இசைவோம் செய்வோம் சுவைப்போம் சைவம்

அசைவ உணவு உண்ணும் வாசகர்களின் கவனத்திற்காகவே இந்த
கட்டுரையை எழுதுகிறேன். இன்று, உலகில் கிட்டத்தட்ட 22% மக்கள் சைவ உணவை உண்பவர்களாக இருக்கிறார்கள். பல விஷயங்களுக்கு உதாரணமாக கொள்ளப்படும் அமெரிக்காவில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சைவ உணவு உண்பவர்கள் சதவிகிதம் 1.2% இருந்தனர். தற்போது இது அதிகரித்து 5% ஆக உயர்ந்து இருக்கிறது. எனவே, உலகத்தில் சைவ உணவை உண்போர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டு வருகிறது. சைவ உணவு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை குறைக்கிறது என்று உலக மருத்துவ வட்டாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைப்போலவே, பல உலக மருத்துவ ஆராய்ச்சி கழகங்கள், சைவ உணவு எடுப்பதால் கேன்சர் நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவு என்ற கருத்தையும் ஆதரிக்கிறது. பருப்பு , தினை வகைகள், மற்றும்
பச்சை காய்கறிகள், ஒரு மனிதன் நலமுடன் வாழ போதுமானது என்பதையும் உலக மருத்துவ ஆராய்சசி மையங்கள், பல ஆராய்சிகளுக்கு பிறகு ஏற்றுக்கொண்ட உண்மை. அதே நேரத்தில் 100% சைவ உணவை எடுப்பதால், ஒருவரின் உடல் நலம் 100% ஆரோகியமுடன் இருக்கும் என்ற உத்தரவாதமும் கிடையாது என்பதையும் இத்தகைய மருத்துவ கழகங்கள் கூறுகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 10-15% சைவமாக இருந்த உலகம் தற்போது 22% சைவமாக மாறியுள்ளது என்றால், அதற்கு ஏதாவது முக்கிய காரணங்கள் இருக்கவேண்டும். அவற்றில் சில காரங்களை நான் கீழே குறிப்பிடுகிறேன்:

1.சைவ உணவு தரும் நன்மைகளை மக்கள் முன்பை விட, இன்றைய சூழ்நிலையில் அதிகமாக உணரத்தொடங்கிவிட்டார்கள்.
2.சுற்றுப்புற சூழ்நிலை சமன் நிலையில் இருக்க சைவ உணவு உதவுகிறது.
3.ஒரு சராசரி மனிதன், தினசரி செய்யும் வேலைகள் மற்றும் காரியங்களுக்கு, சைவ உணவு போதுமான சக்தியையும் போஷாக்கையும் தருகிறது எனும் உண்மையை மக்கள் விழிப்புணர்வுடன் உணர தொடங்கிவிட்டார்கள்.
4.விலங்குகளை மனிதகுலம் நடத்தும் விதங்கள், பிற உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் போன்ற சமூக தருமமும் மற்றும் நியதியும் மக்கள் சைவமாக மாறிவருகின்ற காரணங்கள்.
5.மிகப்பெரிய விலங்காக கருதப்படும் யானை, சைவ உணவை உண்டு எவ்வளவு கடினமான, அதிக பலம் தேவைப்படும் காரியங்களை எளிதில் செய்கிறது என்பதையும் சில மக்கள் கவனித்து, தானும் ஏன் சைவமாக இருக்கக்கூடாது என்று சிந்திப்பதும் சைவம் வளர ஒரு சிறிய காரணமாக இருக்கலாம்.

எவ்வளவோ வளை தளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்ற மூக ஊடகங்களில் நாம் சிறிய மீன்கள் தொடங்கி பெரிய யானைகள் வரை அன்புடன் நடத்தப்படும் நிகழ்வுகளை காண்கிறோம். கடலில் சின்ன மீன்களும் வாழ்கிறது, சுறாமீனும் வாழ்கிறது, முதலையும் வாழ்கிறது, டால்பின் மீன்களும்
வாழ்கிறது. சின்னதாக இருக்கும் மீன்களை மட்டும் தான் நாம் பிடித்து உணவாக உண்கிறோம். பெரிய மீன்களை பிடிப்பது கடினம் மற்றும் அவைகள் நம்மை தாக்கி அழிக்கும் என்கிற பயமும் இதற்கு காரணங்களாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த கோணத்தில் பார்க்கும்போது,"எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?" என்கிற பழைய சினிமா பாடலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இன்னமும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், நம் வீட்டிலேயே பலரும், சின்ன நீர் தொட்டிகளில் வண்ண வண்ண மீன்குட்டிகளை, ஒரு காட்சி பொருளாக வைத்து வளர்க்கிறோம். இந்த மீன்களை நாம் எடுத்து உண்பதில்லை. ஏன்? இது போன்ற மீன்களின்
எண்ணிக்கை மிகவும் குறைவு. மற்ற மீன்களையும் இந்த வண்ண காட்சி மீன்களாக நாம் பாவித்தால்,மீன்களை நாம் சாப்பிடுவதும் குறையும்தானே?

சமீபத்தில் என்னுடைய நண்பர் (அசைவ உணவு உண்பவர்) ஒருவர் என்னிடம் கூறியது: "சில நாட்கள் முன்பு நான் யூ டியூபில் ஒரு காட்சியை பார்த்தேன். ஒருவர், ஒரு ஆட்டினை விற்க அழைத்து செல்கிறார். வாங்கும் மனிதர் அதை தொட்டு தன்பக்கம் இழுத்தபோது, அந்த ஆடு மிகவும் சோகக்குரலில் ஓலமிட ஆரம்பித்தது. அவர் என்ன செய்தும் அந்த ஆடு ஓலமிடுவதை நிறுத்தவில்லை. உடனே அந்த மனிதர் "இப்படி கதறி அழும் ஆடு எனக்கு தேவையில்லை" என்று கூறி விட்டார்."

பலியிடப்படும் ஒவ்வொரு ஆடும் இந்த ஆட்டினை போல் ஓலமிடுவதில்லை. ஆனால், ஓலமிட்ட அந்த ஆட்டின் பயமும் மிரட்சியும் மற்ற ஆடுகளிடமும் இருக்கும் என்பது நிச்சயம் தானே?

கோழியும் சேவலும் குஞ்சுகளும் கூட மீன்களையும் ஆடுகளையும் போலத்தான். அவற்றிற்கு பேச தெரியாது, எனவே சொல்லத்தெரியாது. ஆனால், அவற்றின் கழுத்தையும் தலையையும் முறிக்கும்போதும், கத்தியால் சீவும்போதும் அந்த கோழிகளும் சேவல்களும் எப்படி பயந்து மிரண்டு வலியுடன் துடிக்கும் என்பதை நாம் ஓரளவுக்கு உணர்ந்து பார்க்க முடியும். அப்படி பலியாகும் கோழிகளையும் சேவல்களையும் தான் பலரும் உணவாகவும், வேறுவித ஆகாரங்களாகவும் உண்கின்றனர்.

கோயிலுக்கு செல்பவர்கள்,வீட்டில் பூசை செய்கிறவர்கள் இப்போது நான் சொல்லப்போகும் செய்தியை தயவு செய்து கவனிக்கவும். பொதுவாக, வீட்டில் பூசை செய்யும்போதும், கோயில்களுக்கு சென்று வரும்போதும், தெய்வங்களுக்கு படையல் வைக்கும்போதும், மேலும் விரதம் இருக்கும் சில தினங்களிலும் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட சைவ உணவையே உண்கிறார்கள். ஏன்? இரண்டு வேளைகூட பட்டினியாக இருக்கிறார்கள். கடவுளுக்கு படைக்கும் எதுவும், சுத்தமாகவும் ஓரளவு புனிதமாகவும்கூட இருக்கவேண்டும் என்பதற்காகத்தானே? இந்த நெறிமுறைப்படி பார்த்தால், நாமும் கூட ஏன், கடவுளுக்கு படைக்கப்படும் சுத்தமான ஓரளவிக்கு தூய்மையான உணவை
அன்றாடமும் உண்ணக்கூடாது?

ஒரு மனிதனுக்குமுழுமையான சத்துணவு கிடைக்கவேண்டும் எனில், சில குறிப்பிட்ட சத்துக்கள் மிகவும் அவசியம். அத்தகைய சத்துக்களையும் அந்த சத்துக்கள் அடங்கிய சைவ உணவு பொருட்களும் கீழே தரப்பட்டுள்ளது:

1. இரும்பு சத்து: பருப்பு வகைகள், பீன்ஸ், கீரைகள், முந்திரி பச்சை பட்டாணி
2. கால்ஷியம்: தயிர், பால், வெண்ணை, பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சு ரசம்
3. புரோட்டின்: பால், கடலைகள் பருப்பு , நவ தானியங்கள்
4. வைட்டமின் D: சூரிய ஒளி, பதப்படுத்தப்பட்ட பால் பொருட்கள் சோயா பால் தானியங்கள்
5. வைட்டமின் B 12: நுரைம வகைகள், பால் பொருட்கள் பதப்படுத்தப்பட்ட உணவு, சிறு தானியங்கள்
6. துத்தநாகம்: பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட நவ தானியங்கள், காய்ந்த பீன்ஸ் கடலை மற்றும் சோயா
7. அயோடின்: தயிர், பால்,வெண்ணை, உயர்ந்தரக ரொட்டி , பச்சை பட்டாணி, ஆப்பிள் ரசம் , வாழைப்பழம்

மேலே குறிப்பிடப்பட்ட அட்டவணை, ஒரு சிறு உதாரணமே தவிர முழு விவரங்களும் அல்ல. சராசரி மனிதனுக்கு தேவையான போஷாக்கான சத்துக்கள் சைவ உணவிலும் முழுமையாக கிடைக்கிறது என்பதை காட்டவே இந்த அட்டவணை. இத்தகவலை புத்தகங்கள் வாயிலாகவோ,
இணையதளத்தில் தேடிக்கண்டோ அறியலாம்.

சிலர் இப்படி ஒரு கோணத்திலும் விவாதிக்கலாம். உயிர் வதைப்பு செயலை சைவம் சாப்பிடுபவர்களும் புரிவதில்லையா? கொசுவை அடித்து கொல்லுவது, கரப்பான்பூச்சியை அடிப்பது, காலடியில் ஊர்ந்து செல்லும் கண்ணுக்கு கூட தெரியாத எறும்புகளை மிதித்து அழிப்பது, இதுபோன்ற காரியங்கள் எல்லாமே உயிர்கள் வதைப்புதானே? இந்த விவாதம் மிகவும் சரியானதே, இப்படி விவாதிப்பதில் தவறும் இல்லை. இதற்கு என்னிடம் உள்ள ஒரே பதில் "பொதுவாக, கொசு, கரப்பான் பூச்சி, எறும்புகள் போன்ற உயிரினங்களை ஒருவர் துரத்திக்கொண்டு சென்று, கொல்லவேண்டும் என்கிற நோக்கத்துடன் இவற்றை அடிப்பதில்லை அல்லது அழிப்பதில்லை. உடல்நலம், சுற்றுப்புற தூய்மை சுகாதாரம் போன்ற மிக முக்கியமான தேவைகள் தான் இதற்கு காரணம். இந்த வகை உயிர்வதைப்புகள் செய்வதில் அசைவம் உண்பவர்களும் மற்றவர்களுடன் சேர்த்தி தான். இதை தவிர, மீன்கள், ஆடுகள், கோழி, சேவல்கள் மற்றும் அவற்றின் குஞ்சுகளை உண்பது, அந்த உயிர்கள் அழிய, அவற்றை உண்பவர்களும் மறைமுகமாக காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா?

அன்புக்கு இலக்கணமாய் பலராலும் மெச்சப்படும் வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகள் உரைத்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது முக்கியமாக, பிற உயிர்களை துன்புறுத்தாமலும் அவைகளை சித்திரவதை செய்யாமலும் இருக்கவேண்டும், என்பதை நாம் நன்கு அறிவோம். சில வகை புலிகளையும்
சிங்கங்களையும் மற்றும் வேறு சில மறைந்து வரும் விலங்கு வகைகளையும் பாதுகாக்கவேண்டும் என்று அரசாங்கத்துடன் சேர்ந்து நாமும் செயல்படும்போது ஏன், மற்ற பிற உயிர்களையும், அவற்றை
பாதுகாக்காவிட்டாலும், அவைகள் செயற்கையாக உயிர் இழக்க, நாம் எதற்கு காரணமாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் நம்முள் எழுவதும் இயற்கைதானே?

SPCA (Society for the prevention of cruelty to animals), என்கிற, மிருகங்களை வதைப்பதை எதிர்க்கும் உலகளாவிய கழகம் ஒன்று இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதன் கிளைகள் உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ளது. இந்த கழகத்தின் சில நோக்கங்கள் கீழ்வருமாறு:
1. விலங்குகளுக்கு தாகம் மற்றும் பசியின்றி இருக்கும் சுதந்திரம்
2. விலங்குகள் வலி, காயம் மற்றும் நோய்களினால் அவதியுறாமல் இருக்கும் சுதந்திரம்
3. அவைகள் பேராபத்து மற்றும் அபாயங்களிலிருந்து தப்பிக்க சுதந்திரம்

அசைவம் உண்ணுகையில் மேலே குறிப்பிட்டுள்ள மனிதாபிமான அறிவுரைகள் புறக்கணிக்கப்படுகிறது எனும் உண்மையை நாம் மறுக்கலாகுமா அல்லது மறக்கலாகுமா? நானும் உங்களைப்போன்ற, ஒரு மனிதாபிமானம் கொண்ட மனிதன் என்பதானலேயே, இங்கே மனம் திறந்து என் கருத்துக்களை வைத்தேன். மேற்கத்திய நாடுகளிலும், குளிர் மற்றும் கடும் குளிர் பிரதேசங்களிலும் வாழ்பவர்கள், அங்குள்ளதட்ப வெப்ப நிலை மற்றும் கடுமையான குளிர் தீவிரத்தின் காரணமாக, அசைவ உணவையே உண்டாக வேண்டும் என்று ஒரு விவாதம் இருப்பின், அந்த விவாதத்திற்கு, தற்போது, நான்
தயாராக இல்லை. ஒரு கூற்றை மற்றும் உங்கள் முன் பணிவுடன் வைக்கிறேன். "மனித உயிர்களை காக்கவேண்டிய கடமை கொண்ட அரசாங்கமே, நீதி மன்றங்கள் மூலம், சில நேரங்களில், சட்டம், ஒழுங்கு முறை, சமுதாய பாதுகாப்பு மற்றும் சமுதாய நலம் கருதி, இத்தகைய சட்டத்திற்கு
எதிர்மாறாக செயல்படும் சில சமூக விரோதிகளுக்கு தூக்கு தண்டனை கூட வழங்குகிறது. வேறு வழியே இல்லை எனும்போது, சில விலக்குகளும் விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கோட்பாடு மனித சமுதாயத்தில் அனைவருக்கும் பொருந்தும்.

என் மனதில், சரி என்று பட்டவைகளை, இந்த கட்டுரையில் நான் பகிர்ந்துகொண்டேன். இந்த சிறிய கட்டுரை மூலமாக நான் அசைவம் சாப்பிடுபவர்களை விமரிசிக்கவில்லை, அவர்கள் மீது புகார் ஒன்றும்
சொல்லவில்லை. நான் கூறியதில் சிறிதளவேனும் மெய்ப்பொருள் இருப்பின், எவருக்கு என் கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறதோ, எவருக்கு சாத்தியப்படுமோ, அவர்கள் இக்கட்டுரையின் உட்கருத்தை உள்வாங்கி அவர்களின் மனம் சொன்னபடி வாழ்ந்திடில் அதுவே போதும்.

பொதுவில், மனிதன் படைப்புக்களை உருவாக்குகிறான் அழிப்பதில்லையே
மற்ற உயிர்களும் வாழத்தான் பிறக்கிறது,மனிதனால் சாவதற்கில்லையே!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Jul-22, 4:16 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 66

மேலே