்து இருக்கை சேர்ந்தேன்!

அவன் தொலைபேசி அழைப்பில்...
இடப்புறம் திரும்ப திராணியின்றி
சன்னல் வழியே வெளியில் நோக்க
அங்கும் தெரிந்தது அவனது பிம்பம்!

நேர்த்தியான சிகை
கூர்ந்து நோக்கும் கண்கள்
வரிசைப் பற்கள்
சற்றும் சிதறாத பேச்சு
வசீகரப் புன்னகை
அதை மெருகூட்டும் மீசை
என்னை ரசிக்க வைத்த எழிலன்!

விமானம் புறப்படத் தயாரானது!
முதற் பயணம்
சிறிது பயம்
நிறைய உவகை
அருகில் 'அவன்'
உள்ளம் பூரித்துக் கிடந்தது...

விமானம் விண் நோக்கிச் சீற
செவிக ளடைத்துக் கொள்ள
கைகளால் பற்றிக் கொண்டே
தரை நோக்கிப் பார்த்தேன்
ஊர் ரம்மியமாகத் தெரிந்தது
நிமிடங்களில் ஊர் மறைந்து
சிறு சிறு புள்ளிகளானது
விமானம் சமநிலை யடைந்தும்
பற்றிய காதுகளை விடவில்லை!

இப்பயணம் புதிதென வறிந்து
மறுமுறை செவிப்பொறி மாட்ட
அறிவுரை கொடுத்தான்
மீண்டும் வார்த்தை ஒலியிழக்க
தலையை மட்டும் அசைத்தேன்...

புன்முறுவலுடன்
தன்னை அறிமுகப் படுத்திக்
கையை நீட்ட
நானும் நீட்டினேன்...

- ராஜி அருண்

#இரும்பன் #இரும்பன்4

எழுதியவர் : ராஜி அருண் (4-Jul-22, 3:25 pm)
சேர்த்தது : ராஜராஜேஸ்வரி
பார்வை : 49

மேலே