உணர்ந்த போது
உணர்ந்த போது
நடுக்காட்டில் திகு திகுவென நெருப்பு எரிந்து கொண்டிருக்க பேரலில் வைக்கப்பட்டிருந்த சாராயம் கொதிக்கும் போதே அடித்த புளித்த வாடைக்கு குமரேசு இன்னைக்கு இராத்திரி ஏதோ ஒண்ணு வரத்தான் போகுது அப்படீன்னு நினைச்சான். அது மாதிரியே அன்னைக்கு இராத்திரி நடந்திருச்சு
எலேய் குமரேசு, இன்னைக்கு ரவைக்கு நீ படுத்துக்க, காலையில ஆளுங்களை கூட்டிட்டு வந்து சரக்க எடுத்துட்டு போயிடலாம். இவன் தலையில் மூணு பேரலு சாராய ஊறலை பாத்துக்க சொல்லிட்டு போயிட்டான் அவன் முதலாளி மாசாணி.
மரத்துல உயரமா பரண் வச்சு அதுல படுத்துட்டிருந்த குமரேசு மூஞ்சியில கொசு ஒண்ணு கடிச்சதை தூக்கத்துலயே தாடையில ஓங்கி அடிச்சான். சே..சனியன் தூங்க விடுதுங்களா? தனக்குள் முணங்கியவன், மரத்துக்கு கீழ் புஸ்..புஸ்..பலமா மூச்சு விடற சத்தம் கேட்டவுடனே ஐயோ நாம நினைச்சது சரியா போச்சு திடுக்குன்னு விழிப்பு வர பரண்ல இருந்து தலைய குனிஞ்சு பார்த்தான்.
அந்த கும்மிருட்டுல ஒண்ணுமே கண்ணுக்கு தெரியலை ஆனா சர்..சர்ன்னு பேரலுக்குள்ள இருந்து சாராயத்தை உறிஞ்சற சத்தம் மட்டும் நல்லா கேட்டுச்சு. பயத்துல முடி எல்லாம் நட்டுகிட்டு நின்னுது. இப்ப கொஞ்சம் கொஞ்சமா பார்வைக்கு தெளிவா தெரிய ஆரம்பிச்சுது. கருப்பு மலையாட்டம் நாலு யானைக சாராயம் வச்சிருந்த பேரலை உறிஞ்சு உறிஞ்சு குடிச்சிட்டு இருந்துச்சு. அடுத்து என்ன நடக்கும் அப்படீங்கறது அவனுக்கு புரிஞ்சது. நல்லா போதை ஏறிடுச்சுன்னா இந்த நாலும் ஒரே ஆட்டமா ஆட ஆரம்பிச்சிடும். சுத்தி இருக்கற மரங்களை எல்லாம் ஒடிச்சு, வளைச்சு, வேரோட புடுங்கி வீச ஆரம்பிச்சிடும்.
சத்தம் காட்டாம இறங்கி ஓடலாமுன்னு நினைச்சாலும், அந்த கும்மிருட்டுல இவன் கீழே இறங்கினாலே மனுச வாசம் அதுக்கு அடிக்க ஆரம்பிச்சிடும். அப்புறம். நினைக்கும் போதே உயிரோட இருப்போம் இல்லையாங்கறதை விட கை வேற கால் வேற தனித்தனியா பிச்சு ஏறிஞ்சிடுமே..
எதுவுமே தோன்றாமல் மூச்சு கூட சத்தமாய் விட பயந்து கொண்டு திக் பிரமையுடன் உட்கார்ந்திருந்தான் குமரேசு..
பேரல்கள் உருளும் சத்தம். எல்லாத்தையும் உறிஞ்சு விட்டது போலிருக்கிறது, இனி அடுத்து, நினைக்கும் போதே போதை வெறியில் யானைகள் பிளிற ஆரம்பித்து விட்டது. மாறி மாறி இவைகள் பிளிற குமரேசு அப்படியே இருளோடு இருளாய் பரண் மேல் படுத்து கிடந்தான்.
சட புட வென்று மர கிளைகள் ஒடியும் சத்தம் முன்னெச்சரிக்கையாக பேரல்கள் இருக்குமிடத்திலிருந்து பத்தடி தாண்டி கொஞ்சம் உயரமாகவே பரண் போட்டு கொடுத்திருந்தான் மாசாணி. இரவுக்கு இரண்டு பேராவது காவல் இருப்பார்கள். இன்றைக்கு கூட இருக்கற காளியப்பன் சம்சாரத்துக்கு உடம்பு முடியலையின்னு வரலை. முதலாளியே கூட இருப்பான்னு பார்த்தா அவன் இவனை சாட்டி விட்டுட்டு போயிட்டான்.
இரண்டு கருங்குன்றுகள் இவன் இருக்கும் மரம் நோக்கி நகர்வதை கண்டவன், இனி தாமதித்தால் மரத்தோடு சேர்த்து பிடுங்கி வீசிவிடும். என்ன ஆனாலும் சரி அவை இங்கு வருவதற்கு முன்னால் இறங்கி விடவேண்டும். பயத்தில் கால் எங்கு வைக்கிறோம் என்றே தெரியவில்லை. தடுமாறி தடுமாறி மரத்தை பிடித்து தரையில் இறங்கியவன் சத்தம் காட்டாமல் அப்படியே நகர்ந்தான்.
இந்த காட்டுக்குள் வரும் ஒத்தை அடி பாதை ஒன்று ஆறு மாதமாய் வந்து வந்து பழக்கமாகி இருந்தது. அந்த தடத்தை குத்து மதிப்பாய் கணித்து, அவ்வப் பொழுது பின்னால் பார்த்து கொண்டே ஊரை பார்த்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான்.
நடு இரவில் கதவை டொம் என்று தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்த மாசாணி எதிரில் குமரேசு நின்ற கோலத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டான்.
வாடே உள்ளே, நாலு நாளா காய்ச்சுன சரக்கு, உம். முணங்கியவன், சரி இங்கன படுத்துக்க, காலாம்பற பேசுவோம். உள் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான்.
குமரேசுவுக்கு நடுக்கமே இன்னும் தீரவில்லை. யானையிடம் எப்படியோ தப்பிவிட்டோம் இப்படி நினைத்தாலும் நடுக்கம் மட்டும் இன்னும் தீரவில்லை. அப்படியே குத்து காலிட்டு உட்கார்ந்தவன் அரை மணி நேரத்தில் படக்கென்று சாய்ந்து விட்டான்.
காலையில் மாசாணி சம்சாரம் வள்ளி கத்தி கொண்டிருப்பதை கேட்டுத்தான் குமரேசுவுக்கு விழிப்பு வந்தது.
பாவம் வாயில்லாத பூச்சியாட்டம் இருக்கான், அவனை கொண்டு போய் உன் ஈன தொழில்ல இழுத்து உட்டுட்டு, நடுக்காட்டுல தனியா உட்டுட்டு வந்திருக்கயே, என்ன மனுசன் நீ
படுத்தவாறே தலையை ஒருக்களித்து பார்த்தான், மாசாணி தலைமேல் கை வைச்சு உக்காந்திருந்தான்.
சும்மா கத்தாதே, எனக்கென்ன தெரியும், ராவுல ஆனை வருமுன்னு. இன்னைக்கு சரக்கு எடுக்க வருவானுங்க, என்ன சொல்ல போறேன்னு இருக்கேன், இவ வேற, நேரம் காலம் தெரியாம வாயிற்குள் முணு முணுத்தாலும் குமரேசுவுக்கும் கேட்டது. வாசலில் நின்று கொண்டிருந்த வள்ளிக்கு கேட்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. காரணம் அவள் அடுத்து சொன்ன விஷய்ம் குமரேசு சம்பந்தபட்டது.
இந்தா பாருய்யா இன்னைக்கே இந்த பயலை கூட்டிட்டு போயி அவக மாமன் வூட்டுல வுட்டுட்டு வந்துடு, ஆமா சொல்லிட்டேன், இல்லேன்னா நானே கூட்டிட்டு போயி அவன் வூட்டுல வுட்டுட்டு வந்துடுவேன்.
கேட்டுக்கொண்டிருந்த முருகேசுவுக்கு பக்கென்றிருந்தது. ஐயோ அவன் வூட்டுக்கா, மாசாணியாவது சாராயம் காய்ச்சும் போது எடுபிடி வேலை கொடுத்து வயித்துக்கு போட்டுடுவான், ஆனா மாமன் பிளேடை கையில கொடுத்து தொழிலுக்கு அனுப்பிச்சிடுவான். ஐயோ பிளேடு போடும் போது யார்கிட்டயாவது மாட்டிகிட்டா அவ்வளவுதான்.
படக்கென்று எழுந்தவன் மாசாணியிடம் போனான், அவனை தொட்டு ஏதோ சொல்லி விட்டு வெளியே வந்தவன் வள்ளியை கண்டு கொள்ளாமல் ஒத்தை அடி பாதையில் காட்டுக்குள் ஓடினான்.
ஏய்யா பையன் மறுபடி அங்கேயே போறான், நீ பின்னாடி போ, யானைக மறுபடி அங்க இருந்தா வம்புதான்.
நல்ல வேளை ஒரு பேரல் முழுசாக இருந்தது, சுற்று முற்றும் பார்த்தான், தரை முழுக்க சாணியை போட்டிருந்தது, இவன் உட்கார்ந்திருந்த பரண் சுக்கு நூறாக்கி உடைத்து போட்டிருந்தது. நல்ல வேளை சிக்கி இருந்தால், நினைத்து பார்த்து உடலை உதறி கொண்டான்.
என்னடா ஆச்சு சத்தமிட்டவாறே அந்த இடத்துக்கு வந்த மாசாணி, ஒரு பேரல் அப்படியே இருந்ததை பார்த்தவுடன் அப்பா ஒண்னையாவது விட்டுட்டு போச்சே, இரு இரு..செல் போனில் யாரிடமோ பேசினான்,
மூன்று ஆட்கள் அங்கு வர பேரலில் இருந்த சாராயத்தை கொண்டு வந்திருந்த குண்டாவில் எடுத்து பெரிய கேனில் ஊற்றி தோளில் வைத்து நடக்க ஆரம்பித்தனர்.
பதினோறு மணிக்குள் மிச்சமிருந்த சரக்கெல்லாம் அனுப்பி விட்டு குமரேசுவின் தோளில் கை போட்டு கொண்டு வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான் மாசாணி. குமரேசு எப்படியோ தப்பிச்சுண்டண்டா, யானைக இதையாவது மிச்சம் வச்சுதுங்களே, இன்னைக்கு இராத்திரியும் வரும், இரண்டு மூணு நாளைக்கு எட்டி பார்க்க வேண்டாம். சரியா
வாசலில் வள்ளி இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருந்தாள். எலே குமரேசு சொன்னா கேக்கமாட்டியா, இந்த ஆளு கூட சேர்ந்தா நாளைக்கு கம்பி எண்ணிட்டுத்தாண்டா இருக்கணும்.
குமரேசு ஒன்றும் பேசாமல் கொல்லைக்கு போனவன், தொட்டி தண்ணியை எடுத்து முகத்தில் வாரி வாரி அடித்து கொண்டான். அவன் அப்படி அடித்து கொண்டதிலேயே பசியோடிருக்கிறான் புரிந்து கொண்ட வள்ளி முணங்கி கொண்டே உள்ளே போனாள்.
வள்ளி வட்டலில் போட்டிருந்த சாப்பாட்டை கருவாட்டு குழம்புடன் பிசைந்து சாப்பிட்டவுடன் தூக்கம் கண்னை சுழற்றியது குமரேசுவுக்கு, தட்டை கொண்டு போய் கிணற்றடியில் போட்டவன் அப்படியே திண்னைக்கு வந்து சாய்ந்தவன் நேற்று யானை செய்த அட்டகாசத்தால் விடுபட்டிருந்த தூக்கம் சுகமாய் வர அப்படியே சொக்கி விட்டான்.
கனவு அவனுக்குள் நுழைந்து அவன் மாமன் ராசுகுட்டி வந்து நின்றான், இவனை தர தரவென கூட்டி போய் ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறான். இவன் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பித்து....ஒடி க்கொண்டே இருக்கிறான். சூரியன் அவன் முகத்தின் நேர் மேலே அடிக்கும் போதுதான் விழித்தான். கண்களை திறக்கவே முடியவில்லை. திண்ணை கொதித்து கொண்டிருந்தது. வாயில் ஒழுகியிருந்த எச்சிலை துடைத்து விட்டு எழுந்தவன், கொல்லைப்புறம் போய் தண்ணீரை எடுத்து அப்படியே ஊற்றிக்கொண்டான்.
அடித்த வெயிலுக்கு தண்ணீர் ஊற்றியும் சூடு தணியவில்லை. அரை டிரவுசரும், சட்டையும் நனைந்த தோடே புங்கை மரத்தடியில் வந்து உட்கார்ந்தான்.
தலையில் புல்லு கட்டுடன் சூரியன் சாய வந்த வள்ளி இவன் வீட்டு புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருப்பதை பார்த்து ஒரு நிமிடம் திடுக்கிட்டாள். பாவி புள்ளை, மதியம் சோறு தின்னானா? புருசன் வெளியில சுத்துனாலும் விதரனையா வெளியில கொட்டிக்குவான், இவன் எங்க போவான்?
எலே குமரேசு, கொஞ்சம் இருலே, காப்பி தண்ணி போட்டு கொண்டாரேன், மள மளவென உள்ளெ சென்றவள் பத்து நிமிடத்துக்குள் அஞ்சாறு சோளக்கதிரையும், அலுமினிய டம்ளரில் கருப்பு காப்பியும் கொண்டு வந்து வைத்தாள். எடுத்துக்கலே, சொல்லிவிட்டு அவனையே உற்று பார்த்தாள்.
குமரேசு அதை தொடவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். எலே எடுத்துக்க மதியானமும் சோறு உண்டிருக்க மாட்டே, ஹூகூம் அவன் அசையவில்லை. மெல்ல அவனை நெருங்கி அவன் தலையை கோதினாள். என்ன கோபமாடா, சரி சரி நீ எங்கேயும் போக வேண்டாம், இப்ப சாப்பிடு,
மள மளவென காப்பி தண்ணி அவன் தொண்டைக்குள் இறங்குவதையும், சோளக்கதிர்களை எடுத்து கொறித்துக்கொண்டெ தோட்டத்து பக்கம் போவதையும் பார்த்து நின்று கொண்டிருந்தாள் வள்ளி.
மயிலாத்தா உன் பையனை இப்படி வுட்டுட்டு போயிட்டியேடி, அப்படி என்ன உனக்கு அந்த தோட்டக்கார பழனி கூட சகவாசம், போயித்தான் அவன் கூட ஒழுங்கா புளைச்சியா, மருந்தை குடிச்சுப்போட்டு அநியாயத்துக்கு உயிரை விட்டுட்டு, இந்த புள்ளையையும் விட்டுட்டு அதுவும் பதினாலு வயசு பையனை வாய் சரியா பேச கூட முடியாத பையனை விட்டுட்டு அப்படி என்ன அவன் கிட்டே கண்டுட்டே?...
உன் தம்பி சுப்பனாவது இவனை வச்சுக்குவான்னு பாத்தா எங்கே அவனே ஆறு மாசம் ஜெயிலு, ஆறு மாசம் ஊருன்னு இருக்கான் அவன் பொண்டாட்டி கூட அவனோட வாழ முடியாம போயிட்டா. இவன் எப்படி அங்க இருப்பான்? இந்த கேள்வி அவள் மனதில் இருந்து பெருமூச்சாய் வர வீட்டுக்குள் நுழைந்தாள்.
உன் வூட்டுக்காரன் இருக்கானா? அதிகாரமான குரலை கேட்டதும் விசுக்கென திரும்பி பார்த்தாள். ஏட்டு ராசய்யன் கள்ளத்தனமாய் அவளை பார்த்து சிரித்து கொண்டே
அந்த நாதாரி எங்கே போயி தொலைஞ்சதுன்னு யாருக்கு தெரியும், கோபத்தில் புளிச்சென்று எச்சிலை துப்பினாள்.
சட்டென ஏட்டு தன் முகத்தை துடைத்துக் கொண்டெ வந்தா ஸ்டேசனுக்கு வர சொல்லு, இன்ஸ்பெக்டரய்யா கூட்டியார சொன்னாரு, விருக்கென தன் பைக்கை திருப்பிக் கொண்டு விரைந்தார்.
இந்த மாதிரி கேள்வி கேட்டு வந்து உசிரை எடுப்பானுங்கன்னுதான் இந்த தொழிலை விட்டுடுன்னு சொன்னா கேக்குதா இந்த ஆளு, சத்தமாய் முணங்கியபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.
ஏ புள்ளை என்ன பண்ணறே மாசாணி சப்தமிட்டு உள்லே வந்தவன், தன் தலைக்கு மேலே கட்டியிருந்த துண்டை எடுத்து உதறினான். பீடிகள் நான்கைந்து
சிதறி விழுந்தன. ஒன்று வள்ளி தலையில் மோதி கீழே விழுந்தது.
இந்தா பீடிய கொண்டு வந்து மூஞ்சியில வீசறே, எரிச்சலாய் அவன் மேல் விழுந்தாள்.
அட எதுக்கு இப்ப கோபிச்சுக்கறே, இந்தா ஆயிரம் ரூபாயி, கோலப்பன் கொடுத்தான். சரக்கு முடிஞ்சா மிச்சம் கொடுத்துடறேன்னு சொன்னான்.
இந்த கருமாந்திரத்தை என் கிட்டே கொண்டு வந்து கொடுக்காதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். எத்தனை பேர் குடியை கொடுத்து சம்பாரிச்ச பணமோ
ஆமா அது சொல்லுச்சாக்கும் உன் கிட்டே, நான் குடியை கெடுத்து வந்த பணமுன்னு. போடி போடி, உள்ளே போனான். பீரோ திறக்கும் சத்தம் கேட்டது.
மாசாணி, மாசாணி வெளியிலிருந்து குரல் வந்தது.
போச்சு வந்தாச்சு பாரு ஆளு, பணம் கொணாந்திருக்கேன்னு எப்படித்தான் இவனுங்களுக்கு தெரியுதோ ! வந்துட்டானுங்க..முணங்கினாள் வள்ளி
மாசாணி வெளியே வந்தவன் பைக்கில் ஏட்டு ஒரு காலை ஊன்றி நின்று கொண்டிருப்பதை பார்த்தான். மனதுக்குள் பொங்கி வந்த ஆங்காரம் ஒரு கெட்டவார்த்தையை வீசினான். சட்டென சத்தம் ஏட்டுக்கு கேட்டிருக்குமோ பயத்துடன் துண்டை இடுப்பில் கட்டி கொண்டு வாங்க ஏட்டய்யா. அருகில் சென்றான்.
இன்ஸ்பெக்டர் உன்னைய கூட்டி வர சொன்னாரு, வா வந்து வண்டியில ஏறு.
ஐயா இன்னும் சோறு உங்கலிங்க உண்டுட்டு வந்துடறேன்.
வாடான்னா, கோபத்துடன் காலை கீழே இறக்கினான்.
சட்டென்று ஏட்டுடன் வண்டியில் ஏறிக்கொண்டான். ஏட்டு கோபத்தில் வண்டியை முறுக்கினான். இந்த கோபம் எதற்கு என்று வள்ளிக்கு புரிந்தது. அவள் மனதுக்குள் பயம் வந்து ஊறியது.
சண்டாளப்பாவி இந்த தொழிலுனால என் நெம்மதியே போச்சு, அந்தாளை என்ன பண்ணுவானுங்களோ? நினைக்க நினைக்க அவளுக்கு கண்களில் கண்ணீர் தானாக வழிந்தோடியது.
யாரோ அவள் தோளை தொடுவது உணர்ந்து திரும்பி பார்த்தாள். குமரேசு நின்று கொண்டிருந்தான். வாடா, வந்து உக்காரு, ஒரு வட்டலை எடுத்து முன்னால் வைத்து அவனை உட்கார சொன்னாள்.
அவன் உட்காரவில்லை, நேரே உள்ளே போனான், பீரோ திறக்கும் சத்தம் கேட்டது, திரும்பி வெளியே வந்தவன், எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்து விட்டான். வள்ளி எழுந்து எலே, குமரேசு சாப்பிட்டுட்டு போ..சொல்ல, சொல்ல அவன் திரும்பி பார்க்காமல் நடந்து கொண்டே இருந்தான்.
வள்ளி அடுப்பு முன்னாடியே படுத்து விட்டாள். முந்தானையை எடுத்து தலைமேல் போட்டுக்கொண்டு தனக்குள் புலம்பி கொண்டே இருந்தாள். எவ்வளவு நேரம் அப்ப்டி இருந்தாளோ, யாரோ நடக்கும் சத்தம் கேட்டு விழித்தாள்.
மாசாணிதான், அடுப்பில் இருந்த பாத்திரத்தை சத்தமில்லாமல் எடுத்து கொண்டிருந்தான். சட்டென எழுந்து உட்கார்ந்தாள் வள்ளி, இரு இரு நானே போடறேன், குமரேசு எங்கே? உன்னை பார்க்க வந்தானே. க்கும், கணைப்பை கேட்டு திரும்பியவள் ஓ நீயும் வந்துட்டியா? இரு தட்டுக்களை எடுத்து வைத்து சட்டியில் இருந்து சாப்பாட்டை எடுத்து போட்டு குழம்பை ஊற்றினாள்.
மெளனமாய் இருவரும் சாப்பிடுவதை பார்த்தவள், போலீசுக்கரனுங்க அடிச்சானுங்களா?
வாயுக்குள் கவளம் சோற்றை திணித்துக்கொண்டே இல்லை என்று தலையாட்டிய மாசாணி என்ன நினைத்தானோ ஆம் என என்று தலையசைத்தான்.
பாவிங்க, பாவிங்க, அவனுக கையாலே அடி வாங்கி வாங்கி உனக்கு எதுக்குய்யா இந்த தலை எழுத்து ? அழுது கொண்டே அவன் தலையை தடவினாள்.
அட எதுக்கு அழறே புள்ளை, அதான் வந்துட்டமில்லை, அவனுக்கும் கண்களில் மெல்லிய நீர் திவலைகள் எட்டி பார்க்க,
குமரேசு மாசாணியின் தொடையை இடது கையால் தொட்டான். ஏதோ புரிந்தது போல சரி விடு புள்ளை,
பணம் கொடுத்தியா? அவனை முறைத்தவாறே கேட்டாள். ஆம் என்பது போல் தலையசைத்தான்.
பார்த்தியா ஆயிரம் ரூபாயின்னு வீட்டுக்குள்ள கொண்டு போகறதுக்குள்ளே பேயி மாதிரி உள்ளே வந்து புடுங்கிட்டு போயிடுது. அதுதான் சொல்றேன், என் கூட தோட்ட வேலைக்கு வந்துடு, இவனுக தொல்லையில்லாம நிம்மதியா இருந்துடலாம்.
விடு புள்ளை இந்த தொழில்ல இதுவெல்லாம் சகஜம், ஆறுதலாய் சொல்லி விட்டு வேக வேகமாக சாப்பிட்டு முடித்து பக்கத்தில் வைத்திருந்த சொம்பு தண்ணியில் கை கழுவி விட்டு எழுந்தான்.
குமரேசுவும் அவனுடனே எழுந்தவன் இரு தட்டுக்களையும் கொண்டு போய் கிணற்றடியில் போட்டு விட்டு வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து கை கழுவி கொண்டான்.
இனி அவனுக்கு வீட்டுக்குள் வேலை இல்லை. அப்படியே வந்து திண்னையில் உட்கார்ந்து கொண்டான்.
தன்னையும் மீறிய களைப்பில் அப்படியே மல்லாந்து படுத்தான். அவன் நினைவுகளில் அம்மா வந்து நின்றாள்.
அவனுக்காக காத்திருப்பாள், எந்த நேரமானாலும் சோற்றை தட்டில் போட்டுக்கொண்டு அவனுக்காக காத்திருப்பாள். இவன் சோக்காளிகளுடன் ஊர் சுற்றி விட்டு வந்தாலும் சரி, பக்கத்து ஊர்களுக்கு சைக்கிளில் போய் படம் பார்த்து விட்டு அகாலமாய் வந்தாலும் சரி நாலு திட்டு திட்டி விட்டு அவனை சாப்பிட வைத்து விட்டுத்தான் படுப்பாள்.
இந்த ஒரு வருடமாகத்தான் அவனை கொஞ்சுவதை குறைத்துக் கொண்டாள். இல்லாவிட்டால் அவனை தானே குளிக்க வைத்து இவனுக்கு கூச்சமாக இருக்கும், அட விடும்மா, நெளிவான். எலே நல்லா சோப்பு போடறா அந்த இடத்துல எல்லாம், தலையில் பொடேர் பொடேரென்று வாளி தண்ணீராய் எடுத்து தலையில் ஊற்றுவாள்.
தலையை பரக்க பரக்க தேய்த்து துடைத்து துவைத்து போட்டிருந்த வேட்டி சட்டையை எடுத்து போட்டு விட்ட பின்னால்தான் திருப்தியாக அங்கிருந்து நகர்வாள்.
அவன் கண்களில் இருந்து இருபக்கமும் கண்ணீர் வழிந்து தரையை தொட்டது. யாரோ அவனை தொடுவது போன்ற குளிர்ச்சி தோன்ற தன் அழுகை தெரியாமல் இருக்க கண்களை வேண்டுமென்றே கசக்கி விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.
என்னடா அம்மா ஞாபகம் வந்துடுச்சா?, அவன் தலையை கோதி விட்டுக்கொண்டே அவனருகில் உட்கார்ந்தாள் வள்ளி. அவள் உட்கார கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இடம் கொடுத்தான்.
ஏய்யா, அந்த பாயும் தலைகாணியும் எடுத்தா, உள்ளுக்கு திரும்பி சத்தம் கொடுத்தாள். மாசாணி பாயையும், தலையணையும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான், கூடவே போர்வையும் எடுத்து வந்திருந்தான். என்னடா அழுதியா? குரலில் பாசம் இழைந்தது.
குமரேசுவுக்கு வெட்கமாக இருந்தது. தலையை ஆட்டி மறுப்பு தெரிவித்தாலும், வள்ளி சிரித்துக் கொண்டே சரி சரி எழும்பு, பாயை விரிச்சு தலையணை போட்டுடறேன். எல்லாம் போட்டு அவனை படுக்க சொல்லி விட்டு உள்ளே போனாள்.
பாயில் படுத்தாலும் தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வந்து விடவில்லை குமரேசுவுக்கு புரண்டு புரண்டு படுத்தான். அம்மாவின் நினைவு வந்து வந்து போனது. அவளுடன் ஒன்றாய் இறந்து போன அந்த பழனி கூட வந்து போனான்.
இதையும் மீறி அவன் அப்பா அவனருகில் படுத்துக்கொண்டு தூங்குடா தூங்குடா, போதையில் சிவந்த கண்களுடன் சொல்வது போல இருந்தது.
அப்பா, அப்பா அவனுக்கு பத்து வயதிருக்கலாம், இவனை கூட்டிக்கொண்டு இந்த காடு மலை எல்லாம் அலைந்தது, சாராயம் கொதிக்கும் போது இவன் பக்கத்தில் உட்கார்ந்து அதையே உற்று பார்த்து கொண்டிருந்தது. எல்லாமே இலேசாக இலேசாக நினைவுகளில் வந்து போக அப்படியே அவன் கண்கள் உறக்கத்துக்குள் சென்று விட்டன.
இரண்டு மூன்று நாட்கள் ஓடியிருந்தது, கோலப்பன் அழைப்பதாக மாசாணியிடம் ஒரு ஆள் வந்து கூட்டி சென்றான். வரும்போது மாசாணி சந்தோசமாக
இருந்தான். கோலப்பன் மூணு பேரல் வேணுமாமடா, குமரேசனின் தோள் மேல் கை வைத்து சொன்னான். வள்ளி அக்கா கிட்டே எதுவும் சொல்லிடாதே, அப்புறம் வீணா பிரச்சினைதான்.
குமரேசு புரிந்தது போல் தலையசைத்தான். அவனுக்கு மாசாணி வள்ளி சண்டை போடாமல் இருந்தால் போதும். அவனுக்கு அடிக்கடி அவன் அப்பாவுடன் அம்மா சண்டை போட்டு கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. ஒரு வேளை அவளும் அப்பனிடம் சாராயம் காய்ச்ச போக வேண்டாமென்றுதான் சண்டை போட்டிருப்பாளோ? இப்பொழுது அம்மாவை நினைத்தால் பாவமாக இருந்தது.
அப்பா எப்பொழுதும் காய்ச்சுவதிலும், அதை விற்று வரும் பணத்தை எங்கோ கொண்டு போய் கொட்டி வருவதாக அம்மா சண்டை போட்டிருக்கிறாள். இதோ இந்த மாசாணி கூட அப்பொழுது அப்பாவின் அடியாளாகத்தான் இருந்தான். அப்பாவிடமிருந்து தள்ளியே நிற்பான். அப்பா இங்க வாடா மாசாணி கூப்பிட்டு கை நிறைய பணம் கொடுத்திருப்பதை பார்த்திருக்கிறான். அப்பா போன பின்னால் இந்த இடத்தை இவன் பிடித்து காய்ச்ச ஆரம்பித்து விட்டான்.
இந்த நடுக்காட்டுக்குள் இடம் பிடிக்க இவனோடு இரண்டு மூணு பேர் போட்டி, ஆனால் இடத்தை முடிவு பண்ணி ஆட்களை தெரிவு செய்வது இவர்களல்ல., அந்த ஏரியா காவல் நிலையத்தில் இருக்கும் ஒரு சில அதிகாரிகளை வைத்து கரை வேட்டி அரசியல்வாதிகள்.
அவர்கள் பார்வை மாசாணியின் பக்கம் இருக்க இப்பொழுது இந்த இடம் மாசாணிக்கு உடையதாகி விட்டது. ஆனால்...ஆனால்...
தேவையில்லாமல் அவன் வீட்டுக்கு வருவதும் வள்ளியிடம் பேசுவதும், வள்ளி கத்தி விரட்டுவதும் குமரேசன் கவனித்து கொண்டுதான் இருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அவன் அம்மாவும் கூட இந்த சிக்கலில்தான் இருந்திருப்பாளோ? இந்த எண்ணம் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வருகிறது.
வள்ளி எப்படியோ மோப்பம் பிடித்து விட்டாள். மீண்டும் குமரேசனுடன் காட்டுக்குள் போவதும் வருவதும், இரண்டு மூணு ஆட்களை வைத்து ஏதோ பேசுவதும், மாசாணியை நெஞ்சில் கை வைத்து நிறுத்தினாள்.
இங்க பாரு மறுபடி காய்ச்ச போறியா? இல்ல புள்ளே யாரு சொன்னது? குமரேசனா?
ஆமா அவன் ஒருத்தந்தான் உன் கூட்டாளி பாரு, அவனையும் உன் கூட சேர்ந்து அவங்கப்பனை மாதிரியே ஆக்கிப்புட்டியே, அழுதாள்.
மயிலாத்தா சாகற வரைக்கும் சொல்லிகிட்டே இருந்தா, இவனையும் இவங்கப்பன் இந்த தொழிலுலேயே பழக்கி விட்டுட்டான். அவனுக்கு வர்றவளும் நாளைக்கு என்னைய மாதிரி சீரழிஞ்சு போகணுமா?
புள்ளை அவனை நான் கூப்பிடவே இல்லை, அவனாத்தான் என் கூட இருக்கறான். அவனுக்கு என்னையும் உன்னையும் விட்டா யாரு இருக்கா?
இங்க பாரு நான் அவனை பத்தி இப்ப பேசலை, என்னைய பத்தித்தான் பேசறேன், நீ கண்டிப்பா சாராயம் காய்ச்ச போக கூடாது.
இந்த ஒரு தடவை மட்டும் காய்ச்சிடறேன், கோலப்பண்ணன் கிட்டே கை நீட்டி காசு வாங்கிட்டேன்.
அந்த காசை கொண்டு போயி அவன் கிட்டேயே கொடுத்துடு. என் பொண்டாட்டிக்கு இந்த தொழில் புடிக்கலை. நான் விவசாயமே பார்க்கலாமுன்னு இருக்கேன்னு சொல்லிட்டு வா
அதான் சொல்லிட்டேன் புள்ளே, இனிமே இந்த தொழிலுக்கு போக மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், இந்த ஒரு தடவை மட்டும்
டேய் மாசாணி..குரல் அதிகாரமாய் கேட்டது. வள்ளியின் மனம் துணுக்குற்றது,
மாசாணி வெளியின் வந்தான், ஏட்டு நின்று கொண்டிருந்தார். ஐயா அங்க நிக்கறாரு வாடா, மாசாணியை தோளில் கை வைத்து தள்ளிக்கொண்டு போனான்.
வள்ளிக்கு வெளியே வரவும் பயம், குமரேசு என்ன செய்கிறான், அவனை பற்றி நினைப்பு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளேயே முடங்கி கிடந்தாள்.
நேரம் ஓடி கொண்டே இருந்தது, மாசாணி வந்த பாடில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த வள்ளி என்னவானாலும் சரி என்று வெளியே வந்தாள்
வாசலில் யாருமே இல்லை, வெறிச்சென்றிருந்தது. சிறிது நேரம் பிரமை பிடித்து நின்றாள். வீட்டை தாண்டி நடந்து போய்க்கொண்டிருந்த செங்காக்கா என்ன வள்ளி உன் புருசனை சீப்புல கூட்டிட்டு போறாங்க.
பக்கென்றிருந்தது வள்ளிக்கு ஐயோ, எப்பவுமே கோலப்பங்கிட்டே காசு வாங்கிட்டு வரும்போதுதான் வருவாங்க, இன்னைக்கு என்ன இப்பவே வந்து பிடிச்சுட்டு போயிருக்காங்க.
வாசலில் இருந்த திண்னையிலேயே உட்கார்ந்து விட்டாள். இருட்டியது தெரியாமலே.
என்ன செய்வது? மாசாணியை கூட்டிட்டு போனவங்க இன்னும் அவனை விடலியே? நாம் ஸ்டேசனுக்கு போலாமா? அங்க போனா என்ன நடக்கும். நினைக்கும்போதே அவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.
யாரோ பதுங்கி பதுங்கி நடந்து வந்ததை பார்த்தாள் வள்ளி. குமரேசுதான் அங்க இங்க பாத்துகிட்டே வந்தான்.
இவன் ஏன் இப்படி பயந்து பயந்து வாறான்? மனதுக்குள் பயம் எட்டி பார்க்க மாசாணிக்கு ஏதாவது ஆயிடுச்சோ?
குமரேசு இவளை பார்த்தவுடன் வாயில் கை வைத்து சத்தம் போடாதே என்று சைகை செய்து விட்டு வீட்டை பூட்ட சொன்னான்.. வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டை பூட்டினாள், மாசாணிக்கு ஏதாவது ஆகி விட்டதோ?
அவளின் கையை பிடித்தவன் தர தரவென இழுத்துக் கொண்டு ஓடினான். தோட்டத்தில் இருந்த அவர்கள் வீட்டை தாண்டி பக்கத்து தோட்டம் வழியாக ஓடினான். வள்ளியும் அவனுடன் ஓடினாள்.
அரை மணி நேரம் ஓடிய பின் அந்த பத்து பதினைந்து குடியிருப்புகளில் இருந்த ஒரு வீட்டின் கதவை தட்டினான். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று
கதவை திறந்த வயதான பெண் இவனை பார்த்ததும் குமரேசு, வா வா, அவனை அழைத்தாள். குமரேசு ஒன்றும் பேசவில்லை, வள்ளியை உள்ளே அழைத்து வந்தவன் அந்த அம்மாளின் கையில் வள்ளியை ஒப்படைத்தான்.
கதவை சாத்திக்கொள்ள சொல்லி விட்டு மீண்டும் வெளியே ஓடினான்.
வள்ளி ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள். என்னாச்சு இவனுக்கு? எங்க வூட்டுக்காரனை கூட்டிட்டு போனாங்க அந்த போலீசுக்காரனுங்க, என்ன ஆச்சோ?
ஆயா வள்ளியை அணைத்து கொஞ்சம் அழுகாம இரு, அவனுக்கு ஏதோ தோணியிருக்கு, உன்னைய கொண்டு வந்து இங்க விட்டுட்டு போறான். திரும்பி வருவானுல்ல, அப்ப கேட்டுக்கலாம். இப்ப உள்ளே வந்து உக்காரு. அவன் என் பேரந்தான், ஒண்ணும் பயப்படாதே. என் பையன் போயி சேர்ந்த பின்னாடி இப்பத்தான் இவன் வந்து எட்டி பாக்கறான். நீ உள்ள வா கவலைப்படாதே., காலையில பாத்துக்கலாம்.
வள்ளிக்கு அழுகையும் கவலையுமாகவே மறு நாள் விடிந்தது. வூட்டுக்கு போறேன், கிளம்பியவளை, ஆயா தடுத்தாள்.ம் இங்க பாரு வள்ளி, அவன் வரட்டும் என்னண்ணு பார்த்துட்டு அப்புறம் கிளம்பி போலாம்.
கிட்டத்தட்ட மாலை ஆகியிருந்தது. மாசாணியை கிட்டத்தட்ட தூக்கி கொண்டுதான் வந்தான் குமரேசு. என்னாச்சு இவருக்கு? அழுகையாய் அவன் மீது விழுந்து அழுதாள் வள்ளி.
எனக்கு ஒண்ணும் ஆகலை புள்ளை, எப்படியோ விட்டுட்டானுங்க, ஆனா என்னன்னு தெரியலை, இராத்திரி அந்த ஏட்டும் ஒரு போலீசும் எங்கியோ போயிட்டு வந்து என்னை போட்டு அடி அடின்னு அடிச்சாங்க, எதுக்குன்னு தெரியலை.
மதியானம் கோலப்பண்ணன் கவுன்சிலரை கூட்டிட்டு வந்து சத்தம் போட்டு பேசுன பின்னாடிதான் விட்டானுங்க.
இரண்டு நாட்கள் மாசாணி அங்கேயே தங்கினான். வள்ளியும் கூடவே இருந்து அவனை கவனித்துக்கொண்டாள். அவர்களின் துணி மணிகளை கூட குமரேசுதான் கொண்டு வந்து கொடுத்தான். அவன்தான் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான்.
வள்ளி வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஓடியிருந்தது. மாசாணி எங்கும் செல்லவில்லை. எப்பொழுதும் அழுத கண்ணும் யோசனையுமாகவே இருந்தான்.
குமரேசனை காணவேயில்லை. வள்ளியும் மாசாணியிடம் கேட்டு கேட்டு சலித்து விட்டாள். குமரேசு எங்கே? குமரேசு எங்கே? மாசாணி பதில் சொன்னால்தானே !
அன்று காலை டவுனுக்கு போறேன்னு வெளியில் கிளம்பி கொண்டிருந்த மாசாணியின் சட்டையை பிடித்தாள் வள்ளி. டவுனுக்கு எதுக்கு? குமரேசு எங்கதான் போயிருக்கான்? அவளின் அவன் சட்டையை பிடித்து குலுக்கிய குலுக்களில் மாசாணி வாய் விட்டு சொல்லி விட்டான்.
குமரேசு போலீசுல சரண்டர் ஆயிட்டான், அழுது கொண்டே சொன்னவனை அதிர்ச்சியாக பார்த்தாள் வள்ளி சரண்டரா/ என்ன தப்பு பண்ணான்?
அவன்தான் தோட்டக்கார பழனியையும், அவனோட அம்மாவையும் மருந்து வச்சு கொன்னானாம்.
ஐயோ என்று அதிர்ச்சியாய் நின்ற வள்ளியிடம், மாசாணி வாய் விட்டு சொல்லி அழுதான். அன்னைக்கு என்னைய கூட்டிட்டு போய் ஸ்டேசன்ல உட்கார வச்சுட்டு உன்னைய தூக்கிட்டு போகறதுக்கு திட்டம் போட்டிருக்காங்கன்னு இவனுக்கு புரிஞ்சு போச்சு, அதனால என்னைய ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போகும்போது அவன் காட்டுக்குள்ள ஓடிட்டான். அவனுங்க இராத்திரி வீட்டுல போயி உன்னைய காணாம திரும்பி வந்து என்னைய அடி அடின்னு அடிச்சானுங்க.
அதுக்கு முன்னாடியே குமரேசு உன்னைய கூட்டிட்டு போயி அவன் ஆத்தா வீட்டுல விட்டுட்டு ஒண்ணுமே தெரியாதவனாட்டம் நான் பேசி வச்ச மாதிரி காட்டுக்குள்ள ஆளுங்களை கூட்டிட்டு போயி மூணு பேரல் சாராயம் காய்ச்சிட்டு கோலப்பன்னன் கிட்டே சொல்லி எடுத்துக்க சொல்லிட்டு என்னைய பிடிச்சு வச்சிருக்கறதையும் சொல்லி அவரை கவுன்சிலரை பார்க்க வச்சி வெளியே விட்டுட்டாங்க.
அப்புறம்தான் இதை எல்லாம் எனக்கு சொல்லிட்டு ஒண்ணு சொன்னான், நான் டவுனுக்கு போகப்போறேன்னு. எதுக்குடா அப்படீன்னேன். இனிமே சாராயம் காய்ச்சற வேலை செய்ய மாட்டேன். அப்படீன்னான். ஏண்டா உன் மாமன் கிட்டே போகப்போறியா?
இல்லேன்னு சொல்லிட்டு டவுனுக்கு போயிட்டான். அதுக்கப்புறம் நம்ம போலீஸ் ஸ்டேசன்ல கூப்பிட்டு சொன்னாங்க, இந்த மாதிரி உன் ஆளு கோர்ட்ல சரண்டர் ஆயிட்டான்னு.
நான் மனசு கேக்காம அவனை ஜெயில்ல பார்க்க போனேன். அவன் சிரிச்சுகிட்டே சொன்னான், அம்மா என்னைய மட்டும்தான் கவனிக்கணும்னு நினைச்சேன், அதனால அவளை கல்யாணம் பண்ணிக்க நினைச்ச பழனிய விரோதியா நினைச்சேன்.
வள்ளி அக்காவை காப்பாத்தி கூட்டிட்டு போறப்பத்தான் உண்மை புரிஞ்சுது, எங்கம்மா கூட தன்னை காப்பாத்திக்கறதுக்குத்தான் ஒரு துணைய தேடியிருக்கா. எங்கப்பாவும் இதே தொழில்ல இருந்திருக்காரு, அப்ப அம்மா கூட வள்ளி அக்கா மாதிரி எத்தனை பயந்திருக்கும். அப்புறம் அப்பா இறந்துட்ட பின்னால இன்னும் அவ நிலைமை எவ்வளவு பயமாயிருந்திருக்கும். அவ அந்த பழனி கூட சேர்ந்து வாழ நினைச்சதுல என்ன தப்பு?
நல்லா இருக்கணும்னு நினைச்ச அவங்களை என்னோட சுயநலத்துல செஞ்ச கொலைய நான் ஒத்துகிட்டேன். அப்படீன்னு சொல்லிட்டான். இன்னைக்குத்தான் அவனுக்கு தீர்ப்பு அதனாலதான் நான் டவுனுக்கு கிளம்பிட்டு இருக்கேன்.
வள்ளி கால் மடங்கி அப்படியே உட்கார்ந்து அவனை நினைத்து தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள்.