பொருளல்லார் கூறிய பொய்க்குறளை ஆடுபணைப் பொய்க்காலே போன்று -பழமொழி நானூறு 147

நேரிசை வெண்பா

பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளுந் திறந்தெரிதல் அல்லால் - வெருளவெழுந்து
ஆடு பவரோடே யாடார் உணர்வுடையார்
ஆடுபணைப் பொய்க்காலே போன்று. 147

- பழமொழி நானூறு

பொருளுரை:

இயற்கை நுண்ணறிவு உடையார் ஒரு பொருளாகவும் மதிக்கப்படாதார் கூறிய பொய்யாகிய குறளையை அரசன் தெளியும் வகையினை ஆராய்ந்து கூறுவதல்லாமல் குறளை கூறினார் வெருளுமாறு எழுந்து அசைகின்ற மூங்கிலால் செய்யப்பட்ட பொய்யாகிய கால்கள் போன்று குறளை கூறுவாரோடு ஆடுதலிலர்.

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார், அவன் உண்மையினைத் தெளிய அறியுமாறு கூறுதல் வேண்டும்.

விளக்கம்:

வெருள எழுந்து போன்று ஆடார் என்க. 'வெருள எழுதலாவது' பொய் கூறியவர்களும் நாங்கூறியது உண்மைதானோ என்று ஐயுறுமாறு அவரின் மேம்பட்டுக் கூறுதல். இயற்கை நுண்ணறிவு உடையராயின் அவர் உண்மையறிந் துரைப்பர். மூங்கிலால் செய்யப்பட்ட பொய்க்காலாதலின் அசைதல் அதனியல்பாயிற்று.

'ஆடுபணைப் பொய்க்காலே போன்று' என்பது பழமொழி, 'ஆடுமணைப் பொய்க்கால்' என்பதும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-22, 8:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே