போகாரே நீர்குறி தாகப் புகல் - பழமொழி நானூறு 146

நேரிசை வெண்பா

கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து
நடைத்தாரா என்பதூஉம் பட்டு - முடத்தோடு
பேர்பிறி தாகப் பெறுதலால் போகாரே
நீர்குறி தாகப் புகல். 146

பழமொழி நானூறு

பொருளுரை:

நீர் சுருங்கி இறங்கிப் போகலாம்படி அளவுபட்டிருக்க அந்நெறியில் இறங்கிப் போதலை ஒழித்து தலை மிகவும் கிழிபட்டு, கால்களும் வலிமை இழந்து நடத்தலைச் செய்யாவென்றும் சொல்லப்பட்டு முடம் என்ற பெயரோடு வேறு பெயர்களையும் அடைதலால் அத்தகைய நெறியில் அறிவுடையார் செல்லுதலிலர்.

கருத்து:

தம் உயிர்க்கு ஏதம்பட வருவன செய்யாதொழிக.

விளக்கம்:

புகலை ஒழித்துப் போகார் என முடித்துக்கொள்க.

கடுப்ப என்றது முதல் பெறுதலால் என்பது வரை செல்லலாகா நெறியின் கண் செல்வார் அடைதற்குரியன. ஆகவே அறிவுடையோர் அந்நெறியிற் செல்லுதலிலர் என்பதாம்.

செல்லலாகா நெறியாவது நீர் மிக்கும் பாறை மிகுந்தும் விரைவு மிகுந்தும் இருக்கும் சிறுநெறி. இதன்கட் சென்றார் தலைகிழிதல், கால் முடம் படுதல் முதலியன பெறுவர். அறிவுடையோர் நல்ல வழியை விட்டு உயிர்க்கிறுதி தரும் வழியிற் செல்லாரென்று தம் உயிர்க்கிறுதி தரும் தீயசெயல்களைச் செய்தலாகாது என்பதனைக் குறித்தார்.

இங்ஙனம் கருத்தைக் கூறாது பிறிதொன்றனைக் கூறிப் பெறவைத்தலும் அணிவகையுள் ஒன்றாம்.

பிறிதாகப் பெறுதல் என்றது குருடு, செவிடு போல்வன. இச் செய்யுள் முழுவதும் பழமொழிப் பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-22, 7:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே