ஆட்காட்டி கவிதைத்தொகுப்பு நிகழ்வு
மனையாளின் மாண்புறு படைப்பு
------------------------------------------
ஆட்காட்டி எனும் கவிதை தொகுப்பு நூல் பிரித்தானிய தேசத்தில் 2/7/2022 அன்று வெளியீடு செய்யப்பட்டது. இந்நூல் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பட்டதாரியான திருமதி வேணி சதீஸ் அவர்களின் கன்னி ஆக்கப்படைப்பு ஆகும். அமரத்துவம் ஆன அவரின் அன்னையாரின் அமரத்துவ வயது நாற்பத்தொன்பதை (49) கவிதைகளின் அளவாக்கி நாற்பத்தொன்பது (49 )கவிதைகளை உள்ளடக்கியிருந்தது.
பிரித்தானியாவின் பிரபல ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான திரு .சதீசன் சத்தியமூர்த்தி தலைமையில் அவர் தொகுப்பில் நூல் வெளியீட்டு நிகழ்வு மாலை 5 மணிக்கு Hemel Hempstead இடத்தில் ஆரம்பமாகியது.
பிரதமவிருந்தினராக முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவரையாளர், தற்போதைய ஆய்வாளர் Dr.றிச்சட் அன்ரனி அவர்களும் சிறப்பு விருந்தினராக தமிழ் மதிப்பீட்டாளர் , திருத்தியமைப்பாளர் (Cambridge board England)திருமதி உமா காந்தி அவர்களும் அருளுரை விருந்தினராக Owl finance முகாமையாளர் திரு. பிரசாத் கணேசய்யா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கானகலாதர திருமதி சிவகெளரி தவகணேஷ் ,இசை வித்தகி செல்வி வருணவி தவகணேஷ் இருவரும் இணைந்த இறைவணக்க இசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
செல்வி பிரவீணா சதீஸ்குமார் வரவேற்பு நடனத்தை வழங்கினார்.
வரவேற்புரையை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர், புலக்கண் அமைப்பாளர் கெமல் தமிழ் பாடசாலை தலைவர் திரு .சதீஸ்குமார் கனகரத்தினம் அவர்களும் அறிமுகவுரையை மில்ரன்கீன்ஸ் தமிழ் பாடசாலை தலைமையாசிரியர் திரு. சேனாதிராஜா முத்தையா அவர்களும் ஆற்றினர்.
மெய்வெளி ஊடக இயக்குனர், பிரித்தானிய பிரபல பெண் ஆளுமை திருமதி றஜித்தா சாம் பிரதீபன் அவர்களால் வெளியீட்டுரை ஆற்றப்பட்டது .பிரபல அரசியல் நிகழ்ச்சிகளின் நெறியாளர் , பிரித்தானிய ஊடகவியலாளர் திரு.நடேசன் பாலா அவர்கள் நூலுக்கான விமர்சனத்தை தனக்கான பாணியில் எந்த பின்வாங்கலும் இன்றி ஆணித்தரமாக முன் வைத்தார்.
மெய்வெளி ஊடக அமைப்பாளர், சிறந்த எழுத்தாளர்,கவிஞர்,நாடக இயக்குனர் திரு. சாம்பிரதீபன் அவர்களால் கவிஞர் பார்வையில் ஆட்காட்டி என்ற நேர்பட்ட வகையான சிறப்புரை ஆற்றப்பட்டது.
திருமதி தமணிகை பிரதாபன் வாசகி உரையையும் திருமதி நிரோஷனி றமணன் நூல் நயவுரையையும் ஆற்றினர். செல்வி நேனுஷா கஜேந்திரன், செல்வி வருணவி தவகணேஷ் பாடல் நிகழ்வுகளையும் , செல்வி சர்விகா சாந்தலிங்கம், ஸ்ரீ கிருஷ்ணா கலா கேந்திர நடனப்பள்ளி மாணவர்கள் நடன நிகழ்வுகளைையும் நிகழ்த்தி பல்சுவை நிறைந்தனவையாய் நூல் வெளியீட்டு நிகழ்வு அமைந்தது.
"கொட்டும் மழை கூதலுக்குள்
கை தொட்டால் விழும் சுவரோரம்
கட்டிக்கிழிந்த கந்தலுடன் -உடல்
மெலிந்து நலிந்த ஏழைத்தாய் "
என்று முதல் கவிதை,வாசல் கவிதை காத்திருப்பு என்ற தலைப்புடன் தொடங்குகின்றது. அந்த வாசல் கவிதை ஆட்காட்டி தொகுப்பில் தாயக மண்ணின் வடுக்கள் பல உள்ளே இருக்கும் என உணர்த்தியது.உண்மையாகவும் இருந்தது.
"மழை நாளின் சங்கீதம்"என்ற கவிதை நயக்கவிதையாக நயனக்கவிதையாக உள்ளம் தொட்டது.
"ஓலை வீட்டில் விழும்
மழையின் ஓசை சங்கீதம்
ஓடும் நீரில் விழும்
மழைத்துளியின் சங்கீதம்
வாடைக்காற்று வந்து வீட்டு
வாசல் தட்டும் சங்கீதம் "
என்று நீள்கின்றது. துளித்துளியாய் மழைத்துளிகளை ஒவ்வொரு ஓசைகளாய் கோர்த்தெடுத்து வாசகங்களை வார்த்தெடுத்து தன் ரசனையை எங்களுக்கு விருந்தாக்கிய விதம் நயமாக இருந்தது. இந்தக்கவிதையில் ஏமாற்றத்தையும் அதன் இழப்பையும் வாழ்க்கையின் இயலாமையையும் குறியீடாக இடைச்செருகிய விதம் சிறப்பு.
"பொழிந்த மழைத்துளி
மண் மீது புரள்கையில்
உடைவதும் புதிரான சங்கீதம்"
என ஒரு துளி மழையில் ஒரு துளி தத்துவத்தை கூறியிருந்தார். மரணம் என்னும் கவிதையிலும்
"நிலையில்லா வாழ்வுதனில்
நிலையாக ஏதுமில்லை
பயம் கொண்டு பதுங்குவதால்
பல காலம் உடல் வாழ்வதில்லை "
என நிதர்சன தத்துவத்தை தந்துள்ளார். தொகுப்பு முழுவதுமாக தத்துவங்கள் நிறைந்து இல்லாமல் பல கவிதைகளுக்குள் ஆங்காங்கே இடைச்செருகிய நுட்பம் அறிவாக்கமே.
ரசனைக்கு ஒரு மழையை மழை நாளின் சங்கீதமாய் கோபத்துக்கு ஒரு மழையை மழை எனும் கவிதையாய் இரண்டு வடிவங்களாக்கியுள்ளார்.
தாய் மண்ணின்
துயரங்களை ,கொடுமைகளை,
பொருட்குறைவினை, பொருட்குறைவால் வாழும் வாழ்வினை,அந்த வாழ்வியலை, வாழ்கின்ற வீடமைப்பை அதிலுள்ள அழகார்ந்தவற்றை, ஏக்கங்களை ,
பல கவிதைகளில் கவியாக்கி மனப்படமாக்கியுள்ளார்.
"ஓலைட்டில் ஒழுகுது கூரை
தாரை தாரையாய்
பொழியுது மேகம்
வானம் பார்த்த பூமி
வறண்டு கிடந்த போது வாராத கார்மேகம்
தேவையற்ற போது
தேடி வந்து கரைகிறது"
என மண்குடிசை கரைகிறது கவிதை துயரம் சொல்கின்றது. இதில்
"குளிரில் நடுங்கும்
உடல்களை மூட
கைகள் மட்டுமே
கைவசம் இருக்கும் "
என்ற வரிகள்
எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றது.
ஈழத்து வன்மங்களையும்
வடுக்களையும் வகுத்து வகுத்து தொகுப்பு முழுவதும் தொகுத்திருக்கின்றார். அகதி,
பெருமகிழ்ச்சி கொள்வாயா தலைப்புச்செய்தி ,எதுவீரம் மாவீரன் கதறல் உண்மை உறங்குது, பட்டினிச்சாவு என்ற கவிதைகள் வரலாற்று வடுக்களையும் வலிகளையும் தாங்கி நிற்கின்றன.
அமரத்துவமான அன்னைக்கும்
கவிஞரின் அத்தனை உயர்வுகளையும் அவதானித்துக் கொண்டிருக்கும் தந்தைக்கும் என எழுதிய இரு கவி மடல்கள் கண்ணீரை வரவழைத்தன .அந்த இரு மடல்களும் அவரின் தனிப்பட்ட துன்பியல் பக்கங்களாய் இருந்தன. ஆட்காட்டி ,அன்புள்ள அப்பாவுக்கு இரண்டையும் இந்த தொகுப்பில் இணைத்தமை இரு விழிகள் உள்ள தொகுப்பு என ஊர்ஜிதப்படுத்தியது.
அன்புள்ள அப்பாவுக்கு என்ற கவிதையில்
"அழகான ரோஜாக்கள்
அற்புதமான மலர்கள்
வண்ண வண்ண பூக்கள்
பல நாட்கள்
வாடாத இதழ்கள்
மனதை கொள்ளைகொள்ளும் பூங்கொத்துகள்
அத்தனையும் சேர்ந்து
அழகை
அள்ளிக் கொட்டுகின்றன
ஆனால்
எந்தப்பூக்களுக்கும்
வாசம் இல்லை "
என மனதில் நிறைந்த வலிகளை அழகடர்ந்தவாழ்வில் ஆர்ப்பரிக்கும் பழைய நினைவுகள் அர்த்தம் நிறைந்தவை எனக்கூறிய மன ஆற்றாமை அழகு.
இயற்கை அழகின் வார்ப்புகள், எழில்கள் தொகுப்பு நிறையவே இருந்தது தாயகத்தில் சின்னச் சின்ன விடையங்களில் பொதிந்திருந்த அழகார்ந்தவற்றை கவிதையில் பதிந்திருந்த முறை வியக்கக்கூடிய நயங்கள். ஏக்கம் என்ற கவிதையில் இயற்கை அழகு கொட்டிக் கிடந்தது.
"பனங்கீற்றை தடவிய
தென்றல் வந்து தீீண்டாதோ
பசுந்தரையில் மேயும் பசுக்களின் சங்கீதம் மீண்டுமெந்தன் செவி நனைக்க மாட்டாதோ".......
மேலும்
"வானுயர வளர்ந்து நிற்கும் குரும்பைகளில் தெருவோரம் தேரை இழுத்துச் செல்வேனோ
என்பவை மிக நயமாக இருந்தது.
விதவிதமான மனிதர்களை ரசிக்கின்றவர்களுக்கு தெரியும் ஒவ்வொருவருடைய மொழிகளும் ஒவ்வொரு அழகு ,ஒவ்வொரு முறை என்று அந்த வகையிலே வாசகங்களில் யாசகமாகி மண்ணின் மொழி பல இடங்களில் இருந்தது .யாழ்ப்பாண வழக்குச் சொற்கள் வந்து போனது
மகிழ்வித்தது. "இனி தேத்தண்ணி ஊத்தவேணும் சாம்பல் போட்டு அழகாக மினுக்கிய கேற்றலில் கொஞ்சம் தண்ணீரை கொதிக்கவைத்து" என செல்லாச்சி கவிதை இயல்பு மொழிக்கு ஈர்த்தது.
மேலும் வாவனனை ,இதுக்க இப்ப போகேலா,மூக்குத்தி ,அல்லைப்பிட்டி சனமெல்லாம் ,ஐய்யோ என்டு குழற என்ர உசி்ர் என பல வழக்குச்சொல்லாடல்கள் கையாளப் பட்டிருந்தன.வழக்குச் சொல்லாடல்களை படைப்பாளர்கள் பதிவது கடமை என்று அதனையும் செய்திருக்கின்றார். முழுவதுமே வழக்குச்சொற்களுக்குள் நிற்காமல் எல்லோருக்குமான கவிதை என்று கவிதைகளை ஆக்கியமை பெருமை.
செல்லாச்சி என்ற கவிதை கவியாய் கதையாய் சுவையாய் நயத்தது.செல்லாச்சி முற்றத்து மண்ணில்இலாவகமாக கால் நீட்டி பாய் இழைக்கும் ஐந்து பிள்ளைகளின் தாய், மூக்குத்தி அணிந்தவள் ,உழைப்பாளி, முற்றத்து கிணற்றில் முகம் கழுவி முகம் துடைத்து, முருகனை கும்பிட்டு தேநீர் போட்டு ,போர்ச்சூழலுக்குள் போகின்றாள்.இடர் அடர்ந்த வேளையிலும் எஞ்சி நிற்கும் பிள்ளைப்பாசம் கவிதையின் சாரல்,
அகதிமுகாம் போகின்றாள்,
நினைவிழக்கிறாள் ,வீடுவந்து
மரணமாகின்றாள் .
சோளக்காற்றில் தொடங்கி
மகனின் மடி வரை
தத்ரூபமாக நிதர்சன வாழ்வான கவிதையாக சென்றது.
தொகுப்பின் மகுடக்கவிதையாக ஆட்காட்டி கவிதைஆயிரம் ஆயிரம் பக்கங்களை பாசத்தை பண்பை பகிர்ந்தது.
"தலைவாரி பின்னலிட்டு
தலை மேவி
அதை ரசித்து
உச்சியிலே முத்தமிட்டு
என்னை உளம்
மகிழச்செய்தவளின்
வரவுக்காய் தலை வெடித்து தவிக்கிறேன் "
என்று அந்த ஏக்கம் கவியானது.
கவிதைகள் முழுவதும் மண்ணின் துகள்கள், தாய்மண்ணின் துகள்கள் மழையின் வார்ப்பில் ஈரமாகி அன்பாகி அன்பு சொல்லி ஆதங்கம் சொல்லி வடுக்கள் கூறி வலிகள் கூறி தாய்மண்ணின் தகவல் தொகுப்பாய் எல்லா பார்வைகளும் நிறைந்ததாய் எல்லா பக்கங்களும் சார்ந்ததாய் ஆட்காட்டி கவிதைத்தொகுப்பு நூல் அமைந்தது.
நூலின் முதற்பிரதியை கவிஞரின் சகோதரி திருமதி செந்துஜா மகேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.இரண்டாம் பிரதியை தர்மசீலன் தர்மேந்திரராஜா அவர்களும் மூன்றாம் பிரதியை சதீஸ் முருகுப்பிள்ளை அவர்களும் பெற்றுக்கொண்டனர்.